தமிழக மின்துறை அமைச்சரின் பார்வைக்கு இந்த கட்டுரை சென்று அனைவரின் உரிமையும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக நான் இந்த கட்டுரையை எழுதி இருக்கின்றேன், எனவே அனைவரும் பகிருங்கள். அரசியலமைப்பு சட்டம் பிரிவு 14, அனைவரும் சமம் என்பதை உறுதி செய்யும் வகையில் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் நடவடிக்கைகள் இருக்க வேண்டும். தமிழக அரசின் மின் கணக்கீட்டு முறையில் முதல் 100 யூனிட் வரை அனைவருக்கும் இலவசம். 200 யூனிட்டுக்குல் பயன்படுத்தினால் 100 யூனிட் முதல் 200 யூனிட் வரை யூனிட் ரூபாய் 1.50. 500 யூனிட்க்குல் பயன்படுத்தினால் 100 யூனிட் முதல் 200 யூனிட்வரை 2 ரூபாய். 200 யூனிட் முதல் 500 யூனிட் வரை3.00ரூபாய். முதல் 100 யூனிட் அனைவருக்கும் இலவசம் என்பதுபோல் 200 யூனிட் வரை அனைவருக்கும் யூனிட் ரூபாய் 1.50 என்றால் தான் அனைவரும் சமம். இந்தக் கணக்கீட்டு முறையால் தமிழக மின் வாரியத்துக்கு இழப்பு ஏற்பட்டால் 500 யூனிட்வரை பயன்படுத்துபவர்களுக்கு யூனிட் ரூபாய் 3 இல் இருந்து 3.50 ஆக மாற்றி அமைக்கலாம் தவறு இல்லை. ஒருவருடைய கூடுதலான பயன்பாட்டிற்கு கூடுதலான கட்டணம் செலுத்துவதில் எந்தத் தவறும் இல்லை, ஆனால் கூடுதலான பயன்பாட்டிற்கு ஒருவருடைய உரிமையை பறிப்பது தான் தவறு. தனி நபர் வருமான வரி கணக்கிடும் முறையில் 2.5 லட்சம் வரை அனைவருக்கும் வரி இல்லை. 2.5 லட்சம் முதல் 5 லட்சம் வரை 5 சதவிகிதம். 5 லட்சத்திற்கு மேல் சென்றால் 5 இலட்சத்திற்கு மேல் உள்ள வருமானத்திற்கு மட்டும்தான் 20 சதவிகிதம். 5 லட்சம் வரை அனைவருக்கும் 5 சதவிகிதம்தான் என்பதைப்போல், ராமசாமிக்கு 200 யூனிட் வரை யூனிட்டுக்கு ரூபாய் 1.50 என்றால் குப்புசாமிக்கும் 200 யூனிட் வரை யூனிட்டுக்கு ரூபாய் 1.50 தான் இருக்க வேண்டும். கூடுதல் பயன்பாட்டிற்கு மட்டும் கூடுதல் கட்டணம் வசூலிப்பதில் தவறு இல்லை. தற்போது உள்ள கணக்கீட்டு முறை அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 14 க்கு எதிரானது. 500 யூனிட்டுக்கு மேல் ஒரு யூனிட் பயன்படுத்தினாலும் 600 ரூபாய் கூடுதலாக கட்டவேண்டும் என்ற பகல் கொள்ளை முடிவுக்கு வரவேண்டும். தன் முதுகில் உள்ள அழுக்கு, தனக்கு தெரியாது என்பது போல், ஒன்றிய அரசும், மாநில அரசும் மாறி மாறி குறை சொல்வதை நிறுத்திவிட்டு, தன்னிடம் உள்ள குறைகளை சரி செய்ய முன்வரவேண்டும்.