19 March 2020
by
Vijayakumaran
ஆட்சியாளர்களின் நிர்வாக தவற்றை மறைப்பதற்காகவே தூக்குத்தண்டனை கொடுக்கப்படுகின்றது.
மனசாட்சி தனி மனிதனின் அறிவு.
நீதி சமுதாயத்தின் அழிவு.
அறிவற்ற சமுதாயத்தின் செயல் தான் தூக்குத்தண்டனை.
நீதி மாறவேண்டும் என்றால் சமுதாயத்தின் அறிவு மாறவேண்டும்.
குற்றவாளி தண்டனைக்கு உரியவன் அல்ல இந்த சமுதாயத்தால் பாதிக்கப்பட்டவன் என்ற அறிவியல் உண்மையை எப்போது இந்த உலகம் உணர்கின்றதோ அப்போதுதான் தூக்குத்தண்டனை தடை செய்யப்படும்.
இதை நான் எழுதுவதால் இந்த உலகில் நான் மட்டுமே அறிவாளி, மற்றவர்கள் அனைவரும் அறிவு இல்லாதவர்கள் என்று பொருளல்ல. அறிவால் யாரும், யாரை விடவும் உயர்ந்தவரும் அல்ல, தாழ்ந்தவரும் அல்ல என்பதை அறிவால் உணர்ந்தவன் நான்.
இந்த உலகில் நாம் அனைவரும் தனித்தனியாக தனக்கே உரிய இடத்தில் இருந்துதான் இந்த உலகை பார்க்கின்றோம், அதுவே நம்முடைய அறிவு. நான் பார்த்ததை மற்றவர்கள் பார்க்க இயலவில்லை என்பதை போல் மற்றவர்கள் பார்த்ததை நான் பார்க்க இயலவில்லை என்பதும் உண்மையே. ஒருவர் அறிந்ததை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதாலேயே நம்மால் உலக அறிவை பெற முடிகின்றது. அதனடிப்படையில் இந்த உலகில் இதுவரை யாரும் பெறாத அறிவை நான் பெற்று உள்ளதால் அதை உலக மக்களுடன் பகிர்ந்து கொள்ளும் முயற்சியே என்னுடைய எழுத்துக்கள்.
நம்முடைய சிந்தனையும், செயலும் நமக்குட்பட்டு இல்லை என்பதே நான் பெற்ற அறிவு. நம்முடைய சிந்தனை நமக்கு கட்டுப்பட்டு இல்லை, இறந்தகால தொடர்பு இல்லாமல் சுயமாக எதையும் நம்மால் சிந்திக்க முடியாது. நாம் எதை சிந்திக்க வேண்டும் என்பதை நாம் தீர்மானிக்க முடியாது இறந்த காலம் தான் தொடர்வினை தத்துவத்தின் படி தீர்மானிக்கின்றது. நம் சிந்தனையின் வெளிப்பாடுதான் நம்முடைய செயல் என்பதால் நம்முடைய செயல்கள் அனைத்துக்கும் இறந்தக்கால தொடர்வினை தான் காரணம், இதிலிருந்து யாரும் விடுபட முடியாது என்பதே அறிவியல் விதி.இதிலிருந்து யார் விடுபடமுடியுமோ அவர்தான் தூக்கு தண்டனை கொடுப்பதற்கு தகுதியானவர். இதை இந்த உலகம் எப்போது புரிந்து கொள்கின்றதோ அப்போதுதான் சமத்துவமும், புதிய நீதியும் உருவாகும்.
வேகத்தடையை கவனிக்காமல் சென்ற அப்பாவிகளுக்கு இயற்கை மரண தண்டனையை கொடுக்கின்றபோது, கொடுமையான குற்றம் செய்தவர்களுக்கு தூக்குத்தண்டனை கொடுப்பதில் தவறு இல்லை என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. தண்டனை மக்களை நெறிப்படுத்த உதவும் என்பதிலும் மாற்றுக்கருத்து இல்லை, ஆனால் குற்றவாளிக்கு தண்டனை கொடுப்பதால் குற்றம் அற்ற சமுதாயம் உருவாகும் என்ற நம்பிக்கை தவறானது.
காரணம் இல்லாமல் காரியம் இல்லை என்பதால் காரியத்தை தவறு என்று எண்ணும் இந்த சமுதாயமும், நீதித் துறையும், அரசும், அதற்கான காரணத்தை கண்டறிந்து கலையாதது ஏன்?
குற்றமற்ற சமுதாயம் உருவாக என்னுடைய சிந்தனை என் கட்டுப்பாட்டில் இல்லை என்பதை முதலில் அனைவரும் உணரவேண்டும், இரண்டாவதாக நான் உயர்ந்தவன், அறிவாளி, செல்வம் படைத்தவன், அதிகாரம் படைத்தவன், நீதியரசன் என்ற அகங்காரம் அழிந்து சமத்துவம் மனதில் உருவாக வேண்டும்.
குற்றவாளியின் செயலுக்கு இந்த ஒழுக்கம் இல்லாத சமுதாயம் தான் காரணம் என்பதால் நாம் அனைவரும் இன்று செய்யும் சிறுசிறு ஒழுக்கக்கேடான செயலை செய்யாமல் இருந்தால் நாளை குற்றமில்லா சமுதாயம் உருவாகும் என்பதில் ஐயமில்லை.
in Justice