11 November 2022
by
Vijayakumaran
பிறப்பால் அரசராகும் முறையால் இந்த நாட்டை அரசர்கள் ஆளும் வரை மனுஸ்மிருதி எனும் மனுநீதியே நீதியாக இருந்தது. பிறப்பால் அரசராவது போல், பிறப்பால் அவரவர் செய்யும் தொழிலையே அனைவரும் செய்ய வேண்டும் என்பது அன்றைய நீதி.
ஜனநாயக முறைப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் தான் மக்களை ஆளவேண்டும் என்ற ஜனநாயகம் மலர்ந்தஉடன், அரசர் ஆட்சி முறையோடு மனு நீதியும் செத்துவிட்டது. ஜனநாயகத்துக்கு எதிரான அரசர் ஆட்சி காலத்தில் இருந்த மனுநீதியை மீண்டும் பின்பற்ற வேண்டும் என்று ஜனநாயக முறையால் நியமிக்கப்பட்ட தமிழக ஆளுநர் ஆர். என். ரவி பேசியிருப்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது.
அனைவரும் சமம் என்ற ஒற்றை தூணில் தான் ஜனநாயகம் என்ற மிகப்பெரிய சமுதாய கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. எனவே அனைவரும் சமம் என்ற தூணை சாதி, மத, வேற்றுமையை பயன் படுத்தி மக்களிடையே வெறுப்பை ஏற்படுத்தி சேதப்படுத்தினால் ஒட்டுமொத்த ஜனநாயக கட்டமைப்பும் உடைந்து நொறுங்கி விடும்.
அரசர்கள் ஆண்ட காலத்தில் மனுநீதி, நீதியாக இருந்தது போல். இன்று மக்களாட்சி முறையில் சமூகநீதியே நீதியாக இருக்கின்றது.
சமூக நீதி என்பது அனைத்து சாதியினருக்கும் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் அரசியல் அதிகாரத்தில் சம பங்களிப்பு இருக்க வேண்டும் என்பதுதான், இதில் உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி என்ற பேதம் இருக்கக்கூடாது என்பதே சமூக நீதி. அதன்படி அனைத்து சாதியினருக்கும் இடஒதுக்கீடு கொடுப்பதே சமூகநீதி.
பலரின் கேள்வி சாதி ஒழியவேண்டும் என்று சொல்லிக்கொண்டே ஏன் சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு கேட்கிறீர்கள், பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு இருப்பதே சரி என்பது தான் பலரின் கருத்து.நானும் இட ஒதுக்கீடு பற்றிய முழுமையான புரிதல் இல்லாத போது பொருளாதாரம் சார்ந்த இட ஒதுக்கீடே சரி என்று எண்ணினேன்.
சாதி என்பது குடும்ப அமைப்பின் கூட்டு, சாதி என்பது உறவுகளின் கூட்டமைப்பு, சாதியை ஒழித்தால் குடும்ப வாழ்க்கை முறையே ஒழிந்துவிடும்.சாதி நம்முடைய விலாசமாக இருப்பதில் தவறில்லை, சாதியை ஒழிக்க வேண்டும் என்று எந்த சட்டமும் சொல்லவில்லை. சாதியால் மற்றவர்களை இழிவு படுத்துவது தான் குற்றம் என்று சட்டம் சொல்கின்றது. சாதி கொடுமை ஒழிய வேண்டும் என்பதற்கும், சாதி ஒழிய வேண்டும் என்பதற்குமான வித்தியாசம் தெரியாமல் மக்களை இங்கு அரசியல்வாதிகளும், சுயநலவாதிகளும் மூளை சலவை செய்யப்பட்டு உள்ளார்கள். எனவே சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு கொடுப்பது சட்டத்திற்கு எதிரானது அல்ல.
