4 August 2025
by
Vijayakumaran
நேற்று( 4/8/2025) என் எல் சி ஆர்ச் அருகில் உள்ள அர்ச்சனா ஹோட்டல் உரிமையாளர் ராஜ் மற்றும் ரமேஷ் இருவரும் அவர்களுடைய அப்பாவின் நினைவு நாள் அன்று ஏழை எளியவர்களுக்கு உதவும் வகையில் வருடம் 365 நாட்களும் பத்து ரூபாய்க்கு காலை மற்றும் மதிய உணவை வழங்க புதியதாக அவர்களின் வீட்டுக்கு அருகிலேயே உணவகத்தை ஆரம்பித்தார்கள் அந்த நிகழ்ச்சிக்கு நான் சென்று அவர்களை வாழ்த்தி விட்டு வந்தேன்,அதன் பாதிப்பில் இந்த கட்டுரையை நான் எழுதுகின்றேன்.
என்னுடைய ஆய்வின்படி விதி உண்மை என்பதால் கடவுள் இல்லை. ஒவ்வொரு அணுவின் அசைவுக்கும் எதிர்வினை உண்டு என்பதால் CCTV கேமராவை போல் இயற்கை நம்முடைய செயலை பார்த்துக் கொண்டே இருக்கின்றது எதிர்வினைக்காக, இதிலிருந்து யாரும் தப்பிக்கவே முடியாது. அதன்படி ஒருவர் செய்யும் தர்மம் அவர்களையும் அவர்களுடைய சந்ததிகளையும் நிச்சயம் காக்கும் என்பது ஆய்வின் மூலம் நான் அறிந்த உண்மை.
ஒருவர் செய்யும் தர்மத்தால் பயன்பெறுபவர் மட்டும் பலனை அடையவில்லை, ஒருவர் செய்யும் தர்மம் சமுதாயத்தில் ஒவ்வொருவரும் நேர்மையாகவும், ஒழுக்கமாகவும், மனிதாபிமானத்தோடும் வாழ வேண்டும் என்பதை தூண்டும். நம் தமிழகத்தில் அனைவரும் நல்லிணக்கத்தோடு வாழ்வதற்கு காரணம் நம் முன்னோர்கள் செய்த தர்மங்கள் தான்.
ஒரு தனி மனிதனுக்கு தொழிலில் லாபம் வந்தவுடன் மக்களைப் பற்றி சிந்தித்து ஒரு பகுதி லாபத்தை தானம் செய்ய நினைக்கின்றான் ஆனால் மக்களுக்காகவே மக்களின் நலனுக்காகவே உருவாக்கப்பட்ட என் எல் சி போன்ற பொதுத்துறை நிறுவனங்கள் தொழிலாளிகளுக்கும், சுற்றியுள்ள மக்களுக்கும் நன்மைகள் செய்கின்றனவா என்றால் கேள்வி குறிதான்.
என்எல்சி நிறுவனம் 1990 வரை லாபம் மட்டுமே குறிக்கோளாக இல்லாமல் மக்களின் நலனுக்கான நிறுவனமாக இருந்தது, அதனால் தான் பல ஆயிரம் ஒப்பந்த ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டார்கள், பொதுமக்கள் அனைவரும் என்எல்சி மருத்துவ மனைகளில் இலவச மருத்துவ உதவி பெற்றார்கள். அதற்கு காரணம் அன்று பணிபுரிந்த அதிகாரிகளிடமும், தொழிலாளிகளிடமும் தர்ம சிந்தனை இருந்தது,இன்று அப்படிப்பட்ட மனிதர்களே இல்லை,இன்றுள்ள அதிகாரிகளும், நிரந்தர தொழிலாளிகளும் ஒப்பந்தத் தொழிலாளி பணி நிரந்தரம் ஆகக்கூடாது என்பதையே விரும்புகின்றார்கள்.
ஒப்பந்த தொழிலாளி படும் துன்பத்தையும், வறுமையையும் ரசிக்கின்றார்கள்.
என்னுடைய ஆய்வின்படி எந்த ஒரு மனிதனின் சிந்தனையும், செயலும் அவனுக்கு உட்பட்டு இல்லை, நாம் ஒரு கல்லை போல் தான், வெளியில் இருந்து ஒரு சக்தி இயக்கினால் தான் நாம் இயங்க முடியும், நாம் வாழ்கின்ற வாழ்க்கை இயற்கை போட்ட பிச்சை என்பதை அனைவரும் உணர்ந்தால் தான் தர்ம சிந்தனை துளிர்விடும். தனக்கு சுகமான வாழ்க்கை அமைந்ததும் எளியோரின் துன்பத்தை ரசிப்பது மிருகத்தை விட கீழ்த்தரமான செயல்.
உழைப்புக்கு தான் ஊதியம் இருக்க வேண்டும், நிரந்தர ஊழியர் செய்யும் பணிக்கு ஒரு ஊதியமும் அதே பணியை சொசைட்டி மற்றும் ஒப்பந்த ஊழியர் செய்தால் அதில் ஒரு பகுதி மட்டுமே ஊதியம் என்பது ஜனநாயக நாட்டின் மிகப்பெரிய அநீதி.இதற்குப் பெயர்தான் தொழிலாளியின் வயிற்றில் அடிப்பது என்பது.
அதிகாரிகளாலும், நிரந்தர ஊழியர்களாலும் சொசைட்டி மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் மட்டும் பாதிக்கவில்லை,கடை நடத்துபவர்களும் இவர்களால் பல நெருக்கடிகளுக்கு ஆளாகின்றார்கள், பாழடைந்த வீட்டை தான் கடைகளுக்கு கொடுப்பார்கள்.
தம்பி பெயரில் உள்ள கடைக்கு மாற்றுக்கடை கொடுப்பதாக சொல்லி மின்சாரத்தையும், தண்ணீரையும் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே துண்டித்து விட்டார்கள், கடந்த ஐந்து வருடமாக பூட்டிய கடைக்கு 2 லட்சத்துக்கு மேல் வாடகை கட்டி விட்டார். உயர் அதிகாரி மாற்று கடை கொடுக்க விரும்பினால் கீழ் அதிகாரி விரும்ப மாட்டார், பணி மாற்றத்தில் கீழ் அதிகாரி விரும்பினால் உயர் அதிகாரி விரும்ப மாட்டார், மொத்தத்தில் மனம் இல்லாத இவர்களால் பாதிக்கப்படுவது எளிய மக்கள்தான்.
செல்வம் இருந்தால்தான் தர்மம் செய்ய முடியும் என்பது அல்ல, தர்மம் செய்ய வேண்டும் என்று நினைத்தாலே போதும் அதுவும் தர்மம் தான்.
தர்மம் செய்ய வேண்டும் என்று ஒருவன் நினைக்கும் போதே பரிசுத்தமானவனாக மாறிவிடுகின்றான்.
in Social