தவற்றை உணர்ந்து மன்னிப்பு கேட்பதும், மன்னிப்பு கேட்பவரின் உண்மையை புரிந்து மன்னிப்பதும், இரண்டும் சரிசமமான மேன்மையான செயல்.
மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்பது, மன்னிக்கும் பண்புக்கு சமமானது. தவறு செய்தவர் தன் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்பது தன்னை உயர்த்திக்கொள்ள கிடைத்த வாய்ப்பு.
தான் செய்த தவற்றிர்க்கும், குற்றத்திற்கும், பாவத்திற்கு மான விடுதலையே பாவமன்னிப்பு. தன்னுடைய தவற்றை உளமார உணர்ந்து இறைவனிடம் பாவ மன்னிப்பு கேட்டால் இறைவன் மன்னிப்பார் என்பது நம்பிக்கை. இது உண்மைதான் தவறு செய்யாதவன் மனிதனாக இருக்கின்றான், தவறு செய்தவன் தன் தவற்றை உணர்ந்து மன்னிப்பு கேட்கும் போது மாமனிதனாக உயர்கின்றான். இதுவே கடவுள் (இயற்கை ) மன்னித்ததற்கு சான்று.
அன்றாட வாழ்வில் தான் செய்த தவறில் இருந்து தப்பித்துக் கொள்வதற்கு கேட்கும் மன்னிப்பும், காலத்தை கடந்து செல்ல, மனமில்லாமல் மன்னித்ததைப் போல் பாவனை செய்வதும், தன்னை உயர்த்திக் கொள்ள கூடிய வாய்ப்பை இருவரும் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பதையே காட்டுகின்றது.
மன்னிப்பு கேட்பதும், மன்னிப்பதும் மனித குலத்திற்கு கிடைத்த வரம். இதைப் புரிந்து கொள்ளாமல் மன்னிப்பு கேட்பவரை இழிவாகவும், மன்னிப்பவரை ஏமாளியாகவும் பார்க்கும் நம் சமுதாயத்தில் இரண்டையும் மேண்மையாக பார்க்கும் நிலை உருவாக வேண்டும்.