குழந்தைகளை பார்த்தால் சிலர் குழந்தைகளாகவேமாறி அவர்களிடம் விளையாடுவார்கள், இதனால் குழந்தைகள் அவர்களிடம் மிகவும் அன்பாக இருக்கும்.அந்த ஒரு சிலரில் நானும் ஒருவன். குழந்தைகளுடைய கள்ளமில்லா முகம் எனக்கு மிகவும் பிடிக்கும் எனவே நான் குழந்தைகளை வேற்றுமை பாராமல் கட்டித் தழுவிக்கொள்வேன், பதிலுக்கு குழந்தைகளும் என் மீது அன்பு கொண்டு முகத்தோடு முகம் வைத்து அணைத்துக் கொள்ளும் போது என்னையே நான் மறந்துவிடுவேன், குழந்தைகள் தெய்வத்துக்கு மேலானவர்கள், அவர்களின் முகத்தை பார்த்தால் துன்பம் அனைத்தும் பறந்தோடிவிடும். குழந்தைகளிடம் நாம் கற்றுக் கொள்ளக்கூடியவை ஏராளம்.
அனைவருக்கும் புரிய வேண்டும் என்பதால் உண்மை சம்பவத்தை பதிவிட விரும்புகின்றேன். என் உறவினர் மகன் இரண்டாம் வகுப்பு படிக்கின்றான், அவன் குழந்தையிலிருந்து என்னிடம் மிகவும் அன்பாக இருப்பான்,அவனிடம் பெரியப்பாவை உனக்கு பிடிக்குமா என்று கேட்டேன், கேட்ட உடனே பிடிக்கும் என்று பதில் சொன்னான், ஏன் என்று கேட்டேன், சிறிது நேரம் யோசித்துவிட்டு நீங்கள் அழகாக இருக்கீங்க இல்ல.. அதனால் தான் பிடிக்கும் என்று பதில் சொன்னான்.இதைக் கேட்டு வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் சிரித்தார்கள், காரணம் நான் அந்த அளவுக்கு கருப்பா அசிங்கமா இருப்பேன் உலக பார்வையில், அதைக் கேட்ட அவனின் அம்மா நீ எதை வேண்டுமானாலும் சொல்லு ஆனா பெரியப்பா அழகா இருக்காங்க என்று மட்டும் சொல்லாதே என்று சொல்லியும், மீண்டும் யோசித்துவிட்டு பெரியப்பா அழகா தான் இருக்காங்க அதனால் தான் எனக்கு பிடிக்கும் என்று உறுதியாக கூறினான்.அவன் என் முகத்தில், அகத்தை பார்த்து சொல்கின்றான் என்பதை நான் புரிந்து கொண்டேன்.
குழந்தைகளிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியது, அழகு —-முகத்தில், தோலின் வண்ணத்தில், மற்றும் விலை உயர்ந்த பொருட்களை பயன்படுத்துவதில் இல்லை. நம்முடைய அழகு மற்றவர்களிடம் நாம் அன்பு செலுத்துவதில் மட்டும் தான் உள்ளது. எனவே உயர்ந்தவர், தாழ்ந்தவர்,என்ற வேற்றுமையின்றி அனைவரிடமும் அன்பாக பழக முயற்சி செய்வோம் !
அனைவருக்கும் அழகாக தெரிவோம்!!