14 August 2023
by
Vijayakumaran
நம்முடைய உரிமையை போராடி பெற முடியும், ஆனால் ஒருவருடைய அன்பையும், நம்பிக்கையையும் போராட்டத்தால் பெற முடியாது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
மனித குல ஒற்றுமைக்கு நம்பிக்கையும், அன்புமே முதன்மையானது.
என்னை நம்பி தான் ஆக வேண்டும் என்று கெஞ்சுவதாலோ அல்லது மிரட்டுவதாலோ யாரும் யாரையும் நம்ப மாட்டார்கள், நம்பிக்கை என்பது ஒருவர் மீது தானாக வரவேண்டும். நாம் ஒருவரை நம்ப வேண்டும் என்று நினைத்தாலும் அவருடைய இறந்த கால செயல்கள் நமக்கு நம்பிக்கை கொடுக்காவிட்டால் நம்மால் நம்ப முடியாது. ஒருவர் மீது நமக்கு ஏற்படும் நம்பிக்கை என்பது நமது கட்டுப்பாட்டில் இல்லாத ஒன்று, நம் கட்டுப்பாட்டில் இல்லாத ஒன்றை நம்மை கட்டாயப்படுத்துவததால் யாரும் பெற முடியாது.
என்மீது அன்பு வைக்க வேண்டும் என்று கெஞ்சுவதாலோ அல்லது மிரட்டுவதாலோ யாரும் யார் மீதும் அன்பு வைக்க மாட்டார்கள். தெருநாயாக இருந்தாலும் அதனிடம் நாம் அன்பு வைத்தால்தான் அது நம்மீது அன்பு வைக்கும், அன்பை கொடுத்தால் மட்டுமே மீண்டும் பெற முடியும், மற்றவர்கள் மீது நமக்கு அன்பு இல்லை என்றால் நம் மீதும் யாருக்கும் அன்பு இருக்காது.
நான் யார் என்பதை தெரிவித்தால்தான் என் மீது வாசகர்களுக்கு நம்பிக்கை ஏற்படும், நான் வன்னியர் சமுதாயத்தில் பிறந்தவன் தொழிலாளியாக என் வாழ்க்கையை தொடங்கிய நான் நெய்வேலையில் நம்பர் ஒன் எலக்ட்ரிகல் காண்ட்ராக்டராக உயர்வதற்கு என்னை சுற்றி வாழ்ந்த மாற்று சமுதாயத்தை சேர்ந்த அதிகாரிகளும், காண்ட்ராக்டர்களுமே காரணம்.
நான் வன்னியர் என்பதால் ஆரம்ப காலத்தில்( 1985). என்னிடம் பழக மாற்று சமுதாயத்தை சேர்ந்த அதிகாரிகளும், கான்ட்ராக்டர்களும் தயங்கினர், காரணம் என் சாதியை பற்றிய அபிப்பிராயமே. காலப்போக்கில் என்னுடைய நடவடிக்கையை பார்த்து என் மீது நம்பிக்கையும் அன்பும் வைத்தார்கள். நான் இன்று உயர்ந்த நிலையில் இருப்பதற்கு காரணம் மாற்று சாதியை சார்ந்த, மதத்தை சார்ந்த நண்பர்கள் என் மீது வைத்திருக்கும் அன்பும், நம்பிக்கையுமே காரணம். இந்த அனுபவத்தால் நான் பெற்ற அறிவே இந்த கட்டுரை எழுதுவதற்கு காரணம்.
சாதி என்பது குடும்பங்களின் குடும்பம், குடும்ப உறவு என்பது நாகரிகத்தின் வளர்ச்சி, குடும்ப வாழ்க்கை முறையே உலகில் மேன்மையான நாகரீகம்.
சாதி ஒழிய வேண்டும் என்று இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் இல்லை. சாதி தீண்டாமையும், சாதி வன்கொடுமையும் தான் ஒழிய வேண்டும் என்று இந்திய அரசியலமைப்பு சட்டம் சொல்கின்றது. எனவே சாதிகளுக்கு இடையில் சமத்துவத்தையும், நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த வேண்டுமே தவிர சாதி ஒழிய வேண்டும் என்று சொல்வது சமூக நீதிக்கு எதிரானது.
