26 December 2021
by
Vijayakumaran
ஒரு மனிதனின் செயல் எதை சார்ந்து இருக்கின்றது என்பதை ஆய்வு செய்து எழுதிய ஆய்வுக் கட்டுரை இது.
[தமிழக முதல்வர் திரு ஸ்டாலின் அவர்களின் விருப்பப்படி ஆயுள் தண்டனை கைதிகளின் தண்டனை காலத்தை மனிதாபிமானபடி குறைத்தால் அது அரசியல் நகர்வாக தான் இருக்கும். அதுவே என்னுடைய இந்த ஆய்வை அடிப்படையாக வைத்து தண்டனையை குறைத்தால் அது அறிவியல் பூர்வமான, அறிவு பூர்வமான, உலகுக்கே முன்னுதாரணமாக இருக்கும்.]
நாம் பிறக்கும் போதே அனைத்து உணர்வையும் பெற்று பிறப்பதில்லை, நாம் பிறக்கும் போது வலி என்ற ஒரு உணர்வை மட்டுமே பெற்று பிறக்கின்றோம். முதலில் பசி என்ற உணர்வை பெறுகின்றோம், சிறிது காலம் கழித்து பயஉணர்வை பெறுகிறோம், அதைத் தொடர்ந்து நான் என்ற உணர்வை பெறுகிறோம் இந்த நான் என்ற உணர்வை பெற்ற பிறகுதான் போட்டி, போறாமை, பாசம், நட்பு, அன்பு, வெறுப்பு, போன்ற பல உணர்வுகளை பெறுகின்றோம். கடைசியாக காம உணர்வை பெறுகிறோம். வயது முதிர்ச்சியில் கடைசியில் பெற்ற காம உணர்வை முதலில் விடுகின்றோம், அதைத் தொடர்ந்து போட்டி, போறாமை, வெறுப்பு, போன்ற உணர்வுகளையும் விட்டுவிடுகின்றோம், கடைசியாக முதலில் பெற்ற பசி என்ற உணர்வையும் விட்டு விடுகின்றோம், மரணத்தின்போது பிறக்கும்போது வந்த வலி என்ற உணர்வையும் விட்டு விடுகின்றோம்.
நம்முடைய செயலுக்கு அடிப்படை பிறப்பால் நாம் பெற்ற உணர்வுகளே காரணம்.
உணர்வு ஒருவருக்கு ஒருவர் அளவில் மாறுபட்டு இருக்கு, அதற்கு ஜீன்தான் காரணம். ஒருவருக்கு பசி அதிகம் இருக்கு, மற்றொருவருக்கு வீரம் அதிகம் இருக்கு, வேறு ஒருவருக்கு காமம் அதிகம் இருக்கு, இதை அவரவர்கள் பெற்ற அறிவால், மூளையின் செயல்திறனால் அவர்களின் உணர்வை அடக்கினால் ஒழுக்கமானவர்களாக வாழ்வார்கள்.
நம் மூளை ஒரு தராசு போன்றது ஒரு தட்டில் நம் ஐந்து புலன்கள் மூலம் பெற்ற அறிவை சேகரித்து வைத்துக்கொள்ளும், மற்றொரு தட்டில் பிறப்பால் நாம் பெற்ற உணர்வை வைத்து கொள்ளும். நாம் ஒரு செயலைச் செய்யவேண்டும் என்று விரும்பினால், உணர்வு ஒரு தட்டில் விருப்பத்திற்கு தகுந்த அழுத்தத்தை கொடுக்கும், அறிவு அதற்கு எதிர்வினையாக அது சேர்த்து வைத்துள்ளார் தகவலிலிருந்து தேவையான அழுத்தத்தை மற்றொரு தட்டில் கொடுக்கும் அப்போது எதனுடைய அழுத்தம் அதிகமாக உள்ளதோ, அதை சார்ந்த நடவடிக்கையை செய்ய மூளை உத்தரவிடும், இதுதான் மூளையின் செயல். இதன்படி தான் நாம் அனைவரும் இயங்குகின்றோம்.
