7 September 2024
by
Vijayakumaran
”குமார் விதிகள் “என்ற நான் எழுதிய ஆய்வு புத்தகத்தை படித்து விதி உண்மை என்பதை புரிந்து கொள்ள முடியாத நாத்திகர்களும்,பகுத்தறிவாளர்களும்,முற்போக்குவாதிகளும் கடவுள் இல்லை என்று சொல்வதற்கும், அறிவியலைப் பற்றி பேசுவதற்கும்,அறிவைப் பற்றி பேசுவதற்கும் தகுதி இல்லாதவர்கள்.
ஆத்திகனும்,நாத்திகனும் தன்னுடைய நம்பிக்கையை அறிவின் புரிதலாக நினைத்துக் கொண்டு ஒருவரை ஒருவர் திட்டிக் கொள்வதை நான் பார்க்கும் பொழுது வேடிக்கையாக உள்ளது இரண்டு முட்டாள்களும் தன்னை அறிவாளியாக நினைத்துக் கொண்டு உணர்வின் ஆளுமையால் ஆறாவது அறிவைப் பெற முடியாமல் மிருகமாக வாழும் மனிதர்களாக தான் நான் இவர்களை பார்க்கின்றேன்.
கடந்த வாரம் சென்னையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பேசிய பேச்சாளர் ஒருவர் முன்பிறவி, மறுபிறவி, கர்மா போன்றவற்றை உண்மை என்று மாணவர்களிடம் பேசியுள்ளார். அவருடைய கருத்துக்கு ஆதாரமாக மறுபிறவி பற்றிய திருக்குறளான
“பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார்”
“எழுபிறப்பும்தீயவை தீண்டா பழி பிறங்காப்பண்புடை மக்கட் பெறின்”
என்ற திருக்குறளை மேற்கோள்காட்டி உள்ளார். இவருடைய பேச்சு தமிழகத்தில் இன்று பேசும் பொருளாக உள்ளது.இவருடைய கருத்தை நாத்திகர்கள் கண்டித்தும், ஆத்திகர்கள் ஆதரித்தும் ஊடகங்களில் கருத்தைத் தெரிவித்து வருகின்றார்கள்.
அறிவைப் பற்றிய அறிவு இல்லாத நம் சமுதாயம், தான் பெற்ற தகவலையே அறிவு என்று நம்புகின்றது. முன்னோர்கள் அவர்கள் வாழ்ந்த காலத்தில் அவர்கள் பெற்ற அறிவை நமக்கு தகவலாக கொடுத்துள்ளார்கள், அவர்கள் பெற்ற அறிவு நிகழ் காலத்தில் சரியா என்று நம்முடைய அறிவால் ஆய்வு செய்து புரிந்து கொண்டால்தான் அது அறிவு, முன்னோர்கள் சொன்னதை அப்படியே நம்பினால் அது அறிவு அல்ல.
திருக்குறள், ராமாயணம், மகாபாரதம், சிலப்பதிகாரம் போன்ற நூல்களை படித்து நினைவில் வைத்துக் கொண்டால் அதுதான் அறிவாளிக்கு அடையாளம் என்று மக்களை ஏமாற்றியதின் விளைவு தான், இன்று திருக்குறளை மேற்கோள் காட்டி திருக்குறளை தான் பெற்ற அறிவாக நினைத்துக் கொண்டு அறிவியலுக்கு எதிராக மூடநம்பிக்கையை மாணவர்களிடம் போதிக்கின்றார்கள்.
முன்பிறவி,மறுபிறவி என்று இருக்கின்றது என்று ஒருவர் சொல்கின்றார் என்றால் அதற்கு அறிவுபூர்வமான விளக்கம் வேண்டும். அறிவியல் சான்று இல்லாமல் 2000 ஆண்டுக்கு முன் திருவள்ளுவர் எழுதியதை அறிவியல் சான்றாக எடுத்துக் கொள்வது அறிவு அல்ல,அது நம்பிக்கை. தன்னுடைய நம்பிக்கையை அறிவு என்று மாணவர்களை நம்ப வைப்பது தவறு.
நான் எழுதிய “குமார்விதிகள்”என்ற புத்தகத்தில் விதி உண்மை, கடவுள் இல்லை, ஆனால் கடவுள் எனும் இயற்கை நம்முடைய செயலை பார்த்துக் கொண்டே இருக்கின்றது தொடர்பினைக்காக என்றும், அறிவு என்றால் என்ன, பகுத்தறிவு என்பது ஆறாவது அறிவு அல்ல,ஆறாவது அறிவை எப்படி பெறுவது போன்றவற்றை அறிவியல் பூர்வமாக அறிவியல் விதியை மேற்கோள்காட்டி எழுதி இருக்கின்றேன்.என்னுடைய கருத்துக்கு வலு சேர்க்க முன்னோர்களின் கருத்தை மேற்கோள் காண்பித்து யாரையும் நான் நம்ப வைக்கவில்லை புரிய வைக்கவே விரும்புகின்றேன். ஆனால் இதை புரிந்து கொள்ள இங்கு யாருக்கும் அறிவு இல்லை, அதனால் தான் நான் எழுதிய புத்தகம் சமுதாயத்துக்கு பயன்படாமல் இருக்கின்றது.
ஒரு மூடநம்பிக்கையால் மற்றொரு மூடநம்பிக்கையை ஒழிக்க முடியாது. அதாவது கடவுள் இருக்கு என்ற ஆத்திக நம்பிக்கையை, விதி உண்மை அல்ல என்ற நாத்திக நம்பிக்கையால் சிதைக்க முடியாது.
விதி உண்மை என்ற அறிவியல் உண்மையை அறிவாக நாத்திகன் எப்போது பெறுகின்றானோ அப்போதுதான் கடவுள் இல்லை என்ற அறிவை ஆத்திகனுக்கு நாத்திகனால் கொடுக்க முடியும்.
என்னுடைய பார்வையில் விதியைப் பற்றிய அறிவியல் புரிதல் இல்லாதவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் முன்பிறவி, கர்மா என்ற மூடநம்பிக்கையை பற்றி பேச தகுதி இல்லாதவர்கள்.
விதியை உண்மை என்று அறிவியல் ஆதாரத்தோடு பகிரங்கமாக நான் தெரிவிக்கின்றேன். என்னுடைய கருத்தை மூடநம்பிக்கை என்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்க தமிழக அரசின் கல்வித் துறையில் யாராவது அறிவாளிகள் இருக்கின்றார்களா?