நாட்டுக்கு ஒருசிலர் மட்டும் ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் பெறுவதால் நாட்டு மக்களுக்கு என் பயன்? கல்வி எப்படி அனைவரின் உரிமையோ, அதுபோல் விளையாட்டும் அனைவருடைய உரிமை. விளையாட்டில் வெற்றியும் தோல்வியும் விளையாட்டாக எடுத்துக் கொண்டால் தான் அனைவராலும் விளையாட்டில் பங்கேற்க முடியும். விளையாட்டில் வெற்றியும்,தோல்வியும் முக்கியமல்ல என்ற நிலை உருவானால் தான் அனைத்து பிள்ளைகளும் தாழ்வு மனப்பான்மை இல்லாமல் விளையாட்டில் பங்கேற்கும் சூழல் உருவாகும். விளையாட்டு என்பது உணவைப் போன்றது,ஒவ்வொரு பிள்ளைகளும் விளையாட்டில் கலந்து கொண்டால் தான் உடலாலும் உள்ளத்தாலும் ஆரோக்கியமாக இருக்க முடியும். விளையாட்டு என்பது வெற்றியை மையமாக வைத்து இருந்தால் அது விளையாட்டே அல்ல, அது உடல் வலிமை படைத்தவர்களுக்கான போட்டியே, இதுபோன்ற போட்டியில் ஆயிரத்தில் ஒருவர் மட்டும் கலந்து கொள்வதால் நாட்டு மக்களுக்கு எந்த பயனும் இல்லை. இதற்கு அரசு பணத்தை செலவு செய்ய வேண்டிய தேவையே இல்லை. ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் இந்தியா ஆயிரம் பதக்கம் வாங்கினாலும் அதனால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை, எந்த பெருமையும் இல்லை. ஆனால் போட்டியில்லாத விளையாட்டின் மூலம் இளைஞர்கள் அனைவரும் உடல் ஆரோக்கியம் பெறுவதால் மருத்துவமனையில் மக்கள் கூட்டம் குறைவதாலும், உள்ளம் ஆரோக்கியத்தின் மூலம் சமுதாயத்தில் குற்றங்கள் குறைவதாலும் மட்டுமே நாட்டுக்கு நன்மையும், பெருமையும் கிடைக்கும். இந்த கருத்தை தமிழக அரசு விளையாட்டுத் துறையின் மூலம் செயல்படுத்தினால் வருங்கால சந்ததிகளாவது ஆரோக்கியமானவர்களாக வாழ்வார்கள்.