26 October 2024
by
Vijayakumaran
நமக்கு எது நன்மையோ அதுவே சரியானது என்று ஒருவரைப் போலவே இருவரும் நினைப்பதால் தான் முதலாளிக்கும், தொழிலாளிக்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் ஏற்படுகின்றன. நான் ஆறு ரூபாய் சம்பளத்திற்கு வேலைக்கு சேர்ந்து நெய்வேலியில் நம்பர் ஒன் மின் ஒப்பந்த நிறுவனத்தின் முதலாளியாக உயர்ந்ததால் எனக்கு தொழிலாளியின் கஷ்டங்களும் தெரியும், முதலாளியின் கஷ்டங்களும் தெரியும். எனவே இந்த கட்டுரையை நான் எழுதுவது மிகவும் சரியாக இருக்கும் என்று எண்ணுகின்றேன்.
அறிவைப் பற்றி நான் ஆய்வு செய்து எழுதி இருக்கும் கட்டுரையின்படி ஆறாவது அறிவு என்பது பகுத்தறிவு அல்ல.பகுத்தறிவு மற்ற உயிரினங்களிடமும் இருப்பதால்,ஆறாவது அறிவு என்பது நான் என்ற உணர்விலிருந்து விடுபட்டு சிந்திப்பதால் பெரும் அறிவே ஆறாவது அறிவு.
ஒரு மனிதன் தனக்கு எது நன்மையோ அதுவே சரி என்று நினைத்தால் அவன் ஆறாவது அறிவை பெறவில்லை என்று பொருள். இந்த அளவுகோலை வைத்து ஆறறிவு மனிதனை எளிதில் கண்டறியலாம்.
நான் என்ற உணர்வில் இருந்து விடுபட்டு தொழிலாளி முதலாளியாக இருந்தும், முதலாளி தொழிலாளியாக இருந்தும் ஆறறிவில் சிந்தித்தால் தொழிலாளிக்கும், முதலாளிக்கும் இடையே இணக்கமான சூழல் உருவாகும்.
மிதிவண்டியில் சென்று கவனக்குறைவாக இருசக்கர மோட்டார் வண்டியில் மோதி விட்டால் விபத்துக்கு மோட்டார் வண்டியை ஒட்டியவர் தான் பொறுப்பாளர்.
இருசக்கர மோட்டார் வண்டியை கவனக்குறைவாக ஓட்டிச் சென்று மகிழுந்தில் மோதி விட்டால் மகிழுந்தை ஓட்டியவர் தான் விபத்துக்கு பொறுப்பாளர்.
அதுபோல் தொழிலாளிக்கும், முதலாளிக்கும் பிரச்சனை வந்துவிட்டால் அதற்கு முதலாளி தான் பொறுப்பாளர். இது தனிமனிதனின் நீதி அல்ல, நம் சமுதாயத்தின் நீதி.
முதலாளியையும், பணக்காரர்களையும் கெட்டவர்களாக தொழிலாளர்களும், ஏழைகளும் பார்ப்பதற்கு காரணம் அரசியல் தான்.ஏழைகள் பெரும்பான்மையினராக இருப்பதால் அரசியல் ஆதாயத்திற்காக ஏழையின் சிந்தனையே சரி என்றாகி விட்டது.பணக்காரர்களின் செல்வத்தை அரசு எடுத்து ஏழைகளுக்கு கொடுக்க வேண்டும் என்பதுதான் ஏழையின் விருப்பம். ஒருவன் ஏழையாக இருப்பதற்கு பல காரணங்கள் இருந்தாலும் சோம்பேறித்தனம், இயலாமை, ஒழுக்கம் இன்மை, தொடர் முயற்சியின்மை தான் முதன்மையானது. அதனால் தான் அடுத்தவன் செல்வம் தனக்கு எந்த உழைப்பும் இல்லாமல் கிடைக்காதா என்று நினைக்கின்றான். தான் வாங்கிய கடனை அரசு தள்ளுபடி செய்யாதா என்று எதிர்பார்க்கின்றான்.
வாழ்க்கையில் உயர வேண்டும், முதலாளியாக வேண்டும் என்பது எளிதான காரியம் அல்ல, முதலாளியாவது என்பது வழுக்கு மரத்தில் ஏறுவது போன்றது, முதலாளியாக தொடர்ந்து நீடிப்பது என்பது மிகவும் சிரமமானது. ஒரு சில முடிவை தவறாக எடுத்து விட்டால் வழுக்கு மரத்திலிருந்து வழுக்கிக் கொண்டு கீழே வருவது போல் பொருளாதாரத்தில் அடிமட்டத்திற்கு வந்து விட நேரிடும்.
ஆயிரம் தொழிலாளியில் ஒருவர் மட்டுமே முதலாளியாக உயர்கின்றார்கள், நூறு முதலாளியில் பத்து முதலாளிகள் மட்டுமே முதலாளியாக நீடிக்கின்றார்கள் என்பது என்னுடைய அனுபவத்தில் நான் கண்ட உண்மை.
சொத்தை விற்றுவிட்டு வந்து கடை வைத்தவர்கள், ஒப்பந்த நிறுவனத்தை நடத்தியவர்கள் பலர் காணாமல் போய்விட்டார்கள். முதலாளியாக நீடிப்பதே மிகப்பெரிய சவால், அதிலும் லாபகரமாக தொழில் செய்வது என்பது மிகப்பெரிய சவால்.
