காதலில் பலவகை உண்டு, உயிரில்லா பொருள் மீது கூட காதல் கொள்ளலாம், மொழி மீது கூட காதல் கொள்ளலாம் அனைத்தும் காதல் தான். இந்த கட்டுரையில் நான் ஆய்வு செய்து எழுதி இருக்கும் காதல், திருமணத்திற்கு முன் ஆணும், பெண்ணும் காதலிப்பது சரியா? தவறா? என்பதை பற்றியதுதான்.என்னுடைய வாழ்க்கை அனுபவத்தையும், என்னை சுற்றி நடந்த நிகழ்வுகளின் மூலம் நான் பெற்ற அனுபவத்தையும் அடிப்படையாக வைத்து நான் என்ற உணர்வில் இருந்து விடுபட்டு, தன்னிலை மறந்து விருப்பு, வெறுப்பு இல்லாமல் சமுதாய நலனை மட்டுமே நோக்கமாகக் கொண்டு இந்த ஆய்வு கட்டுரையை எழுதி இருக்கின்றேன்.
நம்முடைய உணர்வின் விருப்பம் இல்லாமல் தகவல் மூலம் வெளியிலிருந்து எந்த ஒரு அறிவையும் நாம் பெற முடியாது. நாம் பெற்றிருக்கும் அறிவு நம் உணர்வின் விருப்பப்படி தான் இருக்கும், நம் உணர்வு கேட்டை போல் தடுத்து அதற்கு பிடித்த கருத்துக்களை மட்டும்தான் அறிவாக எடுத்துக் கொள்ளும். எனவே இந்த கட்டுரையை படிக்கின்றவர்கள் காதலைப் பற்றி உங்களுக்கு இருக்கும் கருத்தை ஒதுக்கி வைத்துவிட்டு நான் என்ற உணர்வில் இருந்து விடுபட்டு படியுங்கள் அப்போதுதான் உங்கள் உணர்வுக்கு எதிரான புதிய அறிவு உங்களுக்குள் வந்து உங்களை நல்வழியில் இயக்கும்.
உண்மைக் காதல் என்பது ஒருவர் மீது ஒருவர் வைக்கும் அன்பு. சாதி, மதம், பதவி, செல்வம், கல்வி, அழகு, என்று எதையும் பார்க்காமல் கண்டதும் வருவதுதான் உண்மையான, இயல்பான காதல்.இயல்பான,காதல் நாகரிகம், ஒழுக்கம், இல்லாத கற்கால மனித சமுதாயத்தில் தான் சாத்தியம்.
சாதி, மதம், பதவி, செல்வம், கல்வி, அழகு, வயது, திருமணம் ஆனவரா, திருமணம் ஆகாதவரா என்பதை எல்லாம் பார்த்து நாம் ஒருவரைக் காதலிக்கலாம் என்று நினைப்பது என்பது தீர்மானம்.
தீர்மானம் என்பது எது சரி, எது தவறு என்று முடிவு செய்த பிறகு அதன் வழி நடப்பது, ஒருவரை காதலிக்கலாம் என்று தீர்மானித்த பிறகு காதலிப்பது எப்படி உண்மை காதலாக இருக்கும்?
நாகரிகம் என்பது தனி மனிதனின் செயல் சமுதாயத்தைப் பாதிக்காமல் ஒவ்வொருவருடைய உரிமையையும் துல்லியமாக வகுத்து உறவுமுறையுடன் வாழ்வதுதான். அதாவது ஒருவனுக்கு ஒருத்தி என்ற ஒழுக்கத்துடன் கணவன்,மனைவி, அப்பா, அம்மா, அண்ணன், தம்பி, தங்கை, மகள், மகன், அண்ணன் மனைவி, தம்பி மனைவி, அக்காள் மகள், என்று இப்படி பல உறவுமுறைகளை வைத்து, இதில் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு மாதிரியான நட்பையும், அன்பையும், பாசத்தையும், காதலையும் வெளிபடுத்துகின்றோம்,இது தான் நாகரிகம். எனவே கண்டதும் காதல் என்பதும், திருமணத்துக்கு முன் காதலிப்பதும் எப்படி நாகரிகமனிதனின் பக்குத்தறிவுச் செயலாக இருக்கும்?
