இந்திய இறையாண்மைக்கு எதிராக, சட்டத்திற்கும் எதிராக மக்களை மதத்தால், சாதியால், பிரிவினை செய்ததற்கு பல ஆயிரம் ஆதாரங்கள் இருந்தும், கட்சித்தடைக்கு தகுதியான அரசியல் கட்சி நாட்டை ஆள்வதால் ஆன்மீக மூடநம்பிக்கைக்கு எதிராக பகுத்தறிவு விழிப்புணர்வு செய்தால் குற்றமாக தெரிகின்றது இன்றைய காவல்துறைக்கு. “யாமிருக்க பயமேன் “ இது வெறும் வார்த்தையல்ல மந்திரம், துன்பத்தில் இருந்து இறைவன் நம்மை காப்பார் என்று ஒருவர் நம்பினால் அதை யாரும் பாழ்பண்ணக்கூடாது. என்னை கடவுள் காப்பார் என்று நான் நம்பினால் அது என்னுடைய நம்பிக்கை அதில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை!இதற்குப் பெயர்தான் கடவுள் நம்பிக்கை. ஆனால் நான் வணங்கும் ராமர்தான் கடலுக்கு அடியில் பாலம் அமைத்தார் என்ற கட்டுக்கதையால் சேது கால்வாய் திட்டத்தை நிறுத்தி அரசுக்கு பல ஆயிரம் கோடிரூபாயை நஷ்டப்படுத்துவது நீதி அல்ல. இது போன்ற கடவுள் நம்பிக்கை நம்நாட்டின் வளர்ச்சிக்கே எதிரானது. நான் வணங்கும் கடவுள் தான் உயர்ந்தது, சிறந்தது என்று மதத்தால் உலக மக்களைப் பிரிப்பது மனித குலத்திற்கே எதிரானது. கடவுள் நம்பிக்கை தனிமனித சிந்தனை, அது தனிமனித நம்பிக்கையாகவே இருக்கும் வரை அதில் யாரும் தலையிட கூடாது. ஆனால் தனிமனித நம்பிக்கை ஒரு சமுதாயத்தின் நம்பிக்கையாக மாறும்போது அந்த கடவுள் நம்பிக்கை விவாதப்பொருளாக மாறுவதில் தவறு இல்லை. கடவுள் இல்லை என்ற மாற்றுக் கருத்தை ஏற்பதா அல்லது நிராகரிப்பதா என்பதை சமுதாயம் தான் முடிவு செய்யவேண்டும். அதை ஆட்சியாளர்களும், காவல்துறையும், நீதித்துறையும், முடிவு செய்யக்கூடாது. கடவுள் நம்பிக்கை தனிமனித உரிமை என்றாலும் கடவுள் நம்பிக்கை சமுதாயத்தில் மனிதர்களுக்குள் ஏற்றத் தாழ்வை ஏற்படுத்துவதால் கடவுள் நம்பிக்கை விவாதத்திற்கும் உட்பட்டதே!