13 December 2020
by
Vijayakumaran
நம்முடைய கருத்து உணர்வின் வெளிப்பாடாகவும் இருக்கலாம், அறிவின் வெளிப்பாடாகவும் இருக்கலாம் தவறில்லை, ஆனால் நீதி உணர்வுக்கு அப்பாற்பட்டு அறிவின் வெளிப்பாடாக மட்டுமே இருக்கவேண்டும்.
ஒரு சமுதாயத்தின் அறிவு வளர்ச்சியே அந்த சமுதாயத்தின் நீதியை மாற்றும்.
சாலை விபத்தால் உலகில் பல கோடி அப்பாவி மக்கள் இறக்கின்றார்கள் இதற்கு 90 சதவிகிதம் ஓட்டுனரின் தவறே காரணம், ஆனால் சட்டம் இந்த நிகழ்வை விபத்து என்றே பார்க்கின்றது. அதுபோல் மருத்துவர்களின் தவறான சிகிச்சையே பல நோயாளிகள் இறப்பதற்கு காரணமாக உள்ளது ஆனால் சட்டம் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார் என்று பார்க்கின்றது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் குழுவாக சேர்ந்து தவறு செய்த ஓட்டுனரையும்,மருத்துவரையும் தாக்கும் செயல் தொடர்ந்து இந்த உலகில் நடக்கத்தான் செய்கின்றது இது சரியா ? சரிதான், பாதிக்கப்பட்டவர்கள் உணர்வுபூர்வமாக செயல்படுவது தவறில்லை, ஆனால் சட்டம் அறிவுப்பூர்வமாக இருக்க வேண்டும் என்பதே நீதி.
பாதிக்கப்பட்டவர்களின் உணர்வுக்கு எதிராக சட்டம் அறிவுப்பூர்வமாக இருக்க வேண்டும் என்பதே ஓட்டுனரையும், மருத்துவரையும் பாதுகாக்கும் நீதி, இந்த நீதி ஏன் தூக்கு தண்டனை குற்றவாளிகளுக்கு இல்லை ?ஏன் சட்டம் இங்கு மட்டும் உணர்வுபூர்வமாக செயல்படுகின்றது ?சிந்திக்க வேண்டும்!.
ஒருவருடைய சிந்தனையும் செயலும் இறந்த காலத்தின் தொடர்போடு தான் உள்ளது, எனவே ஒருவருடைய செயலுக்கு அவர் காரணமல்ல இறந்தகால நிகழ்வே ஒருவருடைய செயலை தீர்மானிக்கிறது என்ற புதிய அறிவை நான் பெற்று “உன் செயலுக்கு நீ காரணம் அல்ல” என்ற ஆய்வு புத்தகத்தை பத்து ஆண்டுக்கு முன்பே எழுதி இருக்கின்றேன், ஆனால் இந்த அறிவு உலக மக்களிடம் இன்று வரை போய் சேராமல் படிப்பவர்களின் உணர்வே அதை தடுக்கின்றது.
தூக்குத்தண்டனை குற்றவாளியை காப்பாற்ற வேண்டும் என்பது என்னுடைய நோக்கமல்ல, தூக்குத்தண்டனை தடைக்கான காரணம் ஒருவருடைய செயல் அவருக்கு உட்பட்டு இல்லை இறந்த காலத்தையே சார்ந்து உள்ளது, எனவே உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்று யாருமில்லை,ஒருவர் எந்த நிலையில் இருந்தாலும் அதற்கு இறந்த காலமே காரணம் என்ற அறிவு சமுதாயத்தில் பரவும் போது சமத்துவம் உருவாகும் என்பதற்கான முயற்சியே இந்தக் கட்டுரை.
இன்றைய சமுதாயம் பெற்றுள்ள அறிவுகள் அனைத்தும் பல ஆயிரம் ஆண்டுகளாக இந்த உலகில் ஏதோ ஒரு மூலையில் ஏதோ ஒருவருடைய சிந்தனையில் ஏற்பட்ட விபத்துகளே காரணம். இந்த என்னுடைய சிந்தனையும் விபத்தே, நம்முடைய சிந்தனைக்கு நாம் காரணமல்ல.
இந்த சமுதாயத்தில் அறிவாளியாக கருதப்படும் பலர் என்னுடைய கட்டுரைகளை தொடர்ந்து படிக்கின்றார்கள் ஆனால் அவர்களால் நான் அறிந்த உண்மையை மக்களிடம் கொண்டு செல்ல முடியவில்லை, காரணம் அவர்களுடைய உணர்வு அவர்கள் பெற்ற அறிவை வெளிப்படுத்த மறுக்கின்றது, இதற்கு ஆதாரம் கடந்த 10 ஆண்டுகளாக பல ஊடகத்தை சேர்ந்தவர்களும்,நண்பர்களும், எழுத்தாளர்களும் என்று பல ஆயிரம் பேர் என்னுடைய ஆய்வு கட்டுரையை படித்து விட்டார்கள் யாரும் இதுவரை என்னுடைய ஆய்வை தவறு என்று சொல்லி நான் அறிவித்த ஒரு கோடி பரிசை பெற முன்வரவில்லை.
(புதியதாக என்னுடைய கட்டுரையை படிக்கின்றவர்களுக்கு, என்னுடைய சிந்தனை இறந்த காலத்தொடர்போடு இல்லை, என்னுடைய சிந்தனை எனக்கு கட்டு பட்டு தான் உள்ளது என்று நிரூபித்தால் ஒரு கோடி பரிசு )
உணர்வு நமக்கானதாக மட்டும் இருக்க வேண்டும் !
நீதி அனைவருக்குமானதாக இருக்க வேண்டும் !!
in Justice