13 July 2019
by
Vijayakumaran
திருமண வாழ்த்துக்களுடன்கூடிய திருமண வாழ்க்கைக்கான வழிகாட்டுதல் கட்டுரை இது. திருமணம் நடந்தும் இரு மணங்களும் ஒன்று சேராமல் வாழ்பவர்கள்தான் இன்று அதிகமானவர்கள், இதற்கு என்ன காரணம் என்று ஆய்வு செய்து அதற்கான தீர்வை பதிவு செய்து உள்ளேன்.
நாம் பெற்ற அறிவு தான் நம் வாழ்க்கைக்கு சூனியம், நாம் பெற்ற அறிவே நம்மை உணர்வுபூர்வமாக வாழ விடாமல் தடுக்கின்றது. சிறு வயதில் திருமணம் செய்து கொள்ளும் பெரும்பாலானவர்கள் (18 வயது முதல் 25 வயதிற்குள்)இருமணம் கலந்து அன்போடும், பாசத்தோடும், வாழ்வதற்குக் காரணம் அவர்கள் உலக அறிவைப் பெறுவதற்கு முன்பே உணர்வுபூர்வமாக ஒன்று சேர்ந்து விடுவதால் அவர்களுடைய திருமண வாழ்க்கை வாழ்நாள் முழுவதும் இனிமையாக இருக்கின்றது.
சிறு வயதில் திருமணமாகி இணைந்த சிலர் பிரிவதற்கும் காலப்போக்கில் பெறக்கூடாத அறிவை ஒருவர் பெறுவதே காரணம்.
உண்மையை நாம் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம்தான் நம் அறிவை வளர்த்துக்கொள்ள தூண்டுதலாக இருக்கிறது,இதன் வெளிப்பாடே பல புத்தகங்களை படிக்க தூண்டுகின்றது, இதனால் பல தகவல்களை சேகரித்து வைத்துக் கொள்கிறோம். நாம் பெற்ற அறிவுகள் அனைத்தும் உண்மையாக இருந்தாலும், அது நமக்கு நன்மையை கொடுக்குமா, அல்லது தீமையை கொடுக்குமா என்று சிந்திப்பதே இல்லை.காரணம் அறிவு நன்மையை மட்டுமே கொடுக்கும் என்ற தவறான புரிதல் இந்த சமுதாயத்தில் இருப்பதே.
நாம் ஒரு உண்மையை (அறிவை )தெரிந்து கொள்வதற்கு முன்பு அந்த அறிவு நமக்கு நன்மையை கொடுக்குமா? என்ற புரிதலோடு அதை தெரிந்து கொள்ள வேண்டும்.
இந்த உலகில் நடந்த, நடக்கின்ற, நிகழ்வுகள் அனைத்தையும் நாம் தெரிந்து கொண்டால் நம் அறிவு குப்பை மேடாகி விடும்.
ஆற்றைக் கடப்பதற்கு முன் ஆற்றில் இதுவரை எத்தனை பேர் அடித்துச் செல்லப்பட்டார்கள், அவர்கள் பட்ட துன்பங்கள் என்ன என்பதைப் பற்றிய தகவலைப் பெறுவதும் அறிவுதான், அந்த அறிவு ஆற்றைஇன்பமாக கடப்பதற்கு ஒருபோதும் பயன்படாது.
பயம் அறிவின் வெளிப்பாடு, அதனால்தான் “இளம் கன்று பயமறியாது “ என்பார்கள்.
ஆதாம்-ஏவாள் காலம் முதல் ஒழுக்கமாணவர்களும், ஒழுக்கம்இல்லாதவர்களும், வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார்கள், நாம் ஒழுக்கம் இல்லாதவர்களைப் பற்றி தெரிந்து கொள்வதையும் அறிவு என்று எண்ணுவதால் அவர்களைப் பற்றிய தகவலையும் நாம் அறிவாக பெருகின்றோம். அதன்விளைவாக நம்மோடு பழகுபவர் களையும் நண்பர்களையும் உறவினர்களையும் அறிவால் ஆராய்வதிலேயே நம்முடைய நேரம் முழுவதையும் செலவு செய்து விடுவதால்,உறவுகளுடன் உணர்வுபூர்வமாக வாழ்வதை தவிர்த்து, வாழ்கையின் இன்பத்தை இழந்து விடுகின்றோம்.
நாம் பெற்ற அறிவின் ஆளுமையில் இருந்து ஒருபோதும் நாம் விடுதலை பெற முடியாது. ஆனால் இந்த கட்டுரையை போன்ற பயனுள்ள அறிவின் ஆளுமையால் சூனிய அறிவின் ஆளுமையை குறைக்க முடியும்.
