Skip to Content
Vijayakumaran
  • Home
  • Blog
  • Books
  • Behind the Writing
Vijayakumaran
      • Home
      • Blog
      • Books
      • Behind the Writing

    ஒருவரின் சாதியை கேட்டு தெரிந்து கொள்வது சரியா? தவறா?

  • All Blogs
  • Social
  • ஒருவரின் சாதியை கேட்டு தெரிந்து கொள்வது சரியா? தவறா?
  • 15 February 2026 by
    Vijayakumaran
    பட்டிமன்ற பேச்சாளர் ராஜா அவர்கள் ஒரு பெண்ணிடம் அவருடைய ஜாதியை கேட்டது பற்றி பலரும் பல கருத்துக்களை இணையத்தில் வெளிப்படுத்தி வருகின்றனர், இதை பார்க்கும் போது வேதனையாக இருக்கின்றது, யாரும் ஆறாவது அறிவின் ஆளுமையில் செயல்படவில்லை அனைவரும் சாதி உணர்வின் ஆளுமையில் தான் தன்னுடைய கருத்தை வெளிப்படுத்துகின்றார்கள். சாதியை கேட்டது சரி என்பதும், தவறு என்பதும் பகுத்தறிவின் வெளிப்பாடு, தனக்கு எது நன்மை என்று பகுத்தறிந்து செயல்படுவது தான் பகுத்தறிவு, இந்த பகுத்தறிவை ஆறாவது அறிவாக நினைத்து வாழ்வதால் தான் மனிதன் மிருகமாக வாழ்ந்து கொண்டு இருக்கின்றான். 

    என்னுடைய ஆய்வுக்கட்டுரையை தொடர்ந்து படிப்பவர்களுக்கு தெரியும் நான் எழுதியதை புரிந்து கொள்ள பலமுறை படிக்க வேண்டும் என்பது, காரணம் நான் ஆய்வு கட்டுரைகள் எழுதவேண்டும் என்று பேனாவை திறந்து விட்டால் நான் என்ற என்னுடைய அனைத்து அடையாளத்தில் இருந்தும் விடுபட்டு காற்றில் மிதப்பது போல் எந்த ஒரு ஈர்ப்பும் இல்லாமல் தான் கட்டுரைகளை எழுதுவேன், அதனால்தான் நான் என்ற உணர்வோடு படிப்பவர்களால் எளிதில் புரிந்து கொள்ள முடிவதில்லை. 

    நான் எழுதுவது வெறும் எழுத்தல்ல அது ஒரு பயணம் உங்களை வேறு ஒரு அறிவு உலகத்திற்கு அழைக்கின்றேன் என்னோடு பயணிக்க உங்களுடைய அடையாளம் அனைத்தையும் விட்டுவிட்டு நான் என்ற உணர்வு இல்லாமல் வாருங்கள் புதிய அறிவு உலகத்தை காண்பிக்கின்றேன். 

    பகுத்தறிவு ஆறாவது அறிவு அல்ல, ஐந்து புலன்களால் பெரும் அனுபவமே ஐந்தறிவு, மூளையின் செயல்திறன் அறிவு அல்ல. எனவே மூளையின் செயல்பாட்டால் எது நன்மை எது தீமை என்று பகுத்து அறிவது ஆறாவது அறிவு அல்ல. மருத்துவம், பொறியியல், கணிதம் அனைத்தும் ஐந்து அறிவுக்கு உட்பட்டதே. அதனால்தான் ஏவுகணையை செய்யக்கூடிய அளவிற்கு அறிவு உள்ள மனிதனால் யுத்தம் இல்லாமல் வாழ தெரியவில்லை. 

    நம்முடைய அடையாளமான சாதி, மதம், கல்வி, செல்வம், பதவி, வலிமை, அழகு போன்ற அனைத்திலிருந்தும் விடுபட்டு நான் என்ற உணர்வே இல்லாமல் இந்த உலகை பார்க்கும்போது நாம் பெரும் அறிவே ஆறாவது அறிவு. 