திருமணம் சாதி என்ற உறவுக்குள்ளேயே நடப்பதால், ஒருவர் பெற்ற செல்வம் அவருடைய சாதிக்குள்ளேயே இருப்பதால், சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு இருந்தால் மட்டுமே பொருளாதார ஏற்றத்தாழ்வை குறைத்து சமத்துவத்தை ஏற்படுத்த முடியும். சாதிவாரி இட ஒதுக்கீடு என்பது பாத்தி கட்டி விவசாயம் செய்வது போன்றது, அனைத்து பாதிக்கும் சரிசமமான நீர் சென்றடைய வேண்டும் என்பதே நோக்கம்.
நம் நாடு சுதந்திரம் பெற்ற பிறகு அரசியல் அமைப்பு சட்டப்படி சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு கொடுக்கும் பொழுது SC,ST யை சார்ந்தவரகள் கல்வியிலும், பொருளாதாரத்திலும் அனைவரும் ஒரே நிலையில்தான் இருந்தார்கள், இதே நிலைதான் சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு பெற்ற அனைத்து சாதியினருக்கும். பெரிய அளவில் எந்த ஏற்றத் தாழ்வும் இல்லாமல் அனைவரும் கல்வியிலும், பொருளாதாரத்திலும் ஒரே நிலையில்தான் இருந்தார்கள்.எனவே அந்த காலத்தில் பொருளாதார உள் இட ஒதுக்கீடு தேவைப்படவில்லை.
சாதிய இட ஒதுக்கீட்டின் காரணமாக கடந்த 70 ஆண்டுகளாக பலர் IAS,IPS,Dr என மிக உயர்ந்த நிலைக்கு சென்ற நிலையில் தற்போது சாதிக்குள்ளேயே மிகப்பெரிய பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டுள்ளது. இட ஒதுக்கீட்டால் முதலில் பயன்பெற்றவர்களின் வாரிசுகளே தொடர்ந்து இட ஒதுக்கீட்டின் பலனை அனுபவிக்கிறார்கள். இதனால் சேரியிலும்,கிராமத்திலும் வாழும் பெரும்பாலானவர்களுக்கு சாதிவாரி இட ஒதுக்கீட்டால் எந்த பயனும் இல்லை என்பதே இன்றைய யதார்த்தம்.
அரசர் ஆட்சி முறையில் இருந்த மனு நீதியை இன்றைய ஜனநாயக நாட்டில் பின்பற்ற வேண்டும் என்று தமிழக ஆளுநர் சொல்வதுபோல், 70 ஆண்டுகளுக்கு முன் கொண்டு வந்த சாதி அடிப்படையில்ஆன இட ஒதுக்கீட்டை காலத்திற்கு ஏற்ப மாற்றம் செய்யாமல் தொடர்ந்து பழைய முறையையே கடைபிடிப்பது சமூக அநீதி.
ஒன்றிய அரசு பொது பிரிவில் உள்ள ஏழை உயர்சாதியினருக்கு 10% இட ஒதுக்கீடு கொடுத்தது போல், இடஒதுக்கீட்டை பெற்றுள்ள அனைத்து பிரிவினருக்கும் 20 சதவீதம் உள் ஒதுக்கீடு அதே வகுப்பை சார்ந்த ஏழைகளுக்கு பொருளாதார அடிப்படையில் உள்இடஒதுக்கீடு கொடுத்தால் மட்டுமே சமூக நீதி அனைவருக்கும் கிடைக்கும்.
ஒன்றிய அரசுக்கு உயர் சாதி ஏழைகள் மீது உள்ள கரிசனம் SC,ST,OBC, பிரிவை சார்ந்த ஏழைகள் மேல் இல்லாதது RSS கொள்கையின் வெளிப்பாடே.
ஒன்றிய அரசு SC,ST,OBC பிரிவை சார்ந்த ஏழைகளுக்கு பொருளாதார அடிப்படையில் உள் ஒதுக்கீடு செய்யாமல் பொதுபிரிவில் உள்ள சாதியினருக்கு மட்டும் பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு செய்து இருக்கும் பாரபட்சமான நடவடிக்கையை உச்ச நீதிமன்றம் கண்டித்து அனைத்து சாதியைச் சார்ந்த ஏழைகளுக்கும் அவரவர் வகுப்பில் உள் ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்காமல் உச்ச நீதிமன்றமும் பாரபட்சமாக நடந்துகொண்டது நீதித்துறையின் மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கையை கேள்விக்குறியாகிவிட்டது.
