13 April 2024
by
Vijayakumaran
எந்த ஒரு விருப்பு, வெறுப்பு இல்லாமல்,
அரசியல் கலப்பு இல்லாமல்,
மத உணர்வு இல்லாமல்,
மொழிப்பற்று இல்லாமல்,
அனைத்து உணர்விலிருந்தும் விடுபட்டு அறிவின் ஆளுமையில் அறிவியல் பூர்வமாக நடுநிலையில் இந்த கட்டுரையை நான் எழுதிஇருக்கின்றேன்.
ஒரு மதத்தின் அடையாளமாக, ஒரு இனத்தின் அடையாளமாக 365 நாட்களில் எந்த ஒரு நாளை வேண்டுமானாலும் ஆண்டில் முதல் நாளாக அடையாளப்படுத்திக் கொள்ளலாம், சூரியனை பூமி சுற்றிவர எடுத்துக் கொள்ளும் 365 நாட்களில் எந்த ஒரு நாளையும் ஆண்டின் முதல் நாளாக எடுத்துக் கொள்வதில் தவறு இல்லை காரணம் அது ஒரு குறியீடு மட்டுமே.
ஆண்டின் முதல் நாளை அறிவியல் பூர்வமாக கண்டறிய சூரியன், பூமி, சந்திரன் ஆகிய மூன்று கோள்களின் சுழற்சி முறையை நாம் கணக்கில் கொள்ள வேண்டும்.சூரியனுடைய ஒளி பூமியின் மீது படுவதை வைத்து நாளின் தொடக்கத்தை கணக்கிடுகின்றோம். அறிவியல் படி இரவு 12 :00மணி யை நாளில் தொடக்கமாக பார்க்கின்றோம், தமிழ் பஞ்சாங்கப்படி காலை 6:00மணி யை நாளின் தொடக்கமாக பார்க்கின்றோம், இதில் எது சரி.
சூரியனுடைய ஒளி பூமியின் மீது இரவு 12 :00மணிக்கு விழத்தொடங்குகிறதா ?அல்லது காலை 6:00மணிக்கு விழத்தொடங்குகின்றதா?
இங்கு சற்று இடைவெளி விட்டு அதற்கான பதிலை நீங்களே முடிவு செய்த பிறகு மீண்டும் படிக்க தொடங்குங்கள், அப்பொழுதுதான் நான் எழுதியதன் முக்கியத்துவம் உங்களை வந்து சேரும்.தொடர்ந்து படித்தால் அதுதான் தெரியுமே என்று கடந்து சென்று விடுவீர்கள் உங்களுக்கு என்ன தெரியும் என்பதை நீங்களே முடிவு செய்த பிறகு படியுங்கள் அப்போதுதான் நான் எழுதியது உங்கள் வாழ்நாள் முழுவதும் நினைவில் நிற்கும்.
வெறும் கண்ணால் பார்த்தால் பூமி தட்டையாக தெரிவது போல் சூரியனின் ஒளி பூமியில் விழத் தொடங்குவது காலை 6:00மணி ஆக தான் தெரியும். அதையே அறிவியல் புரிதலோடு அறிவு கண்ணை திறந்து பார்த்தால் இரவு 12 :00மணிக்கு சூரியன் ஒளி விழத்தொடங்கியது நமக்கு தெரியும்.
சந்திரன் மீது சூரியனின் ஒளி விழுவதை வைத்தே அமாவாசையும், பௌர்ணமியும் இரவு, பகல் போல் சந்திரனில் உருவாகின்றது. பௌர்ணமிக்கு பிறகு நிலவு தேய்ந்து அமாவாசை உருவாகின்றது. அமாவாசை அன்று நிலவு சூரியனின் ஒளி இல்லாமல் முழு இருட்டாக இருக்கும், இது பூமியின் இரவு 12 :00மணிக்கு சமம்.
அம்மாவாசைக்கு அடுத்த நாள் வளர்பிறை சந்திரன் new moon அதாவது அமாவாசைக்கு அடுத்த நாளே சந்திரன் சூரிய ஒளியை பெற ஆரம்பித்து விடுகின்றது, அதுபோல்தான் பூமியும் இரவு 12 :00மணிக்கு பிறகு சூரியனின் ஒளியை பெற ஆரம்பித்து விடுகின்றது, அதனால் தான் நாளின் தொடக்கத்தை இரவு 12:00மணியாக வைத்துள்ளார்கள். எனவே தமிழ் பஞ்சாங்கப்படி நாளின் தொடக்கத்தை காலை 6:00மணியாக நினைப்பது தவறு.
அமாவாசைக்கு அடுத்த நாள் வளர்பிறை, புதிய நிலவு என்பதை போல் பூமிக்கும் புதிய பூமி என்ற ஒன்று நிச்சயம் இருக்கு,அதுதான் வருடப்பிறப்பு. பூமி சூரியனை சுற்றிவர 365 நாட்கள் ஆகின்றன. சூரியன் ஆறு மாதம் தென்திசையிலும் ஆறு மாதம் வட திசையிலும் இருக்கும், சூரியன் நேர்கிழக்கில் இருக்கும் போது தான் சித்திரை மாதம், சூரியனிலிருந்து அதிக ஒளியை பெறக்கூடிய மாதம் சித்திரை என்பதால் சித்திரை மாதத்தை நாளோடு ஒப்பிடும்போது மதியம் 12 :00மணி என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஆண்டின் தொடக்கத்தை கண்டறிய மூன்று மாதம் பின்னோக்கி சென்று சூரியன் தென்திசையில் இருந்து பயணத்தை தொடங்குகின்ற தை 1ம் தேதியே ஆண்டின் ஆரம்பமாக இருப்பதால் அறிவியல் படி தை ஒன்றே தமிழ் வருட பிறப்பு.
காலை 6 :00மணியை நாளின் தொடக்கமாக நினைப்பதும், சித்திரை ஒன்றை ஆண்டின் தொடக்கமாக நினைப்பதும், அறிவியல் புரிதல் இல்லாமல் வெறும் கண்ணால் பார்ப்பவர்களின் நிலைப்பாடு.