திருமணம் செய்து கொள்வதற்குமுன் நம் அறிவை பயன்படுத்தி துணையை தேர்ந்தெடுப்பதில் தவறில்லை. ஆனால் திருமணம் ஆன பிறகு அறிவைப் பயன்படுத்தினால் வாழ்க்கை அழிந்து விடும்.
நம் அறிவோடு நாம் படிக்கும் தகவலும் சேர்ந்து பிரிக்கமுடியாத சமமான அறிவாகுவதுபோல், திருமணத்தால் ஆணுடன் பெண்ணும், பெண்ணுடன் ஆணும், இரு மணமும் சேர்ந்து விட்டால் உயர்வு தாழ்வு இல்லை.
திருமணத்துக்கு முன் உயர்ந்தவர், தாழ்ந்தவர், என்ற நிலை இருந்திருக்கலாம் ஆனால் திருமணத்துக்கு பிறகு உயர்ந்தவர், தாழ்ந்தவர், என்ற நிலை இல்லை. இருவரும் சரி சமம் தான்.
திருமணம் என்பது மறுபிறப்புக்கு சமமானது. ஒரு ஆணும் ஒரு பெண்ணும் நான் என்ற உணர்வை கொன்றுவிட்டு நாம் என்ற உணர்வைப் பெற வேண்டும் அப்போதுதான் ஒருவர் மீது ஒருவருக்கு நம்பிக்கை ஏற்படும். நம்பிக்கை தான் வாழ்க்கை உரவுகளை நம்புவதற்கு அறிவோ, முகாந்திரமோ, தேவை இல்லை. என்னுடைய பெற்றோர் அதனால் நம்புகின்றேன், என்னுடைய சகோதரர் அதனால் நம்புகின்றேன், என்னுடைய மனைவி அதனால் நம்புகின்றேன்,என்னுடைய பிள்ளைகள் அதனால் நம்புகின்றேன் என்பது உணர்வின் வெளிப்பாடு, இதுதான் உண்மையான வாழ்க்கை. நம்பிக்கை பொய்த்துப் போனாலும் நம்பிக்கை, வாழ்க்கையை வாழ்ந்த இன்பத்தை நம்பியவருக்கு கொடுக்கும். அதனால் யாரையும் நம்பாமல் ஏமாறாமல் வாழ்பவர் வாழ்ந்தவரல்ல, அவர் வாழ்க்கை சுகத்தை அனுபவிக்காதவர்.
வாழ்க்கையின் உயிர் மூச்சான நம்பிக்கையை செல்வத்தாலோ, அறிவாலோ, வீரத்தாலோ, பெற முடியாது. அன்பாலும், ஒழுக்கத்தாலும், மட்டுமே பெற முடியும்.
திருமணத்திற்குப் பிறகு ஒருவரை ஒருவர் அறிவால் பார்க்கக்கூடாது, உணர்வால் மட்டுமே பார்க்க வேண்டும். நம்முடைய உடலை விட்டு உயிர் பிரிந்தால் வாழ்க்கை இல்லை என்பதை போல் கணவன், மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் பிரிந்தால் இனி ஒரு வாழ்க்கை இல்லை என்பதை உணர்வால் புரிந்து கொள்ளவேண்டும்.இதுதான் இன்பமான திருமண வாழ்க்கைக்கு அடித்தளம்.
ஒருவரை ஒருவர் பிரிந்தாலும் வாழக்கூடிய கட்டமைப்பை உருவாக்கிக் கொண்டே வாழ்ந்தால் அது வாழ்க்கையே அல்ல. அறிவின் ஆளுமை இல்லாமல் உணர்வின் மிகையால் முழுமையாக கணவன் -மனைவியிடமும், மனைவி -கணவனிடமும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டால் மட்டுமே வாழ்க்கை இன்பமாக இருக்கும்.
என்னுடைய ஆய்வின்படி அறிவுபூர்வமாக வாழ்பவர்கள் வாழ்வதுபோல் நடிக்கின்றார்கள், உணர்வுபூர்வமாக வாழ்பவர்கள் தான் உண்மையில் சேர்ந்து வாழ்கின்றார்கள். வெங்காயத்தை உரிக்க உரிக்க கடைசியில் ஒன்றுமே மிஞ்சாது, இது போல் வாழ்க்கை துணையின் ஒவ்வொரு செயலுக்கும் அறிவால் காரணம் கண்டுபிடித்துக் கொண்டே இருந்தால் இருவருக்கும் இடையே அன்பு இருக்காது.
நம்பிக்கைக்கு எடுத்துக்காட்டு “எங்க சின்னராசா”திரைப்படத்தில் பாக்கியராஜ் சித்தியை நம்பியது போல் உறவின் மீது நம்பிக்கை வைத்தால் கெட்டவர்களும் திருந்தி அன்பு பாராட்டுவார்கள் என்பது இயற்கையின் நீதி.
