16 June 2023
by
Vijayakumaran
உன் சாதி புத்தி என்று திருமாவளவன் பேசியதும், மேல்பாதி திரெளபதி அம்மன் கோயிலில் தனக்கு உரிமை வேண்டும் என்று தலித் மக்கள் கேட்பதும் சரியா என்பதை ஆய்வு செய்யவே இந்த கட்டுரை.
சாதியைப் பற்றிய விழிப்புணர்வு முதலில் மக்களிடம் வரவேண்டும் சாதி ஒழிய வேண்டும், சாதியை ஒழிக்க வேண்டும் என்று நம்முடைய அரசியல் அமைப்பு சட்டத்தில் இல்லை. தமிழ்நாட்டில் தான் சாதி ஒழிய வேண்டும் என்பதை நியாயப்படுத்தி திராவிட கட்சிகளால் அதிக அளவில் பேசப்பட்டது, அதற்கு காரணம் சமூக நீதிக்கு எதிராக தேர்தல் அரசியலில் சிறுபான்மை சாதியினர் செய்த சூழ்ச்சி!
சமூக நீதியின் அடிப்படையில் தமிழ்நாட்டை பெரும்பான்மை சமுதாயமான வன்னியர், தேவர், தலித் போன்ற பெரும்பான்மை சமூக மக்கள் ஆள வேண்டிய தமிழ்நாட்டை சாதி ஒழிய வேண்டும் என்ற சூழ்ச்சியை பயன்படுத்தி சிறுபான்மை சமுதாயத்தை சேர்ந்தவர்கள் ஆண்டு கொண்டு உள்ளார்கள்.
குடும்பங்களின் கூட்டமைப்பு தான் சாதி, சாதியை ஒழித்தால் குடும்ப அமைப்பு சிதைந்துவிடும். சாதி என்பது நாகரிக சமுதாயத்தின் வெளிப்பாடு, ஒருவர் தன் சாதியை சொல்வது அவருடைய குடும்பத்தின் பெயரை சொல்வதற்கு சமம். நான் வன்னியர் சமுதாயத்தில் பிறந்தவன் என்று சொல்வதால் யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை, ஆனால் சாதியால் தாழ்ந்த சாதியினரை நான் அடிமைப்படுத்துவதும், உயர்ந்த சாதியினர் என்னை அடிமைப்படுத்துவதும் தான் தவறு.
நம்முடைய பெற்றோர்களைப் போல், நம்முடைய தாய்மொழியை போல், நாம் பிறந்த ஊரைப் போல், சாதியும் நம்முடைய அடையாளம் நம்முடைய அடையாளத்தை அழித்துக் கொள்ளாமல் நாடார் சமுதாயத்தை போல் உயர வேண்டும். அதற்கு தான் சாதி அமைப்புகள் உதவ வேண்டும், பாடுபட வேண்டும்.
ஒரு மனிதன் பிறக்கும்போதே நான் என்ற உணர்வோடு பிறக்கின்றான், அந்த உணர்வின் வெளிப்பாடுதான் குடும்ப பற்று, சாதிப்பற்று,மதப்பற்று,மொழிப்பற்று, மாநில பற்று, நாட்டுப் பற்று, பற்று இல்லாமல் எந்த ஒரு மனிதனாலும் இந்த உலகில் வாழவே முடியாது. இதில் சாதிப்பற்று மட்டும் ஒழிய வேண்டும் என்பது ஓநாயின் சூழ்ச்சியை போன்றது.
சாதி சமத்துவத்துக்கும், தனிமனித உரிமைக்கும் வேறுபாடு உண்டு.
—சாதி சமத்துவம் என்பது —
1) சாதியின் பெயரால் யாரையும் அடிமைப்படுத்த கூடாது.
2)சாதியின் பெயரால் ஒருவரின் உரிமையை பறிக்கக்கூடாது.
3)சாதியின் பெயரால் யாரையும் அவமதிக்கக் கூடாது.
இதை எந்த சாதியினர் மீறினாலும் அது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. எனவே திருமாவளவன் வன்னியர் சமுதாயத்தினரை பார்த்து இது உன் சாதி புத்தி என்று பேசியது சாதியால் ஒருவரை அவமதித்ததாக தான் பொருள்.
—-தனிமனித உரிமை என்பது —
1)தனிமனித உரிமை தன் உடமையில் உள்ளது இதில் யாரும் சாதி சமத்துவ உரிமை கோரமுடியாது.
2)முன்னோர்களின் உடமைகளில் வாரிசுகளுக்கு தான் உரிமை உள்ளது, இதில் யாரும் சாதி சமத்துவ உரிமை கோரமுடியாது.
3)சாதி சமத்துவம் என்ற பெயரில் யாரும் யாருடைய உடமையின் மீதும் அல்லது உறவுகளின் மீதும் உள்ள உரிமையை பறிக்க முடியாது.
