யார் ஒருவராலும் அனைத்தையும் புரிந்து கொள்ள முடியாது, காரணம் கற்றது கையளவு கல்லாதது கடலளவு, எனவே புரிந்து கொள்ள முடியாததை நம்பித்தான் ஆகவேண்டும்.
நம்பிக்கை என்பது அறியாமையின் வெளிப்பாடு,
புரிதல் என்பது அறிவின் வெளிப்பாடு.
கடவுள் இருக்கு என்ற நம்பிக்கையும், கடவுள் இல்லை என்ற நம்பிக்கையும் அறியாமையின் வெளிப்பாடே.
ஒரு நம்பிக்கையை மற்றொரு நம்பிக்கையால் சிதைப்பதும் அறியாமையின் வெளிப்பாடே, இந்த இரண்டு நம்பிக்கையையும் தவறு என்று அறிவியலால் புரிந்து கொண்டால் அது தான் அறிவு. இந்த அறிவை உலக மக்கள் பெறாததால் தான் இரண்டு நம்பிக்கைகளுக்கும் இடையில் விவாதங்கள் நடந்து கொண்டே இருக்கின்றது.
இரண்டு நம்பிக்கையும் தவறு என்று அறிவியல் பூர்வமாக நிரூபித்து நான் எழுதிய “உன் செயலுக்கு நீ காரணம் அல்ல “ என்ற புத்தகத்தில் எழுதி இருக்கின்றேன், இருப்பினும் இரண்டு நம்பிக்கையை விட்டும் இருவரும் வெளியே வர விருப்பம் இல்லாததால் தான் நான் பெற்ற அறிவை உலக மக்கள் பெற முடியாமல் இரண்டு நம்பிக்கைகளுக்கும் இடையில் விவாதங்களும், விபரீதங்களும் நடந்து கொண்டே இருக்கின்றது.
ஆன்மீகத்தாலும், மதத்தாலும் மக்களிடம் பிரிவினையை ஏற்படுத்தி சூழ்ச்சியால் மக்களை ஆள அல்லது அடிமைப்படுத்த நினைப்பவர்களை விரட்ட வேண்டும் என்றால் மக்கள் இயற்கையின் நீதியையும், விதியையும் அறிந்தவர்களாக இருக்க வேண்டும்.இந்த விழிப்புணர்வை சமுதாயத் தலைவர்களால் தான் ஏற்படுத்த முடியும்.
அரசியல் தலைவராகவேண்டும் என்று விரும்பும் பிரபலங்கள் பெரியாரைப் போல் தேர்தலில் போட்டியிடாமல் சமுதாயத்திற்கு எது நல்லதோ அதை உரக்கச் சொல்லும் வலிமை உள்ள சமுதாய தலைவர்களாக வந்தால் மட்டுமே ஆன்மீகத்தாலும், மதத்தாலும் மக்களை பிரித்தாளும் அரசியல் கட்சிகளை விரட்ட முடியும். குறிப்பாக நவீன கருத்தோடு, புதிய கொள்கையோடு, காலத்தின் மாறுதலுக்கு ஏற்ப புதிய பெரியார் உருவானால் மட்டுமே இந்த சமுதாயத்திற்கு பாதுகாப்பு.