"கனவு காணுங்கள்" என்று டாக்டர் அப்துல்கலாமும், " அனைத்துக்கும் ஆசைப்படுங்கள்" என்று ஜக்கிவாசுதேவும், மக்களுக்கு உபதேசம் செய்து உள்ளது, அம்மிக்கல் பறக்காமல் அமுக்கிபிடியுங்கள் என்பதைப் போன்றது.
முன்னேற வேண்டும் என்ற ஆர்வமும், அனைத்துக்கும் ஆசைப்படுவதும், பிறப்பால் நாம் பெற்ற உணர்வு, இந்த உணர்வுகள் அறிவால் பெறப்படுபவை அல்ல, அது பிறப்பின் இயல்பு. எனவே உணர்வை ஏற்படுத்துவது என்பது கல்லை பறக்காமல் அமுக்கி பிடிப்பது போன்றது. கல்லை எப்படி தூக்குவது என்பதை தெரிந்து கொள்வதற்குதான் நமக்கு அறிவு தேவைப்படுகின்றது.
இளைஞர்களுக்கு பிறப்பால் நாம் பெற்ற உணர்வுகளையும், ஆசைகளையும், எப்படி அடைவது என்பதற்குத்தான் அறிவு தேவைப்படுகிறது. அந்த அறிவுதான், அறிவை அறிவால் ஆளுமை செய்யும் "ஏழாவது அறிவு".
நம்முடைய உணர்வைத் தூண்டக்கூடிய வகையில் யார் பேசினாலும் அது பயனற்றதாக இருந்தாலும், அந்தப் பேச்சை நம்மை அறியாமலேயே விரும்பி கேட்போம். காரணம் உணர்வுக்கு எப்போதும் தீனி வேண்டும், இது உணர்வின் இயல்பு, அதனால்தான் இதுபோன்ற உபதேசங்கள் நமக்கு பயனற்றது என்ற போதிலும் பயன் உள்ளது போன்றே தோன்றுகின்றது.