தொழிலாளியாக இருப்பதற்கு உழைப்பு மட்டும் இருந்தாலே போதும் ஆனால் முதலாளியாக உயர்வதற்கு ஐந்து புலன்களையும் அடக்கி ஆளக்கூடிய பயிற்சி தேவை. உழைப்பு, நேர்மை, விடாமுயற்சி, இடைவிடாத செயல், முன்னேற வேண்டும் என்ற சிந்தனை, மது,மாது இடம் இருந்து விடுபட்ட ஒழுக்கமான வாழ்க்கை முறை ஆகியவை தேவை.
நான் தொழிலாளியாக பணி செய்த போது என்னுடன் தொழிலாளியாக பணி செய்தவர்கள் பலர் ஆனால் யாரும் முதலாளியாக உயரவில்லை. அதற்கு காரணம் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு விதமான இயலாமை இருந்தது.
நான் முதலாளியாக இருந்த போது ஒரு சிலரை தவிர பல முதலாளிகளால் முதலாளியாக நீடிக்க முடியவில்லை. அதற்கும் காரணம் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு விதமான இயலாமை இருந்தது.
என்னுடைய பார்வையில் முதலாளித்துவம் ஒழிய வேண்டும் என்று கம்யூனிசம் பேசுவது அரசியல் லாபத்திற்காக தான்.
மனித சமுதாயம் உயர வேண்டும் என்றால் முதலாளித்துவம் வளர வேண்டும். அதே சமயம் அரசின் கட்டுப்பாட்டில் முதலாளித்துவம் இருக்க வேண்டும்.
சோம்பேறிகள் தான் உலகில் பெரும்பான்மையினர், சோம்பேறிகள் பொறுப்பை ஏற்க மாட்டார்கள், அவர்கள் உழைக்க தயாராகவே இல்லை. அதனால் தான் பெரும்பாலானவர்கள் ஏழைகளாகவே இருக்கின்றார்கள்.
சோம்பேறிகளுக்கும், பொறுப்பை ஏற்காதவர்களுக்கும் பொருளாதார சமத்துவம் வேண்டும் என்பதற்காக அதிகம் உழைப்பவர்களை உழைக்காதே என்பதுதான் முதலாளித்துவ எதிர்ப்பு.
பணம் என்பது (energy conversion tool)ஆற்றலை மாற்றும் கருவி நம்மிடம் இருக்கும் அறிவை, உழைப்பை, நேர்மையை, ஒழுக்கத்தை, விடாமுயற்சியை,அன்பை, நட்பை, நம்பிக்கையை, கல்வியை என்று அனைத்தையும் பணமாக மாற்றி வைத்துக் கொள்ள முடியும். ஏழை என்றால் அவரிடம் பணமாக மாற்றிக்கொள்ள எதுவும் இல்லை என்று தான் பொருள். (ஒரு சிலர் சேர்த்து வைத்த பணத்தை இழந்து ஏழையாக இருப்பார்கள், அது போல் மற்றவர் பணத்தை அபகரித்து பணக்காரராக சிலர் இருப்பார்கள் அவர்களுக்கு இது பொருந்தாது)
முதலாளித்துவத்துக்கு எதிராக பேசுவதும், பெரிய பணக்காரர்கள் வெளிநாட்டில் சேர்த்து வைத்து இருக்கும் பணத்தை எடுத்து ஏழைகளுக்கு பிரித்துக் கொடுப்பேன் என்பதும், விவசாய கடனை தள்ளுபடி செய்வேன் என்பதும், கல்வி கடனை தள்ளுபடி செய்வேன் என்று சொல்வதும், ஐந்து அறிவில் சிந்திக்கும் மக்களை அரசியலுக்காக முட்டாளாக்கும் செயல். கடன் வாங்காமல் விவசாயம் செய்யும் விவசாயிகளும், கடன் வாங்காமல் படிக்கும் மாணவர்களும் பாவம் செய்தவர்களா ?
உற்பத்தியும், தேவையும் ஒரு பொருளின் விலையையும்,முக்கியத்துவத்தையும் முடிவு செய்கின்றது. தங்கம் பூமியிலிருந்து அதிகமாக கிடைத்தால் இரும்பு விலைக்கு கிடைக்கும். அதுபோல்தான் தொழிலாளிகளின் தேவை முதலாளிக்கு தேவைப்படும்போது அவர்களுக்கான ஊதியமும், சலுகைகளும் அதிகமாக கிடைக்கும்.
இங்கு யாரும் யாருக்கும் கொத்தடிமை இல்லை!
இங்கு யாரும் யாருக்கும் தடையும் இல்லை!
நான் தான் என் முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கின்றேன் என்பதை புரிந்து நல்ல மனிதர்களிடம் நல்ல பண்புகளை கற்றுக் கொண்டால் நீங்களும் முதலாளி தான்.
ஒவ்வொரு தொழிலாளியும் முதலாளியை எதிரியாக பார்க்காமல்,முதலாளியை முன்மாதிரியாக எடுத்துக் கொண்டால் நீங்களும் முதலாளி தான்.
in Opinion