ஒருவன் ஒரு பெண்ணைதான் காதலிக்கவேண்டும் என்பது காதலின் இலக்கணம் அல்ல. ஆனால் ஒருவன் ஒருத்தியைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பது நாகரிக சமுதயத்தின் ஒழுக்கம். இது தான் பகுத்தறிவின் வெளிப்பாடு.
நாம் ஒவ்வொருவரும் நாகரிகமாகத் தான் வாழ விரும்புகிறோம். இருப்பினும் நம்மில் சிலர் உணர்வைக் கட்டுக்குள் வைக்காமல், காதல் சொல்கிறார்கள், இதன் பெயர் உண்மை காதல் அல்ல. பெற்றோர்களை,உறவுகளைப் பொருட்படுத்தாமல் தானே மேற்கொண்ட செயல்தான் இது.
கண்டதும் வந்தது உண்மைக் காதல் என்றால் அவர் நாகரிகம் இல்லாத கற்கால மனிதர். தீர்மானித்த பிறகு வந்த காதல் என்றால் அவர் பெற்றோர்களையும்,உறவையும், சமுதாயத்தையும், ஒழுக்கத்தையும் மதிக்காதவர் என்று பொருள்.
காதல் உணர்வை கட்டுப்படுத்துவதுதான் நாகரிகம். நாகரிகம் வளரவேண்டும் என்றால், காதல் உணர்வு கட்டுப்பாடுக்குள் இருக்கவேண்டும்.
கட்டுப்பாட்டுக்குள் இருப்பதுதான் நாகரிக காதல், நாகரிகக் காதல் என்பது திருமணத்திற்குப் பிறகு கணவன், மனைவிக்குள் ஏற்படும் காதல் தான்.
உலகிலேயே மிகவும் பழமையான நாகரீகத்தில் உயர்ந்த சமுதாயம் நம் தமிழ் சமுதாயம், பல ஆயிரம் ஆண்டுகளாக வாழ்ந்த நம் முன்னோர்களின் அனுபவத்தின் மூலம் குடும்ப வாழ்க்கை முறையை உருவாக்கி, ஒரு பெண்ணுக்கு பலரும் அடித்துக் கொண்டு சாகக்கூடாது என்று உறவு முறையை உருவாக்கி இந்த உறவுக்கு தான் முதல் உரிமை என்று உரிமையை வகுத்து, சமுதாயம் ஒன்று கூடி திருமணம் செய்து வைத்த பிறகு தான் ஒரு ஆண் ஒரு பெண்ணை மனைவியாக உரிமைக் கொள்ள முடியும் என்ற வரைமுறையை வகுத்து ஒழுக்கத்தை கடைப்பிடித்து வாழ்ந்தார்கள்.
கடந்த 50 ஆண்டுகளாக ஒழுக்கம் இல்லாத சமுதாயத் தலைவர்கலும், அரசியல் தலைவர்கலும், திரைப்பட நடிகர், நடிகைகலும் தன்னுடைய ஒழுக்கை கேட்டை மறைப்பதற்காக அனைத்தையும் தனிமனித உரிமை,பெண்ணுரிமை என்று சொல்லி ஒழுக்கம் இல்லாத, நாகரிகம் இல்லாத சமுதாயமாக நம் சமுதாயத்தை மாற்றி விட்டார்கள்.