எனவே மேல்பதி திரௌபதி அம்மன் கோயிலில் சாதி சமத்துவத்தின் அடிப்படையில் தலித் மக்களுக்கும் உரிமை இருக்கிறதா !அல்லது முன்னோர்களின் உடைமையின் மீது உள்ள உரிமையின்படி வன்னிய சமுதாயத்தை சேர்ந்த குடும்பத்தினர்களுக்கு உரிமை உள்ளதா என்பதை அரசு ஆய்வு செய்து சரியான முடிவை எடுப்பதே சமூக நல்லிணக்கத்திற்கு நல்லது.
குலதெய்வ வழிபாட்டு கோயில்களில் ஒரே சாதியாக இருந்தாலும் குறிப்பிட்ட குடும்பத்தை தவிர மற்ற குடும்பத்திற்கு உரிமை இல்லை என்ற நிலையில் சாதி சமத்துவத்தின் அடிப்படையில் மாற்று சாதியினர் உரிமை கேட்பது தவறு. அரசர்கள் கட்டிய கோயில்களில் சாதி சமத்துவத்தின் அடிப்படையில் உரிமை கேட்பது தவறு இல்லை.
சாதி சமத்துவத்தின் அடிப்படையில் வன்னியர்கள் பராமரிக்கும் கோயில்களில் தலித்துகள் உரிமை கோருவது போல், மத சமத்துவத்தின் அடிப்படையில் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்களின் வழிபாட்டுத்தளங்களில் இந்துக்கள் உரிமை கோரினால் அது சரியாக இருக்குமா என்று சிந்திக்க வேண்டும் !
அனைவரும் சமம் என்பதற்கும் ஒரு எல்லை உண்டு அதை அரசியல் அமைப்பு சட்டம் தெளிவாக வரையறுத்துள்ளது.
திரைப்படத்தில் நடிகர் வடிவேலு மலை உச்சியில் சாமி தெரியுது என்று சொன்னவுடன், குடும்பமானம் போய் விடக்கூடாது என்று எண்ணி மற்றவர்களும் ஆமா சாமி தெரியுது என்று சொன்னது போல், அரசியலில் சமூக நீதியை ஒழிக்க வேண்டும் என்பதற்காக சாதி ஒழிய வேண்டும் என்று சிறுபான்மையினர் மக்களிடம் மூளை சலவை செய்தபோது இந்த கருத்துக்கு நாம் உடன்படவில்லை என்றால் நாம் பகுத்தறிவு இல்லாதவன் என்று சொல்லிவிடுவார்கள் என்று எண்ணி படித்த பலரும் சாதி ஒழிய வேண்டும் என்று கூறினார்கள் !கூறுகின்றார்கள் !என்னுடைய ஆய்வின்படி அனுபவம் இல்லாமல் படிப்பால் அறிவை பெற முடியாது என்பதற்கு படித்த இவர்களே சான்று.
சட்ட மேதை டாக்டர் அம்பேத்கர் உருவாக்கிய இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் சாதி ஒழிய வேண்டும் என்று இல்லை, சாதி வேற்றுமை, சாதி கொடுமை தான் ஒழிய வேண்டும் என்று தெளிவாக உள்ளது. அதனால்தான் சாதி சங்கங்கள் சட்டத்துக்கு உட்பட்டு பதிவு செய்யப்படுகின்றன.
சட்டத்திற்கு எதிராக சாதி ஒழிய வேண்டும் என்ற சூழ்ச்சி பிரச்சாரத்தால் சமூக நீதிக்கு எதிராக அரசியல் லாபம் அடைந்த சிறுபான்மையினர் யார் யார் என்பது அனைவருக்கும் தெரியும்.
மதக்கலவரத்தின் மூலம் ஒரு கட்சி வளர்ததற்கும் ஒரு கட்சி வீழ்ததற்கும் பிஜேபி, காங்கிரஸ் சான்று, அதுபோல் தமிழ்நாட்டில் சாதி கலவரம் ஏற்பட்டால் நிச்சயம் ADMK, DMK அழிந்து விடும். எனவே வரும் தேர்தலில் ADMK,DMK எந்த சாதி கட்சிகளுடனும் கூட்டணி இல்லாமல் தேர்தலை சந்திக்க வேண்டும்.
சாதி சார்ந்த அரசியல் கட்சிகள் வளர்வது சமுதாய நல்லிணக்கத்திற்கு கேடு. எனவே வரும் தேர்தலில் சாதி கட்சிகளுடன் கூட்டணி வைத்துள்ள கட்சிகளை நிராகரிப்போம்.
மதம் சார்ந்த அரசியல் கட்சிகள் நாட்டுக்கு கேடு என்றால், சாதி சார்ந்த அரசியல் கட்சிகள் மாநிலத்துக்கு கேடு. எனவே இதை உணர்ந்து அனைத்து ஊடகங்களும், அனைத்து சாதியினரும் செயல்பட வேண்டும்.
in Social