உணர்வுதான் எப்போதும் செயலுக்கான விருப்பத்தை மூளைக்கு தெரிவிக்கும், அறிவு எப்போதும் உணர்வை கட்டுப்படுத்தி கொண்டேதான் இருக்கும், மூளை விருப்பு வெறுப்பு இல்லாத இயந்திரம், தீர்ப்பை வாதத்தின் அடிப்படையிலேயே சொல்லும். வாதம் தவறாக இருந்தால் தீர்ப்பும் தவறாகவே இருக்கும், உணர்வின் விருப்பத்தை அறிவு சரி என்று ஏற்றுக் கொண்டால் மூளையால் உணர்வின் செயலை தடுக்க முடியாது.
சிந்தித்தல் என்பதன் பொருள் மூளையில் சேகரித்து வைத்துள்ள அறிவை தேடி எடுத்து உணர்வுக்கு எதிர்த் தட்டில் வைத்து எடை போடுவது தான்.
மூளையின் செயல் இரண்டு, ஒன்று அனுபவங்களை சேகரித்து வைத்துக் கொண்டு தேவைப்படும் போது உடனே நினைவு படுத்துவது. இரண்டாவது அறிவையும், உணர்வையும் துல்லியமாக எடை போடுவது. இந்த இரண்டையும் மூளை சரியாக செய்தல் என்பது மூளையின் திறன், இதற்கும் ஜீன் தான் காரணம்.
பிறப்பால் நாம் பெற்ற உணர்வுகளும், மூளைத்திறனும், வாழ்நாள் முழுவதும் யாருக்கும் இப்போது இருப்பது போலவே எப்போதும் இருக்காது, வயது ஆக, ஆக, உணர்வுகளும், மூளைத்திறனும், மாறிக்கொண்டேதான் இருக்கும். இதைஅறியாத ஆட்சியாளர்களும், நீதித்துறையும், குற்றங்களை செய்தவன் வாழ்நாள் முழுவதும் திருந்த மாட்டான் என்று எண்ணி தூக்கு தண்டனை கொடுப்பதும், பல வருடங்கள் சிறையில் அடைப்பதும் எவ்வளவு பெரிய அறிவற்ற செயல் என்று எண்ணிப் பாருங்கள். எந்த ஒரு குற்றம் செய்தவனுக்கும் பத்து ஆண்டுக்கு மேல் தண்டனை தேவையற்றது. காரணம் பத்து ஆண்டுகளுக்குள் ஒருவனை அவனுடைய உணர்வும், அறிவும், புதிய மனிதனாக மாற்றி விடும்.
20 வயதில் அப்பாவின் செயல் தவறு என்று நினைத்தவனுக்கு, முப்பது வயதில் தனக்கு ஒரு குழந்தை பிறந்ததும் அப்பாவின் செயல் சரியாக தெரியும்.
பிறந்தவுடன் தாய் பாலுக்கு ஆசைப்படுகின்றோம், இரண்டு வயதில் விளையாட்டு பொருளுக்கு, ஐந்து வயதில் விளையாட்டுக்கு, 15 வயதில் ஸ்மார்ட்போனுக்கு, 20 வயதில் காதலுக்கு, 25 வயதில் செல்வத்திற்கு, 30 வயதில் புகழுக்கு என்று நம்முடைய ஆசைகள் மாறிக் கொண்டேதான் இருக்கின்றது, இதற்குக் காரணம் நம்முள் ஏற்படுகின்ற உணர்வு மாற்றமே, உணர்வின் மாற்றமே ஆசைக்கு காரணம், ஆசையே குற்றம் செய்ய காரணம், ஒன்றின் மேல் ஆசை குறையும் போது புதிய மனிதன் நம்முள் பிறக்கின்றான்.இது வாழ்வியல் உண்மை.
இந்த அறிவியல் உண்மையை மத்திய அரசு புரிந்து கொள்ளாமல், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 25 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை அனுபவிக்கும் 7 பேரையும் விடுதலை செய்தால் சமுதாயத்திற்கு ஆபத்து என்று நீதிமன்றத்தில் வாதாடுவது அறிவியல்படி ஏற்புடையது அல்ல. எனவே உச்ச நீதிமன்றம் இந்தியாவில் தூக்கு தண்டனையை தடை செய்து 10 ஆண்டுக்கு மேல் சிறையிலுள்ள அனைவரையும் விடுதலை செய்ய மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கு உத்தரவு இடவேண்டும்.
தயவுசெய்து நண்பர்கள் அனைவரும் சக நண்பர்களுக்கு பகிருங்கள் புதிய நீதி பிறக்கட்டும்.
in Justice