திருமணம் செய்து கொண்டு வாழும் தம்பதியர்கள் ஒவ்வொருவருக்கும் திருமண வாழ்க்கை வேறு வேறு அனுபவத்தை கொடுத்திருக்கும், இந்த உலகில் ஒருவருடைய மணவாழ்க்கை அனுபவம் போல் வேறு ஒருவருக்கு இருக்காது,எனவே திருமணத்தைப் பற்றிய கருத்து ஒருவருக்கு ஒருவர் மாறுபட்டு தான் இருக்கும் .
திருமண வாழ்க்கையில் யார் ,யாருக்கு பொருத்தமாக இருப்பார் என்று யாராலும் சொல்ல முடியாது. 30, 40 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த பிறகுதான் தம்பதிகளுக்கு தெரியும் அவர்களுக்குள் பொருத்தம் இருந்ததா,இல்லையா என்று .
திருமண வாழ்க்கையில் ஆணும், பெண்ணும் சேர்ந்து வாழ்வது என்பது ஒரு கலை .
ஒழுக்கமாக ,நேர்மையாக, வெளிப்படையாக இருந்தும் பலர் சேர்ந்து வாழ்த்தது இல்லை ,ஆனால் ஒழுக்கம் இல்லாத ,நேர்மைஇல்லாத,வெளிப்படைத்தன்மை இல்லாத பலர் சேர்ந்து வாழ்கின்றார்கள் எப்படி!
திருமணத்திற்கு முன் ஒழுக்கமில்லாமல் சுற்றித்திரிந்தவன் திருமணத்திற்கு பிறகு உயர்ந்த நிலைக்கு சென்றவர்களையும் நாம் பார்க்கலாம், திருமணத்திற்கு முன் நல்லநிலையில் இருந்தவர்கள் திருமணத்திற்குப் பிறகு வாழ்க்கையில் ஈடுபாடு இல்லாமல் சலிப்பில் வாழ்பவர்களையும் பார்க்கலாம்.
கோயில் சுவர்களில் பார்த்திருப்பீர்கள் மேடு பள்ளம் என்று ஒழுங்கில்லாத கற்களை வைத்து சிறிய சந்து கூட இல்லாமல் ஒரு கற்களுக்கு மேல் மற்றொரு கற்களை மேடு பள்ளங்களுக்கு தகுந்தாற்போல் பொருத்தி கோயிலை கட்டியிருப்பார்கள்,ஒழுங்கு இல்லாத கற்களை பொருத்தி அனைவரும் வணங்க கூடிய அற்புதமான கோயிலை கட்டுவது போல் ,திருமண வாழ்க்கையில் கணவன் மனைவிக்குள் மாறுபட்ட கருத்துக்கள் ,உணர்வுகள் ,விருப்பங்கள் என்று பல முரண் இருந்தாலும் சிறு சிறு விட்டுக்கொடுத்தல் மூலம் இருவரின் கருத்துக்களையும் ,உணர்வுகளையும் ,விருப்பங்களையும் பொருத்தி வாழ்வதன் மூலம்தான் இல்லறம் என்ற கோட்டையைக் கட்டி வாழ முடியும்.
அலைகள் இல்லாத கடல் இல்லை என்பது போல், முரண்கள் இல்லாத தம்பதிகளே இந்த உலகில் இல்லை .
அலைகள் தான் கடலுக்கு அழகு!
தம்பதிகளுக்குள் இருக்கும் முரண்கள் தான் வாழ்க்கைக்கு அழகு!!