4 March 2025
by
Vijayakumaran
வாழ்க்கையின் நோக்கம்.. அனைவருக்கும் ஆனந்தமாக வாழ வேண்டும் என்பதுதான், ஆனந்தம் எனும் உணர்வை அடைவதற்கு தான் அறிவு தேவைப்படுகின்றதே தவிர அறிவாக வாழ வேண்டும் என்பது வாழ்க்கையின் நோக்கம் அல்ல.
நாம் பெற்றிருக்கும் அறிவு நமக்கு இன்பத்தை கொடுத்தால் அது நல்லறிவு,துன்பத்தைக் கொடுத்தால் அதற்கு அறிவு சூனியம் என்று பொருள். பலர் அனைத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று எண்ணி அறிவு சூனியத்தால் துன்பத்தில் வாழ்கின்றார்கள் எது நல்லறிவு,எது அறிவு சூனியம் என்பதை அறிந்து நல்லறிவை மட்டும் மூளைக்கு தெரியப்படுத்துவது தான் ஏழாவது அறிவு.அதாவது கெட்டதை பார்க்காமல், கெட்டதை கேட்காமல், கெட்டதை உணராமல் இருப்பது தான் ஏழாவது அறிவு.
சாதனைகள் வாழ்க்கையின் நோக்கம் அல்ல, சாதனைகளால் நாம் பெறும் பேர், புகழ், செல்வத்தால் கிடைக்கும் இன்பம் தான் வாழ்க்கையின் நோக்கம்.
இந்த உலகில் அனைத்து செல்வத்தையும் பெற்றவர்கள் இன்பமாக வாழ்வதைவிட எதுவும் இல்லாமல் இன்பமாக வாழ்பவர்களே அதிகம்.
200 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ராஜாவை விட சுகமான வாழ்க்கையை இன்று வாழும் நடுத்தர மக்கள் வாழ்கின்றார்கள்,ஆனால் மக்களிடம் மனநிறைவு இல்லை, காரணம் தன்னிடம் இருப்பதை பார்த்து ஆனந்தப்படாமல் இல்லாததை நினைத்து துன்பப்படுபவர்கள் தான் அதிகம்.
திராட்சைத் தோட்டத்திற்கு சென்ற புத்திசாலி நரி திராட்சையை பறிக்க துள்ளித் துள்ளி பார்த்துவிட்டு பழத்தை பறிக்க முடியவில்லை என்ற உடன் சீ.. சீ இந்த பழம் புளிக்கும் என்று சொல்லிவிட்டு வேறு ஒரு உணவைத் தேடி சென்றது போல்,நமக்கு கிடைக்காத ஒன்றை எண்ணி துன்பப்படாமல் வேறு ஒன்றைத் தேடி செல்வதுதான் புத்திசாலித்தனம். இந்த வாழ்க்கை கல்வியை சிலர்தான் தன் பிள்ளைகளுக்கு சிறுவயதிலிருந்தே சொல்லிக் கொடுத்து வளர்க்கின்றார்கள்.சில பெற்றோர்கள் குழந்தைகளிடம் நீ மருத்துவரானால் தான் வாழவே முடியும் என்பதை போன்ற அழுத்தத்தை பிள்ளைகளுக்கு அளவுக்கு அதிகமாக கொடுக்கும் பொழுது பிள்ளைகளும் அதை நம்பி தனக்கு விரும்பியது கிடைக்கவில்லை என்பதால் விபரீத முடிவுகளை எடுக்கின்றார்கள். இதற்கெல்லாம் பெற்றோர்களின் அறியாமையும் அவர்கள் வாழும் சமூக சூழலுமே காரணம்.
