22 April 2022
by
Vijayakumaran
மரத்திலிருந்து பழைய இலைகள் உதிர்ந்து புதிய இலைகள் துளிர் விடுவது போல், பழைய கருத்துக்கள் நம்மிடமிருந்து உதிர்ந்தால் தான் புதிய கருத்துக்கள் நம்மிடம் துளிர்விட முடியும்.
வள்ளலார் அவர்களுக்கு தான் எழுதிய ஐந்து திருமுறைகளும் தவறு என்று தோன்றியதால் தான் ஆறாவது திருமுறையை எழுதினார், ஆறாவது திருமுறை எழுதியவுடன் இதற்கு முன் எழுதிய ஐந்து திருமுறைகளையும் படிக்காதீர்கள் கொலுத்திவிடுங்கள் என்று சொல்லிவிட்டார், இதுவே வள்ளலார் அறிவு வளர்ச்சிக்கு சான்று.
ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய இறந்த காலத்தில் இருந்து மட்டுமே அறிவை தருவதால், காலமே அனைவருக்கும் அறிவை கொடுக்கின்றது. வள்ளலார் இன்னும் பத்துஆண்டுகள் இந்த உலகில் வாழ்ந்து இருந்தால் புதிய அறிவால் ஏழாவது திருமுறையும் எழுதி ஆறாம் திருமுறையையும் தீயிட்டுக் கொளுத்த சொல்லியிருப்பார். வள்ளலாரை போல் உள்ளத் தூய்மை கொண்ட ஒருவரால்தான் தன்னுடைய பழைய கருத்துக்கள் தவறு என்று வெளிப்படையாக சொல்ல முடியும்.
மனிதனின் அறிவு வளர்ச்சியால் புதிய கண்டுபிடிப்புகள் வர வர பழைய கண்டுபிடிப்புகள் பயனற்றுப் போவது போல், முன்னோர்களின் பழைய கருத்துக்களும், கொள்கைகளும் உலகில் இருந்து மறைந்தால் தான் புதிய கருத்துகளும், கொள்கைகளும் துளிர் விட முடியும்.
பொருளாதாரத்திலும், கல்வியிலும், அறிவியலிலும் முன்னேற்றமடைந்து இருக்கும் நவீன உலகத்தில், நூறு ஆண்டுக்கு முன் வாழ்ந்த காந்தி, பெரியார், அம்பேத்கார் போன்ற சமுதாய தலைவர்களின் கருத்துக்கள் அனைத்தையும் சரி என்று அரசியலுக்காக தாங்கிப் பிடிப்பது அறியாமை.
காந்தி, பெரியார், அம்பேத்கர் போன்ற சமுதாய தலைவர்கள் மேலும் 50 ஆண்டுகள் வாழ்ந்திருந்தால் புதிய அனுபவத்தால் புதிய அறிவைப் பெற்று தங்களுடைய கருத்தையும், கொள்கையையும் மாற்றிக்கொண்டு இருப்பார்கள்.இந்த புரிதல் இல்லாமல் செக்குமாடு போல் பழைய கருத்துக் குள்ளேயே சுற்றி வருவது அறிவு வளர்ச்சி அல்ல. தன்னுடைய பழைய கருத்திலிருந்தும்,நம்பிக்கையில் இருந்தும் ஒருவர் விடுபட்டு சிந்தித்தால் தான் புதிய கருத்துகளை உள்வாங்க முடியும்.
நான் என்ற உணர்வே சுயநலத்திற்கு காரணம்,
நான் என்ற உணர்வு இல்லாமல் இங்கு யாரும் இல்லை.
நான் எழுதுவதும் சுயநலம் தான், நீங்கள் படிப்பதும் சுயநலம் தான். என்னுடைய சுயநலம் என்பது நீண்ட நாள் பயிர் போன்றது,
என்னுடைய சந்ததிகள் நலனுக்காக வருங்காலத்தில் அமைதியான சமுதாயம் உருவாக வேண்டும் என்பதற்காக நான் எழுதுகின்றேன். பணத்திற்கு வாக்களிப்பது, பணத்திற்கு அரசியல் செய்வது போன்றவை குறுகிய காலத்து பயிர் போன்றது. இரண்டு சுயநலமும் வாழ்க்கைக்கு தேவை என்றாலும், நீண்ட நாள் பயிரான மரங்களை வளர்த்தால் தான் (சமுதாயத்தில் ஒழுக்கத்தைக் கட்டமைத்தால் தான் )வருங்கால சமுதாயத்திற்கு நன்மை என்ற புரிதலோடு செயல்படுவது தான் நாம் அடுத்த தலைமுறையினருக்கு சேர்த்து வைக்கும் சொத்து.
எனவே உங்களுடைய பழைய கருத்துக்கள் அனைத்தையும் உதிர்த்துவிட்டு என்னுடைய கட்டுரைகள் அனைத்தையும் படித்து புதியதாய் துளிர்விட வாழ்த்துக்கள்.