26 October 2018
by
Vijayakumaran
ஒரு மனிதன் அறிவால் உயர்ந்து நிற்பது, தான் படித்த படிப்பிலும், தான் எழுதிய எழுத்திலும், தான் பேசிய பேச்சிலும், இல்லை.பெருந்தலைவர் காமராசரை போல், அப்துல் கலாமை போல், அறிவால் உணர்வை ஆளுமை செய்து வாழ்கின்ற வாழ்க்கையில்தான் உள்ளது.
ஒருவனுடைய அறிவின் வெளிப்பாடு அவன் உணர்வுகளை கட்டுப்படுத்துவதில் தான் வெளிப்படுகின்றது.
இளைஞர்களை பார்த்து ஒழுக்கமாக வாழ வேண்டும் என்று உபதேசம் செய்வது மிக எளியது, ஆனால் இதுவரை யாரும் அறிவால் உணர்வுகளை எப்படி ஆளுமை செய்து ஒழுக்கமாக வாழ்வது என்ற அறிவை இளைஞர்களுக்கு யாரும் தெளிவாக கற்றுக் கொடுக்கவில்லை. அந்த குறையை போக்கவே இந்த பதிவு.
உணர்வு கட்டுக்கடங்காத குதிரை, அந்தக் குதிரையின் மீது பயணிப்பது தான் வாழ்க்கை. இந்த வாழ்க்கையில் நாம் பெற்ற அறிவு தான் அந்த உணர்வு என்ற குதிரையை ஜாக்கியைப்போல் சாதுரியமக இயக்கவேண்டும்.
குதிரையில் பயணிப்பதற்கு முன், குதிரைக்கு கடிவாளம் போடுவது போல், வாழ்க்கையில் உணர்வுக்கு முதலில் கடிவாளம் போட வேண்டும். கடிவாளம் இல்லாத குதிரைப் பயணம் இலக்கை அடையாது என்பதை போல், அனைத்துக்கும் ஆசைப்படுபவன் வாழ்க்கையும் ஒழுக்கமான வாழ்க்கையாக இருக்காது.
உணர்வுகளுக்கு கடிவாளம் போட வேண்டுமென்றால், அறிவை அறிவால் ஆளுமை செய்யும் ஏழாவது அறிவால் தேவையில்லாத்தை பார்ப்பதையும், கேட்பதையும், உணர்வதையும், தவிர்க்க வேண்டும்.
உணர்வுக்கு கடிவாளம் போட்டவர்களுடன் பழகினாலே போதும், உங்கள் உணர்வுகள் தானாகவே கடிவாளங்களை போட்டுக்கொள்ளும்.
வரவுக்கு தகுந்தாற் போல் நம்முடைய தேவைகள் இருக்கவேண்டும். வரவுக்குமேல் தேவைகள் இருந்தால் ஒழுக்கத்தை மீற, உணர்வுகள் தூண்டும்.
நம்முடைய தேவைகள் உணர்வின் வெளிப்பாடாக இருப்பதால், அந்த தேவைகளால் கிடைக்கக்கூடிய இன்பத்தை, உணர்விற்கு தெரியப்படுத்தாமல், அல்லது தொடர்ந்து உணர்விற்கு பழக்கப்படுத்தாமல் தவிர்க்க வேண்டும்.
மது அருந்தாத வரை உணர்விற்கு மதுவின் இன்பம் தெரியாது. மது உணர்வு தெரியாத நிலையில், உணர்வை அடக்க வேண்டிய தேவையும் இருக்காது.
கற்பு என்பது ஆண், பெண், இருவருக்கும் பொதுவான பாலுணர்வு கடிவாளம்.மனைவியுடன் மட்டுமே வாழ்பவன் மனைவியிடம் எந்த குறை இருந்தாலும் அது அறியாமலேயே மனநிறைவோடு வாழ்க்கையை வாழ்கின்றான்.பல பெண்களுடன் வாழ்பவனுக்கு எந்த குறையும் இல்லாத மனைவி அமைந்திருந்தாலும், மன நிறைவு பெறாமல்,உணர்வை வசப்படுத்த முடியாமல் வயதான பிறகும், பல பிரபலங்களை போல் மானத்தை இழக்கின்றான்.
உணர்வை அடக்குவதற்கும், வசப்படுத்துவதற்கு, வேறுபாடு உண்டு. அனைத்து உணர்வுகளையும் உணர்வுக்கு பழக்கப்படுத்தி விட்டு, உணர்வை அடக்குவது என்பது, நான்கு புறமும் பார்க்கும், கடிவாளம் போடாத குதிரையில் பயணிக்க முடியாதவன்,குதிரையை நிறுத்துவதற்கு சமம்.
உணர்வை வசப்படுத்துவது என்பது, உணர்வுக்கு தேவையில்லாத உணர்வுகளை பழக்கப்படுத்தாமல், கடிவாளம் கட்டிய குதிரை பக்கவாட்டில் பார்க்காமல், நாம் நினைக்கின்ற பாதையில் பயணிப்பதே வசப்படுத்துவது ஆகும்.
உணர்வு என்ற குதிரைக்கு கடிவாளம் போடாமல் பயணிப்பவர்கள் அறிவு இல்லாதவர்கள் !.
கடிவாளம் போட்ட உணர்வு என்ற குதிரையை மரத்தில் கட்டி வைத்து விட்டு, பயணிக்காமல் இருப்பவர்கள் வாழத் தெரியாத துறவிகள்!
கடிவாளம் போட்ட உணர்வு என்ற குதிரையில் பயணிப்பவர்கள் தான், இந்த வாழ்க்கையை முழுமையாக அனுபவிப்பவர்கள்.
இன்பம் என்பது நிறைவில் உள்ளது, நிறைவு என்பது எண்ணிக்கையில் அல்ல, நம் உணர்வில் உள்ளது.
உணர்வை வசப்படுத்துவோம் !
இன்பமாக வாழ்வோம்!