    நான் என்ற உணர்விலிருந்து விடுபடுவது எளிதான செயல் அல்ல, நான் என்ற உணர்வு எல்லா உயிர்களுக்கும் பிறக்கும் போதே உயிரோடு சேர்ந்து பிறக்கும் உணர்வு, நான் என்ற உணர்வு தான் எல்லா உயிர்களையும் வாழ வைத்துக் கொண்டுள்ளது, எனவே நான் என்ற உணர்வில் இருந்து விடுபடுவது என்பது உயிருடன் இருக்கும்போதே உயிரிள்ளாமல் வாழ்வதற்கு சமம். 

     நான் என்ற உணர்வில் இருந்து விடுபட ஆறாவது அறிவு வேண்டும், ஆறாவது அறிவை பெற நான் என்ற உணர்விலிருந்து விடுபட வேண்டும். ஆறாவது அறிவைப் பெற குறுக்கு வழி ஒன்று உண்டு அதுதான் நம்பிக்கை, நம்பிக்கையை அறிவாக நினைத்துக் கொள்வதும் அறிவின் பலனை கொடுக்கும். 

    ஆறாவது அறிவு மூலமும் ஞானத்தை அடையலாம், ஆன்மீகம் மூலமும் ஞானத்தை அடையலாம், ஆன்மீகம் மூலம் ஞானத்தை அடைவது என்பது நம் கையில் எதுவும் இல்லை எல்லாம் இறைவன் செயல் என்ற நம்பிக்கை மூலம் குறுக்கு வழியில் சென்றடைவது. புத்தர் முதல் வள்ளலார் வரை ஞானத்தை அடைந்தவர்கள் அனைவரும் ஆன்மீக நம்பிக்கையால்  ஞானத்தை அடைந்தவர்கள், அதனால் தான் அவர்களுடைய நம்பிக்கையை மக்களுக்கு கடத்த முடியவில்லை. அறிவை ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு கடத்த முடியும், நம்பிக்கையை கடத்த முடியாது, அதனால் தான் ஊமை கனவு கண்டது போல் அவர்கள் பெற்ற ஞானம் மக்களுக்கு பயன்படவில்லை. பிற்காலத்தில் வள்ளலாருக்கு பிறகு நாத்திக சிந்தனை மக்களிடம் கடவுள் நம்பிக்கையை வெகுவாக சிதைத்து விட்டதால் ஆன்மீக நம்பிக்கை  மூலம் ஞானிகள் யாரும் உருவாகவில்லை. 

    அறிவை பெறுவதற்கு அறிவு இல்லாத பட்சத்தில் நம்பிக்கை தான் நம் அனைவருக்கும் அறிவை கொடுக்கின்றது. அதனால் தான் படித்தவர்கள் பலர் புத்தர் சொன்னார், காந்தி சொன்னார், திருவள்ளுவர் சொன்னார், அண்ணா சொன்னார், பெரியார் சொன்னார், என்று நம்புவதையே அறிவாக நினைத்துக் கொள்கின்றனர். எனவே முதலில் நான் சொல்வதை நம்புங்கள் அது உங்களுடைய அறிவாக தானாக செயல்பட்டு ஆறாவது அறிவை பெறுவீர்கள். 

    நம்முடைய சிந்தனைக்கும், செயலுக்கும், அறிவுக்கும், ஆரோக்கியத்திற்கும், உயர்வுக்கும், தாழ்வுக்கும், பிறப்புக்கும், இறப்புக்கும் நாம் காரணமல்ல! இறந்தகால நிகழ்வுகளின் தொடர்வினையே காரணம். எனவே தொடர்வனை தத்துவத்தின்படி விதியே நம்மை இயக்குகின்றது, இதை  அறிவு பூர்வமாக புரிந்து கொள்ள வேண்டுமென்றால் “குமார் விதிகள்” (https://www.vijayakumaran.in/kumar-vidhigal) என்ற நான் எழுதிய புத்தகத்தை படிக்கவும், நான் என்று ஒவ்வொரு உடலும் தன்னைத்தானே நினைத்துக் கொள்வதுதான் நான் என்ற மாயை உணர்வு, இயற்கையின் இயக்கத்தில் எல்லா உயிர்களும் சமம் தான், உடலின் இயக்கம் நின்று விட்டால் நான் என்ற உணர்வு மட்டுமே மரணிக்கின்றது, உடலுக்கு மரணம் இல்லை  உருவ மாற்றம்தான் அடைகின்றது. எனவே நான் என்று நினைத்துக் கொள்வது மாயை என்பதை புரிந்து கொண்டால் மற்றும் நம்முடைய செயலுக்கு நாம் காரணம் அல்ல அனைத்தும் விதியே என்பதை புரிந்து கொண்டால் நம்முடைய அடையாளங்களை நினைத்து பெருமைப்பட மாட்டோம் சிறுமையும் பட மாட்டோம் அதே போல் மற்றவர்களை தாழ்ந்தவர்களாகவும் பார்க்க மாட்டோம் உயர்ந்தவர்களாகவும் பார்க்க மாட்டோம் அனைவரும் விதியின் கையில் விளையாட்டு பொம்மைகளாக தான் நமக்குத் தெரியும். இந்த புரிதலை நம்முடைய அறிவாக பெற்றுவிட்டால் தேவைப்படுகின்ற இடத்தில் நான் என்ற உணர்வில் இருந்து விடுபட்டு அனைவரின் நலமும் நம்முடைய நலனாக எண்ணி செயல்படுவோம், மற்றவர்களை பற்றி சிந்திக்காமல் நமக்கு எது நன்மையோ அதுவே சரி என்று சொல்ல மாட்டோம். 

