இளையராஜா அவர்கள் ஆஸ்கார் விருது வாங்காதது இளையராஜா இயலாமையா ? அல்லது இளையராஜாவிற்கு ஆஸ்கார் விருது கிடைக்கவில்லை என்று வருந்துவது ரசிகர்களின் அறியாமையா?
யார் சிறந்த தாய் என்பதை பெற்ற பிள்ளைகள் சொல்வது தான் சரியாக இருக்குமே தவிர வேறொரு தாயின் பிள்ளை சொல்வது சரியாக இருக்காது.
இசையை அமைப்பது அறிவு சார்ந்ததாக இருந்தாலும் இசை உணர்வை அடிப்படையாகக் கொண்டது, இந்த மக்களின் உணர்வை எந்த இசை தூண்டுகின்றதோ அதுவே சிறந்த இசை.
நம் மொழி தெரியாத, நம் பண்பாடு தெரியாத, நம் உணர்வை புரிந்து கொள்ள முடியாத அமெரிக்கர்களால் நம்முடைய இசையை எப்படி உணர்வுபூர்வமாக உள்வாங்க முடியும்.
ஆஸ்கர் விருது ஆங்கிலத் திரைப்படங்களுக்காக உருவாக்கப்பட்ட விருது. அதில் உள்ள தேர்வாளர்கள் ஆங்கிலத்தை தாய் மொழியாக கொண்டவர்கள் என்பதால் ஆஸ்கர் விருது என்பது ஆங்கில படத்திற்கான விருது மட்டுமே. உலகத்திலேயே உயரிய விருது ஆஸ்கார் விருது என்று நினைப்பது தவறான புரிதல்.
ஆங்கிலம் படம் பார்த்துவிட்டு அதில் வரும் சிறு குழந்தைகள் ஆங்கிலம் எப்படி சிறப்பாக பேசுகின்றது என்று தாழ்வு மனப்பான்மையுடன் வாழ்ந்த சமுதாயம் தான் நம் சமுதாயம் என்பதன் தொடர்ச்சி தான் ஆஸ்கார் விருதின் மீது நமக்கு உள்ள மரியாதை.
ஏ ஆர் ரகுமானுக்கு ஆஸ்கர் விருது கொடுக்கப்பட்டது ஆங்கில படத்திற்கு இசையமைத்ததற்காக மட்டுமே தவிர இளையராஜாவை விட சிறந்த இசையை அமைத்தற்காக அல்ல என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். மேலும் எந்த ஒரு விருதாக இருந்தாலும் அனைத்தும் இன்றைய வியாபார உலகில் அனைத்தும் வியாபாரமாக ஆகிவிட்டதால் ஏ ஆர் ரகுமான், சோனி நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டு கொண்டதால் வியாபார நோக்கத்துக்காக கொடுக்கப்பட்ட விருதுதான் ஆஸ்கார் விருது.
வியாபார நோக்கத்திற்காகவே பாமர மக்களிடம் ஆஸ்கர் விருதை பெரிய சாதனையாக உருவகப்படுத்தப்பட்டுள்ளது.
“காசுக்கா…பேருக்கா …ஆசை நான் பட்டது. .வேறு ஏதும் சொல்ல வரல “என்று இசைஞானி பாடியது போல் விருதுகளுக்கு ஆசைப்படாமல் விருதுகள் ஆசைப்படும் கலைஞர் இசைஞானி !
இசைஞானி இளையராஜா எனும் தாயின் தாலாட்டில் தன்னை மறந்து உணர்வில் தளிர்க்கும் ரசிகர்களின் விருதுகளுக்கு ஒருபோதும் ஆஸ்கார் இணையாகாது.