வாதம் எங்கு செய்ய வேண்டும், எங்கு வாதம் செய்யாமல் நம்முடைய கருத்தை பதிவு செய்ய வேண்டும் என்பதை நாம் தெரிந்து கொண்டால் நம்முடைய உரிமைகளையும், உறவுகளையும், நண்பர்களையும், இழக்காமல் வாழ முடியும்.
வாதம் எங்கு செய்ய வேண்டும், வாதம் இல்லாமல் கருத்தை மட்டும் எங்கு பதிவு செய்ய வேண்டும் என்பதை என்னுடைய பிள்ளைகளுக்கு தெளிவுபடுத்த வேண்டிய சூழல் எனக்கு ஏற்பட்டதால் வாதத்தைபற்றி ஆய்வு செய்து அதற்கான அளவுகோலை இரண்டு நாட்களுக்கு முன்புதான் கண்டுபிடித்தேன்,அதை அனைவரும் பயன்படுத்தி பயன் பெற வேண்டும் என்பதற்காக இந்த கட்டுரையை எழுதி இருக்கின்றேன்.
நம்முடைய உரிமையையும், தேவையையும் பெற வேண்டும் என்ற சூழல் எங்கு ஏற்படுகின்றதோ அங்கு மட்டும்தான் வாதம் செய்ய வேண்டும். வாதம் செய்வதுதான் இந்த பூமியில் வாழ்வதற்கான முதல் தகுதி, வாதம் செய்வது போராடும் குணத்தின் வெளிப்பாடு, எனவே வாதம் செய்வது வாழ்க்கைக்கு மிக மிக அவசியம். எனவே பெற்றோர்கள் பிள்ளைகளை வாதம் செய்ய பழக்க வேண்டும், இதற்கு மாறாக பிள்ளைகள் வாதம் செய்யாமல் சொல்வதைக் கேட்க வேண்டும் என்று அடக்கி வளர்ப்பது மிகப்பெரிய தவறு.
நம்முடைய அறிவை வெளிப்படுத்துவதற்கும், உணர்வை வெளிப்படுத்துவதற்கும், நம்முடைய விருப்பத்தை வெளிப்படுத்துவதற்கும், அரசியல் கருத்தை வெளிப்படுத்துவதற்கும் நாம் ஒருபோதும் வாதம் செய்யக் கூடாது. இங்கு நம் கருத்தை மட்டுமே பதிவு செய்ய வேண்டும் அப்போதுதான் உறவும், நட்பும் நிலைத்திருக்கும்.
நாம் பெற்றிருக்கும் அறிவை ஒருவர் ஏற்கவில்லை என்றால் அவரிடம் வாதம் செய்யக் கூடாது,புரிந்து கொள்ளும் அறிவு இல்லாதவர் இடம் நாம் அறிவாளி என்று காட்டிக் கொள்வதில் எந்த பயனும் இல்லை. இதனால் நமக்கு எந்த பாதிப்பும் இல்லை, மாறாக ஏற்க மறுப்பவர்களுக்கு தான் புதிய அறிவை பெற முடியாமல் போய்விடும்.எனவே நான் சொல்வது தான் சரி என்று எந்த ஒரு இடத்திலும் வாதம் செய்யக்கூடாது.
இந்த அளவுகோலை நாம் பயன்படுத்தி எங்கு வாதம் செய்ய வேண்டும், எங்கு வாதம் செய்யக்கூடாது என்று பழகிக் கொண்டால் உரிமைகளையும் இழக்க மாட்டோம், நண்பர்களையும் இழக்க மாட்டோம் வாழ்க்கை இன்பமாக இருக்கும்.