24 March 2025
by
Vijayakumaran
இன்பமான வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதற்கு தான் நாம் அனைவரும் ஒவ்வொரு நாளும் புதிய அறிவை தேடுகின்றோம், நான் தேடியதில் புதிதாக எனக்கு கிடைத்த அறிவை அனைவரும் பயன்பெற வேண்டும் என்பதற்காக பதிவிடுகின்றேன்.
துறவு என்றால் என்ன?
துறவு நமக்கு இன்பத்தை கொடுக்குமா? என்பதுதான் நம்முடைய கேள்வி. துறவு என்ற வார்த்தைக்கு “விடுதல் “மற்றும் “வாய்ப்பான நிலை” என்று பொருள். துறவு என்பதற்கு அனைத்தையும் துறக்க வேண்டும் என்று பொருள் கொள்வது தவறு.
துறவு வாழ்க்கை வாழ்பவர்களுக்கு அடுத்த வேலை உணவு சாப்பிடுவதற்கு திருவோடு கூட தன்னுடைய உடமையாக இருக்கக் கூடாது என்று முன்னோர்கள் சொல்லியிருப்பது மிகப்பெரிய தவறு, மேலும் துறவு வாழ்க்கை வாழ்பவர்கள் தன்னுடைய தேக சுகத்தையும் துறந்தவராக இருக்க வேண்டும், துறவி தூங்கும் பொழுது தன்னுடைய கையை கூட தலையணையாக வைத்து சுகமாக தூங்க கூடாது என்று முன்னோர்கள் சொல்லி இருப்பது துறவை பற்றிய புரிதல் இல்லாததே காரணம்.
துறவு வாழ்க்கை நமக்கு இன்பத்தை கொடுக்குமா?
எந்த ஒரு வாழ்க்கை முறையாக இருந்தாலும் அது நமக்கு இன்பத்தை கொடுக்க வேண்டும், இன்பத்தை கொடுக்காத வாழ்க்கை முறை மனித சமுதாயத்திற்கு தேவையில்லாதது. அந்த வகையில் துறவு வாழ்க்கை நமக்கு இன்பத்தை கொடுக்குமா என்றால் நிச்சயம் இன்பத்தை கொடுக்கும்.
துறவு என்பது நம்முடைய அனைத்து உடைமைகளையும் உறவுகளையும் துறந்து தனிமையில் அடுத்த வேலை உணவுக்கு அடுத்தவர் கையை பார்த்து வாழ்வது துறவு அல்ல.
நாம் எதையெல்லாம் நம்முடையது என்று உரிமை கொள்கின்றோமோ அது வழியாக தான் நமக்கு துன்பங்கள் வருகின்றன!
நாம் உரிமை கொள்ளாத எது ஒன்றும் நம்மை துன்பப்படுத்த முடியாது!
நம்முடைய உடம்பை நான் என்று உரிமை கொள்வதால் தான் துன்பப்படுகின்றோம் !
நம்முடைய உறவுகளை என்னுடைய உறவு என்று உரிமை கொள்வதால் தான் அவர்கள் படும் துன்பம் நம்மை துன்பப்படுத்துகின்றது !
என்னுடைய உடமை என்று பொருட்கள் மீது உரிமை கொள்வதால் தான் உடமையை இழந்ததும் துன்பப்படுகின்றோம்!
மிகப்பெரிய செல்வந்தர்கள் அவர்கள் சேர்த்த செல்வத்தை அவருடையது என்று உரிமை கொள்வதால் அதை பாதுகாக்க இன்பத்தை இழந்து வாழ்கின்றார்கள்.பணம் இல்லை என்றால் வாழ்க்கை இல்லை, பணமே வாழ்க்கை இல்லை, இன்பம் மட்டுமே வாழ்க்கை.இன்பத்திற்கு எதிராக உறவுகளும், உடைமைகளும் இருந்தால் அதைத் துறந்து இன்பமாக வாழ்வதுதான் உண்மையான துறவு வாழ்க்கை.
என்னுடையது என்று உடமைகளையும், சுற்றங்களையும் அதிகரிக்க அதிகரிக்க துன்பமும் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கும். இது இயற்கையின் விதி. எனவே துன்பத்திலிருந்து விடுபட துறவு வாழ்க்கை முறை ஒன்றே தீர்வு.
துறவு வாழ்க்கை என்பது அனைத்து உடைமையையும், உறவையும் துறந்து இன்பத்தையும் துறந்து வாழ வேண்டும் என்று முன்னோர்கள் கற்பித்தது மிகப்பெரிய அறியாமை.
உண்மையான துறவு வாழ்க்கை என்பது
உறவுகளை தேவையான அளவுக்கு குறைத்துக் கொண்டு,
நண்பர்களை தேவையான அளவுக்கு குறைத்துக் கொண்டு,
செல்வத்தை வாழ்வதற்கு தேவையான அளவுக்கு மட்டும் சேர்த்துக் கொண்டு, போதும் என்ற மன நிறைவை பெற்று இன்பமாக வாழ்வதுதான்.