23 May 2016
by
Vijayakumaran
முன்பு பழமையான சாதி என்ற ஒரு வேறுபாடுதான் இருந்தது ஆனால் இப்போது மதம், தொழில், கல்வி, பொருளாதாரம், என்று பல வேறுபாடுகள் மக்களிடம் உருவாகிவிட்டது. எனவே புதிய ஞவேறுபாட்டால் பழைய வேறுபாடான சாதி தானாகவே அழிந்துவிடும். ஆனால் மக்களிடம் உள்ள வேற்றுமை உணர்வு அழியாது.
அரசியல் தலைவர்களாக இருந்தாலும் சரி, மதக்குருக்கலாக இருந்தாலும் சரி. அனைவரும் சாதி வேறுபாடு ஒழிய வேண்டும் என்று சொல்லிக் கொண்டே புதிய வேறுபாட்டை ஆதரிக்கின்றார்கள். ஒவ்வொரு மனிதனும் மற்றவர் இடம் இருந்து வேறுபட்டு தனி தன்மையோடு வாழவேண்டும் என்று எண்ணுகிறான். அதை இந்த சமுதாயம் ஆதரிக்கின்றது.
ஒவ்வொரு சாதிக்கும், ஒவ்வொரு மதத்துக்கும் ஒவ்வொரு மொழிக்கும், தனி தன்மையும், வேறுபாடும் உண்டு. ஒவ்வொரு மனிதனும் மற்ற மனிதர்களிடம் இருந்து பல வேறுபாடுகளுடன் வாழ்கின்றான், இதை தான் தனி தன்மை என்று பெருமை பேசி கொள்கின்றான். சாதி வேறுபாட்டை விடப் பெரிய வேறுபாடு மதவேறுபாடும், பொருளாதார வேறுபாடும்தான், இந்த இரண்டு வேறுபாட்டையும் ஒழிக்க வேண்டும் என்று ஏன் எந்த அரசியல் தலைவர்களும் பேச மறுக்கின்றார்கள். மதம் ஒழிய வேண்டும் என்றால் பன்னாட்டு பிரச்சனையாகிவிடும். பொருளாதார வேறுபாட்டை சமன் செய்ய வேண்டும் என்று கூறினால் சேர்த்து வைத்த பணம் அனைத்தும் போய்விடும். எனவே மலிவான அரசியல் செய்வதற்குதான் சாதி மட்டும் ஒழிய வேண்டும் என்று கூறுகின்றார்கள்.
சாதி கொடுமை என்ற ஒன்று நம் நாட்டில் இல்லை பொருளாதாரக் கொடுமை தான் நம் நாட்டில் நடக்கின்றது. ஆம் பணக்காரன் தான் ஏழையை கொடுமைப்படுத்துகின்றானே தவிர உயர்ந்த சாதியை சேர்ந்தவன் தாழ்ந்த சாதியினரை கொடுமைப்படுத்துவது இல்லை.
பணக்கார சமுதாயம்தான் ஏழை சமுதாயத்தை கொடுமை படுத்துகின்றது.
உயர்ந்த சாதியை சேர்ந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டால் பெண் கொடுமை என்று ஊடகங்கள் சொல்கின்றன. ஒரு தாழ்ந்த சாதி பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டால், சாதிகொடுமை என்று ஊடகங்கள் சொல்கின்றன. இரண்டு பேரும் பெண்தானே ஏன் இரண்டையும் பெண்கொடுமை என்று ஊடகங்கள் சொல்லவில்லை. அரசியல் தலைவர்கள், மக்களிடம் சாதி அரசியல் செய்ய வாய்ப்பு உள்ள இடங்களில் எல்லாம் சாதிப் பிரிவினையை பேசி மக்களை பிரித்து ஆள்கின்றார்கள்.
சாதி கொடுமை செய்வது என்பது வேறு,சாதி வேற்றுமைப் பார்ப்பது என்பது வேறு.
ஒரு மருத்துவர் மற்றோர் மருத்துவரிடம் வேற்றுமை பாராமல் பழகுவார்.
அதே மருத்துவர் சாமானிய மனிதனிடம் வேற்றுமைப் பார்ப்பது உண்டு. இது கொடுமை அல்ல அது அவரின் உரிமை.
அது போல் ஒரு சாதியினர் வேறு சாதியினர் இடம் வேற்றுமைப் பார்ப்பதும்,
ஒரு மதத்தவர் பிற மதத்தவரிடம் வேற்றுமைப் பார்ப்பதும்,
படித்தவன் படிக்காதவனிடம் வேற்றுமைப் பார்ப்பதும்,
ஒழுக்கமானவர் ஒழுக்கம் இல்லாதவனிடம் வேற்றுமைப் பார்ப்பதும்,
ஆடை தூய்மை உடையவர் ஆடை தூய்மை இல்லாதவனிடம் வேற்றுமைப் பார்ப்பதும்,
செல்வந்தர் ஏழையிடம் வேற்றுமைப் பார்ப்பதும்,
ஆண் பெண்ணிடம் வேற்றுமைப் பார்ப்பதும்,
முதலாளி தொழிலாளியிடம் வேற்றுமைப் பார்ப்பதும்,
தலைவர் தொண்டனிடம் வேற்றுமைப் பார்ப்பதும்,
முதல் அமைச்சர், அமைச்சரிடம் வேற்றுமைப் பார்ப்பதும்,
நம் சமுதாயத்தில் இயல்பான ஒன்றுதான்.