20 ஆண்டுகளுக்கு முன் எங்களுடைய வீட்டுக்கு பக்கத்தில் என்னுடைய நண்பரின் வீடும் இருந்தது, நண்பரின் மகன் விஜயராகவன் தினமும் எங்கள் வீட்டிற்கு வந்து என்னுடைய மகனுடன் கிரிக்கெட் விளையாடுவான். ஒரு நாள் என்னுடைய மகனுக்கு புதியதாக விலை உயர்ந்த செருப்பு வாங்கிக் கொடுத்திருந்தேன் அதை விஜயராகவனிடம் காண்பித்து செருப்பின் சிறப்பை என் மகன் சொல்லிக்கொண்டிருந்தான். அதற்கு அவன் ஒரே வார்த்தையில் செருப்பு என்றால் எல்லாம் செருப்பு தான் என்று சொல்லிவிட்டு போய்க்கிட்டே இருந்தான் அதை நான் பார்த்து ஆச்சரியப்பட்டேன்.அந்த ஏழு வயசு பையனின் செயல் எனக்கு அற்புதமான வாழ்வியல் அறிவைக்கொடுத்தது.
பிராமின் சமுதாயத்தை சேர்ந்த ஏழு வயது பையன் தனக்கு கிடைக்காத ஒரு பொருளைப் பார்த்து ஏங்காமல் புத்திசாலி நரியை போல் கிடைக்காததை பற்றி கவலைப்படாமல் கடந்து செல்கின்றான் என்றால் அவனுடைய குடும்பத்தின் வாழ்க்கை முறையும், பெற்றோர்களும் அவனுக்கு கொடுத்த அறிவு தான் காரணம்.
புத்திசாலி நரியை போல் கிடைக்காத ஒன்றை பிடிக்காத ஒன்றாக நினைப்பது ஒன்றே வாழ்க்கையின் இன்பத்திற்கான கருவாக இருக்கும்
சீ..சீ..இந்த பழம் புளிக்கும் என்று கிடைக்காத பழத்தைப் பார்த்து சொல்லி விட்டுச் செல்லும் நரியை போல், மற்றொரு நரி முற்போக்குவாதி, பகுத்தறிவாளி என்ற போர்வையில் இருக்கின்றது, அந்த நரி தனக்கு கிடைக்காத பழத்தை மற்றவர்கள் வைத்திருந்தால் அது புளிக்கும் தூக்கிப்போட்டு விடுங்கள் என்று சொல்லிக் கொண்டே திரியும், இது ஒரு வகை சூழ்ச்சியான நரி.
பணம் சம்பாதிக்க முடியாதவன், பணம் சம்பாதிப்பவனிடம் பணத்தை மனிதன் ஏன் தான் கண்டுபிடித்தான் என்று பணத்தை வெறுப்பது போல் பேசி சம்பாதிப்பவனை கெடுப்பான்.
தன் சாதியை விரும்பாதவன், வெறுப்பவன் குடும்பங்களின் குடும்பமான சாதிய அமைப்பை ஒழிய வேண்டும் என்று பேசுவான்.
குடும்ப அமைப்பில் வாழாதவன் குடும்ப அமைப்பை பெண் அடிமைத்தனம் என்று பேசுவான்.
ஒழுக்கம் இல்லாமல் பல பெண்களுடன் பொறுப்பில்லாமல் வாழ்பவன்,திருமணத்தை பிற்போக்குத்தனம் என்பான்,தாலியை கழட்டி எறிய சொல்வான்,கற்பை கேலி செய்வான், மொத்தத்தில் இவனுக்கு யாரும் ஆனந்தமாக வாழ கூடாது.
மதங்களின் ஒழுக்கத்தை, நீதியை, கோட்பாட்டை கடைபிடிக்காதவன் மதம் ஒழிய வேண்டும் என்பான்.
2000 ஆண்டுக்கு முன் சாதி,மதம் இல்லாமல் வாழ்ந்த கற்கால மனிதனின் வாழ்க்கை முறையை சரி என்பான் ஆனால் தன்னை முற்போக்குவாதி என்று சொல்லிக் கொண்டு பிற்போக்கு வாதியாக நடந்து கொள்வான்.
இவர்களை நாம் எளிதில் அடையாளம் காணலாம் தனக்கு கிடைக்காததை மற்றவர் அடையக்கூடாது என்று ஒருவன் நினைத்தால், பேசினால், நடந்துகொண்டால் அவனிடமிருந்து நாம் விலகி இருப்பது நமக்கும், நம் சமுதாயத்துக்கும், நாட்டுக்கும் நல்லது.
in Opinion