17 July 2025
by
Vijayakumaran
தோல்வியால் துவண்டு போயிருக்கும் இளைஞர்களுக்காகவே இந்த கட்டுரையை எழுதுகின்றேன். மருத்துவ படிப்புக்கு தேர்வாகவில்லை, காதல் தோல்வி என்று தோல்வியின் விரக்த்தியில் பல இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்வதை கேள்விபட்டு அதன் பாதிப்பில் இந்த கட்டுரையை நான் எழுதுகின்றேன்.இந்த கட்டுரையை படித்துவிட்டு குறைந்தது ஒரு இளைஞர் தன் முடிவை மாற்றிக் கொண்டால் அந்த புண்ணியம் அவருக்கு பகிர்ந்த நபருக்கே போய் சேரும்.
வெற்றியும்,தோல்வியும் இரண்டு பாதைகள், வெற்றியின் பாதையில் சென்று துன்பத்தை சென்றடைந்தவர்களும் உண்டு,தோல்வியின் பாதையில் சென்று இன்பத்தை அடைந்தவர்களும் உண்டு, எனவே வெற்றியும், தோல்வியும் வாழ்க்கையின் இன்பத்தையும், துன்பத்தையும் தீர்மானிக்க வில்லை.
நாம் செல்ல வேண்டிய இடம்தான் நம்முடைய குறிக்கோள், செல்லும் பாதை எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம் நம்முடைய இலக்கு இன்பமாக வாழ வேண்டும் என்பதுதான். மருத்துவராக வேண்டும் என்பது இலக்கு அல்ல மருத்துவர் ஆனால் இன்பமாக வாழலாம் என்ற நம்பிக்கையே மருத்துவராக வேண்டும் என்ற ஆசைக்கு காரணம்.
மருத்துவர்கள் அனைவரும் இன்பமாக வாழ்கிறார்களா என்றால் இல்லை, காதலித்தவரை திருமணம் செய்து கொள்ள முடியவில்லை என்றால் வாழ்க்கையில் இன்பமே இல்லை என்ற முடிவுக்கு சென்று தற்கொலை செய்து கொள்கின்றார்களே, காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் அனைவரும் இன்பமாக வாழ்கின்றார்களா என்றால் இல்லை. இலக்கை மறந்துவிட்டு குறுகிய பார்வையில் பாதையை இலக்காக நினைப்பதுதான் தற்கொலைக்கு காரணம்.
இன்பமாக வாழ்வதற்கு மருத்துவராக வேண்டும் என்பது மட்டுமே வழி அல்ல, நாம் வாழ்க்கையில் உயர்வதற்கு பல ஆயிரம் வழிகள் இருக்கின்றன ஒரு வழி மூடிவிட்டால் மாற்று வழியை கண்டுபிடிப்பது தான் அறிவு.
இன்பமாக வாழ்வதற்கு விரும்பியவரை திருமணம் செய்து கொள்வது மட்டுமே வழி அல்ல, பல ஆயிரம் பேர் தயாராக இருக்கின்றார்கள் உன் வாழ்க்கையை இன்பமாக்க,விரும்பியதை விரும்பாமல் போவதற்கும், விரும்பாததை விரும்புவதற்கும் காலத்தால் நிச்சயம் முடியும்.
நம்முடைய தேவைகளும் விருப்பங்களும் நிறைவடையும்போது ஆனந்தமாக இருக்கின்றோம், நம்முடைய தேவைகளும் விருப்பங்களும் வயதுக்கு ஏற்ப மாறிக் கொண்டே தான் வருகின்றது, பிறந்தவுடன் பால் கிடைத்தால் ஆனந்தம், விளையாட்டு பருவத்தில் விளையாட்டு பொருள் கிடைத்தால் ஆனந்தம், பள்ளிக்குச் செல்லும் போது மதிப்பெண் கிடைத்தால் ஆனந்தம், வாலிப பருவத்தில் வேலை கிடைத்தால் ஆனந்தம், விரும்பிய வாழ்க்கை துணை கிடைத்தால் ஆனந்தம், அனைத்து பருவத்திலும் அனைத்தும் கிடைக்கப் பெற்றவர்கள் இந்த உலகில் யாரும் இல்லை. ஒரு பருவத்தில் துன்பப்பட்டால் மற்றொரு பருவத்தில் நிச்சயம் இன்பமாக வாழ்வோம். இன்பமும், துன்பமும் யாருக்கும் நிரந்தரமல்ல.