உண்மை காதலுக்கு எடுத்துக்காட்டு குணா திரைப்படத்தில் வருகின்ற கமலஹாசன் தான். உணர்வு பூர்வமாக வாழ்க்கை துணையிடம் தன்னை அர்ப்பணித்து விட்டால் காதலிக்க மறுத்த துணையும் முழு மனதோடு காதலிப்பார்கள் என்பது இயற்கையின் நீதி.
இந்த நீதியை பெறக்கூடிய பொறுப்பும், சக்தியும் நம் கையில் உள்ளது.
வாழ்க்கையில் சாதிப்பதற்கு ஒன்றும் இல்லை ஆனால் உணர்வை பயன்படுத்தி வாழ்வதற்கு பல இன்பங்கள் இந்த உலகில் கொட்டிக் கிடக்கின்றது.இதை உறவுகளால் மட்டுமே பெறமுடியும்.
தாய் மட்டும்தான் இந்த உலகில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் நம்மிடம் பாசம் வைக்கும் ஒரே ஜீவன், ஆனால் நம் அறிவு இதற்கும் காரணம் கண்டுபிடித்துவிடும், ஆம் உனக்கு நான் பிள்ளை இல்லை என்றால் என் மீது பாசம் வைக்க மாட்டிர்கள் என்று. “காரணம் இல்லாமல் காரியம் இல்லை “என்பது உண்மைதான் அதற்காக அறிவு அனைத்துக்கும் காரணத்தை தேடிக் கொண்டே இருந்தால் வாழ்க்கை இன்பமாக இருக்காது.
எங்கள் வீட்டில் நாய் ஒன்றை வளர்த்து வருகின்றோம் அது எங்கள் மீது வைத்திருக்கும் பாசத்திற்கு அளவே இல்லை. இதை பார்த்த நண்பர் நாயின் அன்பை பாராட்டாமல் இது உங்களிடம் அன்போடு இருப்பதற்கு நீங்கள் கொடுக்கும் உணவும், அதனுடம் நீங்கள் செலவு செய்யும் நேரமும்தான் காரணம் என்று கூறினார். இது உண்மைதான் ஆனால் இந்த உண்மை நமக்குத் தேவை இல்லாத அறிவு, இது போல் அனைத்து உறவுகளையும் நாம் பார்த்தால் உணர்வுபூர்வமாக வாழ முடியாது இயந்திர தன்மையோடுதான் இயங்க முடியும். இதுதான் இன்றைய சமுதாயத்தின் நிலை.
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை கணவன், மனைவி பிரிவுக்கு உடல் அல்லது பொருளாதாரம் தான் காரணமாக இருந்தது. ஆனால் இன்று கணவன், மனைவி பிரிவிற்கு கருத்து வேறுபாடுதான் 90 சதவிகிதம் காரணமாக உள்ளது. “கருத்து வேறுபாடு அறிவின் வெளிப்பாடு “ அறிவு என்ற குப்பை இல்லை என்றால் கருத்தே இல்லை. அதனால் தான் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தம்பதிகளுக்குள் கருத்து வேறுபாடு வந்தது இல்லை.
கற்பு ஒருவித அறிவு இன்மை, இந்த அறிவு இன்மை ஒருவரிடம் இருப்பதால்தான் அவர் புனிதமாக இருக்கின்றார். அறிவு இன்மையும் ஒரு புனிதம்தான்.
இன்பமான திருமண வாழ்க்கையை வாழவேண்டும் என்றால்
1)துணையை அறிவால் ஆராயாதீர்கள்,
2)துணையிடம் முழுமையாக உங்களை அர்ப்பணித்துவிடுங்கள்.
இரண்டையும் செய்தால் பொய் சொல்ல மாட்டீர்கள் பொய் சொல்லாததால் இருவரிடமும் நம்பிக்கை பிறக்கும், ஒருவரை ஒருவர் நம்பி விட்டால் உலகம் உங்கள் கையில்.
வாழ்க பல்லாண்டு இனிய திருமண வாழ்த்துக்கள்.
வழிகாட்டுவதால் ஒருவர் உயர்ந்தவர் ஆகிவிட முடியாது. பயணித்த அனுபவம் இல்லாத கைகாட்டி பலகையும் நமக்கு சரியான வழியைக் காட்டுவது போல், என்னுடைய வழிகாட்டுதலும் இருக்குமே தவிர சமகாலத்தில் வாழ்கின்ற சக மனிதர்களைப் போல் நானும் உணர்வுக்கும், அறிவுக்கும் இடையில் போராடிக் கொண்டிருக்கும் சராசரி மனிதன்தான்.
in Opinion