சமூக நீதிக்கு எதிராக சிறுபான்மையினர் தமிழ்நாட்டை ஆள வேண்டும் என்பதற்காகவே சாதி ஒழிய வேண்டும் என்று பிரச்சாரத்தை செய்து வருகின்றார்கள். இந்த சூழ்ச்சி தெரியாமல் தன்னை யாரும் பிற்போக்குவாதி என்று நினைத்து விடக்கூடாது என்று அனைவரும் சாதி ஒழிய வேண்டும் என்று நடிக்கின்றார்கள்.
எலியை ஒழிக்க வீட்டை கொளுத்தியவர்கள் இங்கு யாராவது உண்டா?
சாதி சமுத்துவத்திற்காக சாதியை ஒழிக்க வேண்டும் என்பது சரியா? சரி என்றால் மத சமத்துவத்திற்காக மதம் ஒழிய வேண்டும் என்று யாரும் ஏன் சொல்வதில்லை?
சாதி என்பது குடும்பத்தின் முகவரி, சாதிப் பெயரைச் சொன்னாலே சிலருக்கு பிடிக்கவில்லை என்பது அவர்களுக்குள் இருக்கும் வன்மம்,
சாதியின் பெயரில் திரைப்படங்கள் வருவது தவறு இல்லை, ஆனால் சாதியின் பெயரால் இரு சமூகங்களுக்கு இடையே வெறுப்பை ஏற்படுத்துவது தான் தவறு.
சாதி சமத்துவத்தை ஏற்படுத்த இனி போராடி பெறுவதற்கு எதுவும் இல்லை நாம் எப்படி நடந்து கொள்கின்றோமோ அதற்கு தகுந்தார் போல் தான் எதிர்வினை இருக்கும், எதற்கு எடுத்தாலும் சாதிதான் காரணம் என்று சாதி வெறுப்பை தூண்டினால் ! மக்கள் சாதி பார்த்து தான் வாக்களிக்க வேண்டும் என்று நிர்பந்திக்கப்படுவார்கள் !இதனால் முதலில் அழியப் போவது அதிமுகவும் திமுகவும் தான்.
தேவர் மகன், சின்ன கவுண்டர் திரைப்படம் வெளிவந்த போது யாருக்கும் தவறாக தெரியவில்லை, இன்று தவறாக தெரிகின்றது என்றால் மக்களிடம் அந்த அளவிற்கு சாதி வெறுப்பு விதைக்கப்பட்டுள்ளது என்றே பொருள்.
கடந்த மாதம் நண்பர் ஒருவரிடம் வேலைக்கு ஒருவரை சிபாரிசு செய்தேன். அவர் என்னிடம் கேட்ட முதல் கேள்வி, அவர் எந்த சாதி என்றுதான். ஏன் சாதியை கேட்கிறீர்கள் என்பதற்கு அவர் சொன்ன பதில், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவராக இருந்தால் ஏதாவது காரணத்திற்காக வேலையில் இருந்து நிறுத்தினால் சாதி பிரச்சனையாக மாற்றி விடுவார்கள், காவல் துறையும் அவர்களுக்கு தான் சாதகமாக இருப்பார்கள் என்று அவருடைய அனுபவத்தை சொன்னார்.
தலித் சாதியினர் மாற்று சாதியினரால் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்பது 100% உண்மை.
இதற்கு யார் பொறுப்பேற்ப்பது ?
இதற்கு யார் காரணம்?
நம் அணுகுமுறை மாறினால் தான் நம் மீதான மற்றவர்களுடைய அணுகுமுறை மாறும்.
தலித் மக்களின் சட்டப் பாதுகாப்பை தவறாக பயன்படுத்தியதால் பல மாற்று சாதியினர் பாதிக்கப்பட்டு இருந்தாலும், அதை தவறாக பயன்படுத்தியதால் தலித் சமுதாயமே பாதிக்கப்பட்டிருக்கின்றது.
திருமாவளவன் சொன்னது போல் ஒவ்வொரு சாதிக்கும் ஒரு புத்தி உண்டு, இந்த சமுதாயம் ஒவ்வொரு சாதி மீதும் ஒரு அபிப்பிராயத்தை வைத்திருக்கின்றது, இதை தவறு என்று சொல்ல முடியாது.
தாழ்த்தப்பட்ட சமுதாயத்தின் மீது மக்களின் அபிப்ராயம் மாற வேண்டும் என்றால், தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களின் நடவடிக்கையால் மட்டுமே மாற்ற முடியும்.
மாற்று சமுதாயத்தினரிடம் நம்பிக்கை பெரும் வகையிலும், சாதி வெறுப்பில்லாமலும், அன்பு பாராட்டினால் மட்டுமே சமத்துவம் சாத்தியம்.
in Social