50 ஆண்டுகளுக்கு முன்பு திருமணத்துக்கு முன் காதலிப்பது ஒழுக்கக்கேடான செயலாகவும்,பெண்ணின் பாதுகாப்புக்கு எதிராகவும் பார்க்கப்பட்டது, ஆனால் இன்று தனிமனித உரிமையாக பார்க்கப்படுகின்றது. உண்மையில் திருமணத்துக்கு முன் காதலிப்பது நாகரிகத்துக்கும், கலாச்சாரத்துக்கும் எதிரான ஒழுக்கக்கடான செயலா? அல்லது தனி மனித உரிமையா?ஆய்வு செய்து பார்ப்போம்.
ஒருவரின் செயல் சமுதாயத்தை பாதிக்கவில்லை என்றால் அதை அவர் செய்வதற்கு தனிமனித உரிமை இருக்கின்றது, ஆனால் ஒருவருடைய செயல் சமுதாயத்தை பாதிக்கும் என்றால் அதை செய்ய அவருக்கு உரிமையில்லை.
இரு சக்கர வாகனத்தில் தலைக்கவசம் இல்லாமல் பயணம் செய்ய தனிமனித உரிமையில்லை!
காரில் இருக்கை பாதுகாப்பு பெல்ட்யை போடாமல் பயணம் செய்ய தனி மனித உரிமையில்லை!
காரணம் விபத்தால் தனி மனிதனின் இழப்பு சமுதாயத்தை பாதிக்கிறது என்பதனால் தனிமனித உரிமையை விட சமுதாய நலனே நீதித்துறைக்கு முதன்மையாக தெரிகின்றது.அது போல் ஒருவர் தனியாக காதலிக்க முடியாது, காதலிக்க மற்றொருவர் வேண்டும், மற்றொருவரை காதல் உணர்வோடு பார்த்தாலே அது தனிமனித உரிமை அல்ல சமுதாயத்தில் ஏற்படுத்தும் பாதிப்பு என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்.
விபச்சாரம் ஏன் தனிமனித உரிமையாக பார்க்கப்படாமல் ,சமுதாயத்திற்கு கேடாக பார்க்கப்படுகின்றது? விபச்சாரமும், திருமணத்துக்கு முன் காதலிப்பதும் தனிமனித உரிமையல்ல தனி மனித ஒழுக்க கேடு, இரண்டும் சமுதாயத்திற்கு கேடுதான்.
எனவே திருமணத்துக்கு முன் காதலிப்பதை விபச்சாரத்திற்கு இணையான சமுதாய சீர்கேடாக எண்ணி புதிய சட்டம் இயற்றி தண்டனை கொடுக்க வேண்டும்.
ஒழுக்கம் இல்லாத பல பிரபலங்கள் திருமணம் செய்து கொள்ளாமலேயே கணவன்,மாணவியாக வாழ்வதையும்.திருமணம் செய்து கொள்ளாமலேயே பிள்ளைகளை பெற்றுக் கொள்வதையும் ஆதரித்து பேசுபவர் மீது சமுதாய நலன்கருதி அரசு அவர்கள் மீது வழக்கு பதிய வேண்டும்.
அறிமுகமான ஆணும்,பெண்ணும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவு எடுப்பது காதல் அல்ல எனவே அது தவறல்ல. திருமணத்துக்கு முன்பே காதல் என்ற பெயரில் கணவன், மனைவியாக வாழ்வதுதான் ஒழுக்கக்கேடு.
திருமணம் என்பது தனிமனித உரிமைக்கு உட்பட்டது அல்ல என்பதால் பெற்றோர்களின் சம்மதம் இல்லாமல் திருமணம் நடைபெறக் கூடாது என்று ஒன்றிய அரசு சட்டம் இயற்ற வேண்டும்.