    இப்போது நாம் பெற்றிருக்கும் ஆறாவது அறிவை பயன்படுத்தி ஒருவரின் சாதியை பட்டிமன்ற பேச்சாளர் ராஜா அவர்கள் கேட்டது சரியா? தவறா? என்று ஆய்வு செய்வோம். 

    உலகிலேயே இந்தியா தான் கலாச்சாரம் மிக்க பழமையான நாடு, பல ஆயிரம் ஆண்டுகளாக இங்கு மக்கள் குடும்பம் என்ற கலாச்சாரத்தில் வாழ்ந்து வருவதால்தான் குடும்பத்தின் குடும்பமாக சாதி உருவாகி இருக்கின்றது. எனவே குடும்ப கலாச்சாரத்தை பாதுகாக்க வேண்டும் என்றால் சாதி ஒழியாமல் பாதுகாக்க வேண்டிய அவசியம் அனைவருக்கும் உள்ளது. குடும்ப கலாச்சாரம் அழிந்து விடக்கூடாது என்பதால் தான் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் சாதியை ஒழிக்க எந்த சட்டமும் இல்லை. சுதந்திரத்திற்கு முன் மனிதன் மனிதனை சாதியால் அடிமைப்படுத்திதான் வாழ்ந்து இருக்கின்றான் ஆனால் சுதந்திரத்திற்கு பிறகு அனைவரும் சுதந்திரமாக வாழ வேண்டும் என்பதற்காக அனைத்து சாதியினரும் சமம் என்றும் சாதியால் ஏற்றத்தாழ்வு பார்க்கக்கூடாது என்றும் சட்டம் இயற்றப்பட்டது, மேலும் சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு சட்டமாக்கப்பட்டது, இது அனைவராலும் சமூக நீதியாக பார்க்கப்படுகின்றது. 

    அரசியல் ஆதாயத்திற்காக கடந்த அறுபது ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள சிறுபான்மை சாதியினரும் தமிழர் அல்லாதவர்களும் சாதி ஒழிய வேண்டும் என்று சொல்லி தமிழ்நாட்டு மக்களை மூளை சலவை செய்து உள்ளார்கள். 
    சாதி ஏன் ஒழியனும் அது இருப்பதால் யாருக்கு என்ன பாதிப்பு? பொருளாதார ஏற்றத்தாழ்வு மக்களிடையே இருப்பதால் பணத்தை ஒழிக்க வேண்டும் என்று யாரும் சொல்லவில்லை ஆனால் சாதி ஏற்றத்தாழ்வை ஒழிக்க சாதியை ஒழிக்க வேண்டும் என்று ஏன் சொல்ல வேண்டும்? இதுதான் சூழ்ச்சி! சாதி ஒழியனும் என்று சொன்னால் தான் நம்முடைய சாதியை எவனும் கேட்க மாட்டான் என்று எண்ணி சாதி ஒழிப்பு தான் பகுத்தறிவு, முற்போக்கு சிந்தனை என்று சொல்லி மூளை சலவை செய்து ஆட்டு மந்தையாக இருந்த பெரும்பான்மை சாதியினரின் உரிமைகளையும், அதிகாரத்தையும் அபகரித்துக் கொண்டார்கள். 
    இன்றளவும் அவர்கள் செய்த மூளை சலவியிலிருந்து மக்கள் மீளவில்லை என்பதற்கு ராஜாவின் செயலை கண்டிப்பதே சான்று. 

