திருமணமான ஒரு ஆண்மகனுக்கு இன்றுவரை தீராத குழப்பம், தாய்க்கும், மனைவிக்கும் இடையே மாறுபட்ட கருத்து வேறுபாடு ஏற்பட்டால் யாரை ஆதரிப்பது என்பது தான். இதற்கு பலரும் பல கருத்துக்களை பதிவு செய்து இருந்தாலும் அது அவர்களுடைய கருத்தாகதான் உள்ளதே தவிர, அதற்கான தெளிவு இல்லை. அதை தெளிவு படுத்தவே இந்த பதிவு.
முக்காலத்தையும் உணர்ந்தவன் இந்த உலகில் யாரும் இல்லை, ஆனால் முக்காலத்திலும் வாழ்பவன் தான் மனிதன்.
விலங்குகள் நிகழ்காலத்தில்மட்டும் தான் வாழ்கின்றன, ஆனால் மனிதன் இறந்த காலத்தின் நினைவிலும் வாழ்கின்றான், நிகழ்காலஇன்பத்திலும் வாழ்கின்றான், எதிர்காலகனவிலும் வாழ்கின்றான். இந்த சிறப்பு தான் மனிதனை விலங்குகளிடமிருந்து தனித்துவப் படுத்துகின்றது.
சில மனிதர்கள் இதிலிருந்து மாறுபட்டு இறந்த காலத்தின் நினைவுகளிலேயே வாழ்பவர்களும் உண்டு, ஒருசிலர் எதிர்கால கனவுகளிலேயே வாழ்பவர்களும் உண்டு, சிலர் விலங்குகளை போல் இறந்தகாலநினைவுகளும், எதிர்கால கனவுகளும் இல்லாமல் நிகழ்காலத்தில் மட்டுமே வாழ்பவர்களும் உண்டு.
திருமணமான ஒரு ஆணுக்கு தாய் இறந்தகால நினைவுகள், மனைவி நிகழ்கால வாழ்க்கை, பிள்ளைகள் எதிர்கால கனவுகள், இந்த மூன்றில் ஒன்றுக்காக மட்டுமே ஒருவன் வாழ்ந்தால் அவன் மனிதன் அல்ல!
நிகழ்காலத்தின் சுகத்தில் இறந்த காலத்தை மறந்து வாழ்ந்தால் அவன் மனிதன் அல்ல !
இறந்த காலத்தின் நினைவுகளில் நிகழ்காலத்தை இழந்தாலும் அவன் மனிதன் அல்ல !!
தாய் நம்மை வளர்த்த தெய்வம் !
தாரம் நம்மை வாழவைக்கும் தாய் !!
இந்த இரண்டில் ஒன்றை மட்டும் நாம் நேசித்தால் மிருகமாகிவிடுவோம் !!!
தாய்க்கும், தாரத்துக்கும் இடையே ஒரு தலைமுறை கால இடைவெளி உள்ளதால் பெற்றோர்களுக்கும், பிள்ளைகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு உள்ளது போல் தாய்க்கும், தாரத்துக்குமான கருத்துவேறுபாடு தவிர்க்க முடியாத ஒன்று.
“அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ்”
என்பதை அறியாமல் தாய் தான் உயர்ந்தது அல்லது தாரம் தான் உயர்ந்தது என்று சொல்வது தவறு. உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்று அன்பை ஆணவத்தால் யாரும் பெற முடியாது, அன்பை அன்பால் மட்டுமே பெற முடியும் என்பதை தாயும், தாரமும் உணர்ந்தால்தான் திருமணமான ஆண் மனிதனாக வாழ முடியும்.