13 March 2019
by
Vijayakumaran
பெண் பாவம் பொல்லாதது, கண்ணகிக்கு ஏற்பட்ட கொடுமையால் மதுரை மாநகரமே தீயில் அழிந்தது என்பது வரலாற்று உண்மை. எனவே இப்போது பல பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாவதால் இந்த நாடு தீப்பற்றி எரிந்து அழியும் காலம் வெகு தொலைவில் இல்லை என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும்.
பொள்ளாச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட செய்தியை நக்கீரன் கோபால் அவர்களின் நேர்காணலை 9 நிமிடம் மட்டுமே என்னால் பார்க்க முடிந்தது. அண்ணா என்று அந்தப் பெண் கதறுகின்றார், என்னால் அதற்கு மேல் அதை கேட்க கூட முடியவில்லை, பயமும் பதற்றமும் என்னை கவ்விக் கொண்டது, அதிலிருந்து நான் மீண்டு வர இரண்டு நாட்கள் ஆகிவிட்டது அதன் பிறகே இந்த கட்டுரையை எழுதினேன்.
அண்ணா என்று கதறியும் அந்த மிருகம் அதை பொருட்படுத்தவில்லை என்றால், பெண்களை இந்த சமுதாயம் எப்படி பார்க்கிறது என்பதற்கு இதுவே சான்று. 30 ஆண்டுக்கு முன்பு ஒரு பெண் ஒரு ஆணை அண்ணா என்று சொல்லி விட்டால் அவன் பார்க்கும் பார்வையே மாறிவிடும், அண்ணா என்ற வலிமையான ஆயுதத்தை அந்த பெண் பயன்படுத்தியும் அது அந்தப் பெண்ணுக்கு பலன் தரவில்லை என்றால் அதற்கு யார் காரணம் ?பெண்களே தான். ஆம் பொதுவெளியில் தவறாக பழகும் பெண்கள், பொதுவெளியில் பார்ப்பவர்கள் தவறாக நினைக்க கூடாது என்று அண்ணா என்று சொல்லி இந்த சமுதாயத்தை அந்த பெண் ஏமாற்றியதால் தான் இந்தப் பெண்ணுக்கு அண்ணா என்ற உணர்வுபூர்வமான வார்த்தை ஆயுதமாக பயன்படவில்லை.
நாம் செய்கின்ற செயல்கள் அனைத்துக்கும் எதிர்வினை உண்டு. நாம் செய்கின்ற தவறுகள் முதலில் சமுதாயத்தைப் பாதிக்கும், பிறகு நம்மையும், நம்முடைய சந்ததிகளையும் பாதிக்கும் என்பது அறிவியல் விதி.
ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்பது பழமொழி. ஆம், இது போன்ற நிகழ்வுகளை கேட்டவுடன் ஆத்திரத்தில் தவறு செய்தவனை தூக்கிலிட வேண்டும் என்று சொல்வது அனைவரின் இயல்பு. ஆனால் ஊடகங்களும், முக்கிய பிரமுகர்களும், அரசியல் தலைவர்களும், கருத்தை பதிய வைப்பது அவர்களை நல்லவர்களாக மக்களிடம் காட்டிக் கொள்வதற்கான முயற்சியே தவிர, மீண்டும் இதுபோன்ற குற்றச் செயல் நடக்கக் கூடாது என்ற முயற்சி இவர்களுக்கு இருந்தது இல்லை.
ஊடகங்கள், மக்கள் விரும்பும் செய்தியை சொன்னால்தான் அந்த தொழிலை அவர்கள் தொடர்ந்து செய்ய முடியும் என்பது உண்மையாக இருந்தாலும், ஊடகங்கள் மக்களுக்கு எது நல்லதோ அதை மக்களிடம் சொன்னால் தான் அனைவரும் வாழ முடியும்.
மக்களை அழித்துவிட்டு ஊடகம் மட்டும் வளர முடியாது என்பதை நினைவில் வைத்துக் கொண்டு ஊடகங்கள் செயல்பட வேண்டும்.
டெல்லி பேருந்தில் பாலியல் வன்கொடுமை முதல் சென்னை சிறுமி ஹாசினி, உடுமலைப்பேட்டை சங்கர் கொலை வரை, தூக்குத்தண்டனை குற்றங்களை குறைக்காது, எய்தவனை விட்டுவிட்டு அம்பை குற்றம் சொல்வதில் பயனில்லை என்ற என்னுடைய கருத்தை தொடர்ந்து பதிவு செய்து வருகின்றேன்.
காதலிக்க முயற்சி செய்தால் குற்றம் !காதலித்தால் குற்றமல்ல ! இது என்ன சட்டம் ?இது என்ன நீதி ? எந்த ஊடகமாவது கேள்வி கேட்டது உண்டா ?முயற்சி செய்யாமல் காதல் எப்படி சாத்தியமாகும்?.
திருமணத்துக்கு முன் காதலிப்பது தவறில்லை என்பது இளம்பெண்களுக்கு எதிரான பாவம், அந்த பாவத்தின் எதிர்வினைதான் பொள்ளாச்சி சம்பவம்.
ஆடு நனைகின்றது என்று ஓநாய் கவலைப்படுவது போல், பெண்ணுரிமையைப் பற்றிப் பேசுபவர்களில் பெரும்பாலானவர்கள் ஒழுக்கமில்லாத ஆண்களே.
ஒழுக்கமான சமுதாயத்தை உருவாக்கிய பிறகு ஒழுக்கம் இல்லாதவனுக்கு தண்டனை கொடுப்பது தான் நீதி.
குற்றம் இல்லாத சமுதாயத்தை உருவாக்க நான் எழுதிய புத்தகங்களால் மட்டுமே சாத்தியம். இதில் அனைத்துக்கும் தீர்வு உள்ளது. எனக்கு பேரும் வேண்டாம், பணமும் வேண்டாம், என்னுடைய எழுத்தை ஊடகங்களும் அரசியல் தலைவர்களும் எடுத்துக் கொள்ளுங்கள்.குற்றமில்லா சமுதாயம் உதயமாக வேண்டும்.
இனி இதுபோன்ற பெண் கொடுமை நம் நாட்டில் நடக்கக் கூடாது என்பதே அனைவரின் விருப்பமாக இருக்க வேண்டும். அதற்கு நாம் முதலில் ஒழுக்கமானவர்களாக மாறுவோம்.
in Opinion