திருமணத்துக்கு முன் காதலிப்பது தனிமனித உரிமை அல்ல, ஆனால் ஆணும், பெண்ணும் தனக்கான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுப்பது அவர்களுடைய உரிமை, அதற்கு அனுமதி கொடுப்பது பெற்றோர்களின் உரிமை, குடும்ப சொத்தின் மீது பிள்ளைகளுக்கு உரிமை இருப்பது போல் பிள்ளைகள் மீது பெற்றோர்களுக்கு உரிமை இருப்பதில் எந்த தவறும் இல்லை.இதனால் சமுதாயத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை, ஒருவர் மீது ஒருவருக்கு இருக்கும் உரிமை தான் குடும்ப உறவையும், சமுதாயத்தில் அமைதியையும் பாதுகாக்கின்றது.
நாகரிக சமுதாயத்தில் ஒவ்வொருவருடைய உரிமைகளும் துல்லியமாக வகுக்கப்பட்ட நிலையில் குடும்ப வாழ்க்கை முறையை பாதுகாக்கும் வகையில் திருமணம் என்பது தனிமனித உரிமை அல்ல அது சமுதாயத்தின் ஒழுக்கம் என்பதை முதலில் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும், அப்போதுதான் அடுத்த தலைமுறை ஒழுக்கத்துக்கும், கலாச்சாரத்துக்கும், சட்டத்துக்கும் கட்டுப்பட்டு அமைதியான சமுதாயத்தில் வாழ்வார்கள்.
இன்று பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கதறுகின்றார்களே அதற்கு யார் காரணம்? தனிமனித ஒழுக்கம் சீரழிந்து வருவதுதான் காரணம். 40 ஆண்டுகளுக்கு முன்பு 100 பேருக்கு ஒருவர் திருமணத்துக்கு முன் காதலித்தார்கள் இன்று அது பல மடங்கு அதிகமாகிவிட்டது,அதன் தாக்கத்தால் தான் இன்று பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.பெண்களுக்கு யார் பாதுகாப்பு கொடுப்பது? சமுதாயம்தான் பாதுகாப்பு கொடுக்க வேண்டும், சமுதாயமே கெட்டுப் போய்விட்ட நிலையில் காவல்துறை எப்படி பாதுகாப்பு கொடுக்கும் அவர்கள் என்ன ராமர் அவதாரமா அவர்களும் இந்த சமுதாயத்தில் ஒருவர் தானே,அதனால்தான் காவல் நிலையத்திலேயே பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்படுகின்றார்கள்.
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மத்திய அரசு விரைந்து செயல்பட்டு திருமணத்துக்கு முன் காதலிக்கும் கதை உள்ள அனைத்து திரைப்படத்தையும் தடை செய்ய வேண்டும், சமுதாயத்தில் ஒழுக்க கேட்டை நியாயப்படுத்தும் பிரபலங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், திருமணத்துக்கு முன்பு காதலிப்பது ஒழுக்க கேடான செயல் என்பதை இளைஞர்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.
வரிசையில் அனைவரும் நிற்கும்போது ஒருவர் குறுக்கில் புகுந்தால் போய் தொலையரான் என்று விட்டுவிடுவார்கள், 10 பேர் குறுக்கில் புகுந்தால் யாரும் வரிசையில் நிற்க மாட்டார்கள் அனைவரும் முட்டி மோதிக்கொண்டு மண்டையை உடைத்துக் கொள்வார்கள், அது போல் தான் திருமணத்துக்கு முன் காதலிக்கும் ஒழுக்க கேடான செயலை பலர் செய்ய ஆரம்பித்தால் ஆண்களுக்கு இடையில் போட்டி ஏற்பட்டு அது கலவரமாக மாறிவிடும் இதை சமுதாயம் தாங்குமா சிந்தித்துப் பாருங்கள்,முன்னோர்கள் இதுபோன்ற அனுபவங்கள் மூலம் அறிவைப் பெற்றுதான் சமுதாயத்தில் ஒழுக்கத்தை ஏற்படுத்தினர், இன்று நமக்கு அந்த அறிவு இல்லாததால் மீண்டும் கற்காலத்துக்கு சென்று கொண்டு இருக்கின்றோம்.