ஒரு மனிதனின் சிந்தனையும், செயலும் அவனுக்கு கட்டுப்பட்டு இல்லை, தொடர்வினைதான் அனைவரையும் இயக்குகின்றது என்பதையும், நாம் அனைவரும் ஒவ்வொரு நாளும் அறிவாலும், உணர்வாலும் புதிய மனிதனாக மாறிக்கொண்டே இருக்கின்றோம் என்பதையும் அறிவியல் ஆதாரத்தோடு நிரூபித்து ஆய்வு கட்டுரைகளை 15 ஆண்டுகளுக்கு முன்பே எழுதி விட்டேன். இருப்பினும் புதிய நீதி உருவாகவில்லை.
இந்த அறிவியல் உண்மையை ஆதாரமாக வைத்து உச்சநீதிமன்றம் புதிய நீதியை உருவாக்க வேண்டும்.மாறாக ஒருவன் செயலுக்கு அவன்தான் காரணம் என்ற பழைய நம்பிக்கையிலேயே நீதித்துறை செயல்பட்டால் அது மூடநம்பிக்கை.
மூட நம்பிக்கையின் அடிப்படையில் செயல்படுவது முட்டாள்தனம். எனவே நீதித்துறை முட்டாள்தனமாக செயல்படாமல் தூக்கு தண்டனையை தடை செய்ய வேண்டும்.
தவறு செய்தவன் இந்த சமுதாயத்தின் தொடர்வினையால் பாதிக்கப்பட்டவன் என்ற புரிதலோடும், தண்டனை கொடுக்காவிட்டால் அதுவே குற்றங்களுக்கான தொடர்பினை ஆகிவிடும் என்ற புரிதலோடும் குற்றவாளிக்கு தண்டனை கொடுக்க வேண்டும்.
உணர்வாலும், அறிவாலும் ஒவ்வொரு நாளும் நாம் இயற்கையால் புதுப்பிக்கப்படுவதால் கடும் குற்றம் செய்தவன் 15 ஆண்டுகள் ஆனால்தான் திருந்துவான் என்று ஆயுள் தண்டனை கொடுப்பது தவறு.எனவே ஆயுள் தண்டனையை 5 ஆண்டாக குறைக்க வேண்டும்.
குற்ற செயலுக்கான தொடர்வினையின் காரணத்தை கண்டறிந்து அவர்களுக்கும் தண்டனை கொடுக்க வேண்டும். உதாரணத்திற்கு திரைப்படம் காரணமாக இருந்தால்,அரசியல் தலைவர் காரணமாக இருந்தால், சாதி தலைவர்கள் காரணமாக இருந்தால், சமுதாயத் தலைவர்கள் காரணமாக இருந்தால், ஆன்மீகவாதிகள் காரணமாக இருந்தால், திரைப்பட நடிகர்கள் காரணமாக இருந்தால், எழுத்தாளர்கள் காரணமாக இருந்தால், யார் காரணமாக இருந்தாலும் அவர்களுக்கும் தண்டனை கொடுக்க வேண்டும்.குற்றத்தின் தொடர் வினைக்கான காரணம் அறிந்து அதை தடை செய்தால் மட்டுமே குற்றங்கள் குறையும்.
ஒருவரின் செயலுக்கு அவரே தான் காரணம் என்ற மூடநம்பிக்கை அடிப்படையில் நீதி இல்லாமல், தொடர் வினை தான் காரணம் என்ற அறிவியல் அறிவின் அடிப்படையில் நீதி இருக்க வேண்டும்.