நம் சமுதாயத்தில் வேற்றுமை பார்ப்பது என்பது தவறான செயல் அல்ல. அது கொடுமையும் அல்ல. பிறகு எதற்காக சாதி வேற்றுமையை பயன்படுத்தி மக்களிடம் சாதி வன்முறையையும், வெறுப்பையும் தூண்டவேண்டும்.
மனிதனுக்கு ஒழுக்கத்தை போதிக்க சான்றோர்கள் மதத்தை உருவாக்கியது போல், சாதியை யாரும் உருவாக்கவில்லை, அவர் அவர்கள் செய்த தொழிலே சாதியாக மாறிவிட்டது. எந்த தொழிலில் அதிக வருவாய் கிடைத்ததோ அந்த தொழிலை செய்தவர்கள் உயர்ந்த சாதியாகவும், குறைந்த வருவாய் கிடைத்த தொழிலை தாழ்ந்த சாதியாகவும் கருதப்பட்டார்கள். அன்று முதல் இன்று வரை வருவாய் அதிகம் வருகின்ற தொழிலை செய்பவர்களைதான் நாம் உயர்ந்தவர்களாக பார்க்கின்றோம்.
அன்று கூத்தாடி என்று ஏளனம் செய்தோம்.
இன்று நட்சத்திரம் என்று கோவில் கட்டுகின்றோம்.
அன்று மேளக்காரன் என்று சொன்னோம்.
இன்று இசை அமைப்பாளர், ஞானி, மன்னர் என்று போற்றுகின்றோம்.
அன்று பார்பர் என்று சொல்லி தள்ளி நின்றோம்.
இன்று அழகுகலை நிபுணர் என்று சொல்லி தழுவி நிர்க்கின்றோம்.
அன்று பிராமணரை சாமி என்றோம்.
இன்று சாமி ஆசாமி ஆகிவிட்டது.
அன்று மக்கள் பிராமணர்களுக்கு அதிக பொருட்களை தானமாக கொடுத்தார்கள். அதனால் அவர்கள் சாமியாக இருந்தார்கள், இன்று ஒரு ரூபாயை யாராவது தட்டில் போடமாட்டர்களா என்று காத்து நிற்கின்றார்கள். அதனால் இன்று அவர்கள் சாதாரண மனிதர்களாக ஆகிவிட்டார்கள்.
எனவே செய்கின்ற தொழிலை வைத்து ஒருவனை உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்று யாரும் எண்ணியது இல்லை. ஒருவனிடம் உள்ள செல்வத்தை வைத்துதான், அவன் உயர்ந்தவனாகவும், தாழ்ந்தவனாகவும் கருதப்படுவான் என்பது தான் உண்மை.
ஒரு தாழ்ந்த சாதியினரிடம் பணத்தை கொடுத்துப்பாருங்கள், அவரை எத்தனைப்பேர், அய்யா, சார், ஜி என்று உலகில் உள்ள அனைத்து மரியாதைக்கு உரிய வார்த்தையையும் பயன்படுத்தி அழைப்பார்கள். அதுபோல் ஏழையாக உள்ள உயர்ந்த சாதியினரை எப்படி மற்றவர்கள் ஏலனமாக நடத்துகின்றார் என்பது தெரியும்.
அன்று தாழ்ந்த சாதியினரை கோவில் உள்ளே விடமாட்டார்கள் இன்று பணம் இல்லாதவன் சாமி தரிசனம் செய்ய முடியாது. காத்து இருக்க வேண்டியதுதான்.
சாதி என்றால் இரண்டு சாதி தான் ஒன்று பணக்கார சாதி, மற்றொன்று ஏழை சாதி,
ஓளவையார் அவர்கள் சாதியை கொடுமை என்று சொல்லவில்லை, உலகிலேயே கொடியது வறுமை என்றுதான் கூறிஉள்ளார்.
நம் நாட்டில் உள்ளது சாதி கொடுமை அல்ல, சாதி வேற்றுமை தான், வேற்றுமையில் ஒற்றுமை காண்பதுதான் நாகரிகம், எனவே அனைத்து சாதியினர்களும் ஒன்று சேர்ந்து வறுமையின் கொடுமையை ஒழிப்போம் வேற்றுமையை குறைப்போம்.
கருத்தும் எழுத்தும்