பள்ளிப் பருவத்தில் நான் படாத துன்பமில்லை,பத்தாம் வகுப்பில் ஆங்கிலத்தில் ஆறுமுறை தோல்வி அடைந்து ஏழாவது முறை தான் தேர்ச்சி பெற்றேன்.என்னுடன் படித்த பலர் பொறியியல் படிப்பை முடித்து உயர் பதவியில் சேர்ந்து விட்டார்கள், நான் பத்தாம் வகுப்பு கூட தேர்ச்சி பெறாத நிலையில் ITI யில் கூட சேர எனக்கு இடம் கிடைக்கவில்லை.ஆறாவது முறையும் தேர்வில் தோல்வியடைந்த போது என்ன செய்வது என்றே தெரியாமல் துன்பத்தில் இருந்தபோது, எங்கள் வீட்டுக்கு வந்த அப்பாவின் நண்பர் சொன்னது “வெற்றி பெற்றவர்கள் அனைவரும் அறிவாளியும் அல்ல, தோல்வி அடைந்தவர்கள் அனைவரும் முட்டாளும் அல்ல” நீ அறிவாளி நிச்சயம் பெரிய ஆளா வருவாய் என்று சொன்னது எனக்கு மிகவும் ஆறுதலாகவும், ஊக்கமாகவும் இருந்தது.
இன்று படிப்பால் உயர் பதவியில் இருக்கும் என்னுடைய நண்பர்களை விட சுய தொழிலால் நான் பல மடங்கு பேரிலும், புகழிலும், செல்வத்திலும் உயர்ந்து இருக்கின்றேன். இதற்கு காரணம் தோல்வியை கண்டு துவலாமல் மாற்றுப் பாதையை நான் தேர்வு செய்தது தான்.
இன்பம், துன்பம், கோபம், வலி என்று உணர்வின் மிகையில் நாம் இருக்கும்போது எந்த முடிவையும் எடுக்கக்கூடாது, காரணம் உணர்வு மிகையில் இருக்கும்போது அறிவு சொல்வதை உணர்வு கேட்காததால், உணர்வு சொல்லும் படி தான் நாம் எடுக்கும் முடிவு இருக்கும்,இந்த சூழலில் தான் தற்கொலை முடிவை எடுக்கின்றார்கள்.
கோபத்தில், துயரத்தில் இருக்கும் போது யாருடைய வழிகாட்டுதலையும், உபதேசத்தையும், அறிவையும் ஏற்கும் நிலையில் யாரும் இருக்க மாட்டோம். எனவே சமநிலையில் நாம் இருக்கும்போதே இதுபோன்ற அறிவை பெற்று உணர்வின் மிகையால் நாம் இருக்கும்போது உணர்வை ஆளுமை செய்யக்கூடிய அளவுக்கு அறிவை வலிமைப்படுத்தி பழகிக் கொள்ள வேண்டும், பழக்கத்தின் மூலம் தான் அறிவால் உணர்வை ஆளுமை செய்ய முடியும்.
என்னுடைய அனுபவத்தில் நான் பெற்ற அறிவு துன்பமும், தோல்வியும் நிலையானது அல்ல!
பாதை எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம் இலக்கு இன்பமாக வாழ வேண்டும் என்பது மட்டுமே!
பாதையை இலக்காக நினைத்து இன்பமான வாழ்க்கையை இழந்து விடாதீர்கள்!