விதியைப் பற்றி பல கட்டுரைகளை நான் எழுதியும், பகுத்தறிவாளர்களும், முற்போக்குவாதிகளும் புரிந்து கொள்ளாததும் விதிதான். புரியாதவர்களை நம்ப வைத்து விடலாம், புரிந்தது போல் நினைத்துக்கொண்டு தவறாக புரிந்து கொண்டவர்களுக்கு புரிய வைப்பதும் கடினம், நம்ப வைப்பதும் கடினம்.
நேற்றைய நிகழ்வுகள் தான் இன்றைய நிகழ்வுக்கு ஆதாரம், இன்றைய நிகழ்வுகள் தான் நாளைய நிகழ்வுகளுக்கு ஆதாரம் என்ற தொடர்வினை தத்துவம் தான் விதி.
விதி உண்மை என்று புரிந்துகொள்வதற்கும், விதியை நம்புவதற்கும் வித்தியாசமுண்டு. விதி உண்மை என்று நான் புரிந்து கொண்டாலும் தேவைகளும், கடமைகளும் என்னை துரத்தும் போது விதிப்படி அனைத்தும் நடக்கும் என்று நம்பி ஓய்வு எடுத்துக் கொண்டு இருக்க முடியாது, காரணம் நிகழ்வுக்கு முன் எது விதி என்பது யாருக்கும் தெரியாததால் விதியை என்னால் நம்ப முடியவில்லை.
விதி உண்மை என்ற புரிதலோடு, விதியை நம்பாமல் போராடினால்தான் வெற்றி பெறமுடியும், மற்றும் பெற்ற வெற்றியால் உயரும்போது அனைவரையும் சமமாக எண்ணும் பண்பும் உருவாகும்.
வீதி உண்மை என்ற புரிதல் தான் இந்த உலகத்தில் அமைதியையும், சமத்துவத்தையும் உருவாக்கும்.
விதியின் செயலால் குற்றம் செய்தவன் தண்டனைக்கு உரியவன் அல்ல, இந்த சமுதாயத்தால் பாதிக்கப்பட்டவன் என்ற புரிதல் எப்போது மக்களிடம் ஏற்படுகின்றதோ அப்போதுதான் புதிய நீதி உருவாகும்.
நாம் ஆயுதம் வைத்திருந்தால் நமக்கு பாதுகாப்பு அல்ல, நம்மை சுற்றி உள்ளவர்கள் ஆயுதம் இல்லாமல் இருந்தால்தான் நமக்கு பாதுகாப்பு.
நாம் ஒழுக்கமாக இருப்பதை விட நம்மை சுற்றியுள்ளவர்களும் ஒழுக்கமானவர்களாக இருந்தால்தான் நமக்கு பாதுகாப்பு.
விதி உண்மை என்பதை நாம் புரிந்து கொள்வதை விட, நம்மை சுற்றியுள்ளவர்கள் புரிந்துகொண்டால் தான் சமத்துவம் அனைவர் மனதிலும் மலரும், குற்றத்துக்கான காரணங்கள் ஆராயப்பட்டு புதிய நீதி உருவாகும், தூக்குத்தண்டனை ஒழிக்கப்படும், குற்றம் செய்தவனுக்கு மறுவாழ்வு கிடைக்கும். இதன் காரணமாக குற்றம் இல்லாத அமைதியான சமுதாயம் உருவாகும்.
வீதி உண்மை என்பதை புரிந்து கொள்ளுங்கள்!
விதியை நம்பாதீர்கள் !!