தமிழ்நாட்டை சேர்ந்த எதிர்க்கட்சிகள் மொழி அரசியல் செய்ததுபோல், இட ஒதுக்கீட்டிலும் அரசியல் செய்கின்றார்கள். ஹிந்தியை எதிர்க்காமல், ஹிந்திக்கு சமமாக அனைத்து மாநில மொழிகளுக்கும் சம உரிமை வேண்டும் என்று போராடாமல் ஹிந்தியை எதிர்த்து அரசியல் செய்ததுபோல், பொது பிரிவில் உள்ள சாதியினருக்கு பொருளாதார அடிப்படையில் உள் இட ஒதுக்கீடு கொடுத்தது போல் SC,ST,OBC பிரிவுகளுக்கும் பொருளாதார அடிப்படையில் உள் இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்று கேட்காமல் எதிர்பதும் என்பார்வையில் அரசியல் சுயநலம்தான்.
25 ஆண்டுகளுக்கு முன் பொருளாதாரத்தால் பின்தங்கியவர்களுக்கு அனைத்து பிரிவிலும் உள்ஒதுக்கீடு கொடுத்து இருந்தால் இன்று பல லட்சம் ஏழைகள் பொருளாதாரத்தில் உயர்ந்து இருப்பார்கள். பொருளாதார ஒதுக்கீடு காலம் தாழ்ந்த செயலாக இருந்தாலும் ஒன்றிய அரசின் EWS நல்லதொரு ஆரம்பம்.
பெரிய மீன் சிறிய மீனை சாப்பிடுவது போல், செல்வந்தர்கள் ஏழைகளின் உழைப்பைச் அனுபவிப்பதையும் தாண்டி சமூக நீதி என்ற பெயரில் இட ஒதுக்கீட்டின் மூலம் தன் சாதியை சார்ந்தவரின் இட ஒதுகீட்டு உரிமையையும் குற்ற உணர்ச்சி இல்லாமல் அனுபவிக்கின்றார்கள். இட ஒதுக்கீட்டுக்கு மட்டும் இவரும் என் சாதி தான் என்று ஏழையையும் கணக்கு காண்பித்து இட ஒதுக்கீடு பெற்றுவிட்டு, கடந்த 70 ஆண்டுகளாக இட ஒதுக்கீட்டால் வளர்ந்த, மேல்தட்டில் உள்ளவர்களே தொடர்ந்து ஒட்டுமொத்த பிரிவினருக்குமான இட ஒதுக்கீடு உரிமையை அனுபவிக்கின்றார்கள்.
சாதி சங்கத் தலைவருக்காகவும், அரசியல் கட்சித் தலைவர்களுக்காகவும் இரவு, பகல் பார்க்காமல் நடுரோட்டில் தலைவரின் செல்வாக்கை உயர்த்த காத்துக்கிடக்கும் ஏழைகளைப் பற்றி ஒரு கணம் இந்த தலைவர்கள் சிந்தித்து இருந்தால் உள்ஒதுக்கீட்டின் மூலம் ஏழைகளின் வாழ்க்கை தரம் பல ஆண்டுகளுக்கு முன்பே உயர்ந்திருக்கும். சாதி சங்கத்தின் தலைவர்கள் அனைவரும் செல்வந்தர்களாக இருப்பதால் ஏழையின் உழைப்பையும், உரிமையையும் உறிஞ்சுவதில் தான் தலைவர்களின் கவனம் இருக்கின்றது.
ஒரு சாதிக்குள்ளேயே பொருளாதார ஏற்றத்தாழ்வு அதிகமுள்ள இன்றைய சூழலில் சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டில் பொருளாதார அடிப்படையில் ஏழைகளுக்கு உள்ஒதுக்கீடு இருந்தால் மட்டுமே அது உண்மையான சமூக நீதியாக இருக்கும்.
in Social