    சாதி ஒழிந்தால் வேறொரு குடும்பத்திற்குள் தடையில்லாமல் நுழைந்து விடலாம், அதன் மூலம் சுகமான வாழ்க்கையை வாழலாம் என்று எண்ணி சமுதாய நலனில் அக்கறை கொள்ளாமல்  சுயநலனுக்காக சாதி ஒழிய வேண்டும் என்று சொல்வதும் பகுத்தறிவான ஐந்தறிவின் வெளிப்பாடுதான். 

    தேர்தல் ஆணையம் தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு தேர்தலில் இட ஒதுக்கீடு கொடுத்திருப்பதன் நோக்கம் ஜனநாயகத்தில் மக்களின் பிரதிநிதியாக வருபவர்கள் சமூக நீதி அடிப்படையில் அனைத்து சாதியினருக்கும் சம பங்களிப்பு இருக்க வேண்டும் என்பதுதான். எனவே தேர்தல் ஆணையம் சமூகநீதியை நிலை நாட்ட வேட்பாளரின் சாதி, மதம், மொழி, மாநிலம், மாவட்டம் என்று அனைத்து தகவலையும் தெரிவிக்க வேண்டும் அப்போதுதான் இந்த வேட்பாளர் நம்மில் ஒருவர் தான் என்ற புரிதல் வாக்கு செலுத்தும் மக்களுக்கு இருக்கும். இந்த தகவலை தெரிந்து கொள்ளக்கூடிய உரிமை வாக்காளருக்கு இருக்கின்றது. 

    சாதியைப் பற்றிய சரியான புரிதல் நம் தமிழ் மக்களுக்கு இல்லாததால் தான் மாற்று இனத்தவர் நம்மை ஆண்டுவிட்டார்கள்! ஆளுகின்றார்கள்! இனியும் சாதியைப் பற்றிய புரிதல் இல்லாமல் உங்கள் உரிமையை இழந்து விடாதீர்!

    தன்னுடைய சாதி அடையாளம் ஒழிய வேண்டும் என்பதற்காகவும், கலப்பு திருமணம் மூலம் மாற்று சாதியினரின் செல்வத்தை அபகரிக்க வேண்டும் என்பதற்காகவும் சாதி ஒழிய வேண்டும் என்று சொல்வது சுயநலன், இதில் துளியும் பொதுநலன் இல்லை. சாதி ஒழிய வேண்டும் என்பது பொது நலனாக இருந்திருந்தால் அனைவராலும் ஏற்கப்பட்டு சாதி தீண்டாமை சட்டத்தைப் போல் சாதி ஒழிப்பு சட்டம் இயற்றப்பட்டிருக்கும். சாதி ஒழிய வேண்டும் என்று சாதியை இழிவாக பேசுவது சாதியை தன்னுடைய குடும்பமாக மதிக்கும் பலரின் மனதை புண்படுத்தும் செயலாக இருப்பதால் சமுதாயத்தில் அமைதியை நிலைநாட்ட சாதியை இழிவாக பேசுபவர் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஒருவரைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற அவசியம் ஏற்பட்டால் சாதியை கேட்பது தவறல்ல. இன்று சமூக வலைதளத்தில் தாழ்ந்த சாதியினராக இருந்தாலும் உயர்ந்த சாதியினராக இருந்தாலும் தன்னுடைய சாதியை வெளிப்படுத்துவதில் யாருக்கும் எந்த தயக்கமும் இல்லை. 

    சாதியை குடும்பத்தின் குடும்பமாக பார்ப்போம். சாதியைபெருமையாக பார்ப்பதும், இழிவாக பார்ப்பதும் தவறு.
    in Social
    கரூரில் 40 க்கும் மேற்பட்ட உயிரிழப்புக்கு யார் காரணம்?
    Useful Links
    • Home
    • Behind the writing
    • Books
    • Blog
    • Legal
    • Privacy Policy
    Connect with us
    • Contact us
    • rvijayakumar.neyveli@gmail.com
    Follow us