28 October 2019
by
Vijayakumaran
“உன் செயலுக்கு நீ காரணம் அல்ல “என்ற நான் எழுதிய புத்தகம் வாசகர்களிடம் ஏற்படுத்திய தாக்கத்தின் எதிர்வினை தான் “புத்தகம் படிப்பதால் அறிவு வளராது “என்ற புத்தகத்தை நான் எழுதுவதற்கு கருவாக இருந்தது.அதுபோல் “முகமூடி”என்ற இந்த ஆய்வு கட்டுரையை நான் எழுதுவதற்கு என்னுடைய எழுத்தை தொடர்ந்து படிக்கும் வாசகர்கள் மனம் திறந்து பாராட்டிய நல் உள்ளங்களே காரணம். அவர்கள் அனைவருக்கும் என் நன்றிகள்.
என்னுடைய எழுத்தை தொடர்ந்து படிக்கும் சிலர் அதன் வலிமையை புரிந்து, இதுபோன்ற எழுத்தை யாரும் இதுவரை எழுதியதில்லை. இப்படி எல்லாம் புதியதாக மாறுபட்ட கோணத்தில் உங்களால் எப்படி யோசிக்க முடிந்தது என்று என்னை புகழும்போது நானும் அனைவரையும் போல் ஒரு கணம் ஆனந்தத்தில் திளைத்து போனாலும் மறு கணம் சிந்திக்க தொடங்கி விட்டேன் காரணம் என்னுடைய செயலுக்கு நான் காரணமல்ல என்பதை நான் உணர்ந்ததாலும், அறிவால் யாரும் யாரையும்விட உயர்ந்தவர்கள் இல்லை என்ற புரிதல் என்னிடம் இருந்ததாலும் இதற்கான காரணத்தை அறிவு தேட ஆரம்பித்துவிட்டது, அதன் தொடர்ஆய்வின் விடைதான் இந்த “முகமூடி “ஆய்வு கட்டுரை.
சிறு வயதில் யாரும் முகமூடியை அணிந்து கொள்வதில்லை, வயது ஆக, வயதுஆக, இந்த சமுதாயத்தில் வாழ வேண்டும் என்றால் கட்டாயம் ஒன்று அல்லது பல முகமூடிகளை பயன்படுத்த வேண்டியது அவசியமாகின்றது. 90% பேர் முகமூடியை தெரிந்தோ அல்லது தெரியாமலோ பயன்படுத்தி தான் வாழ்கின்றார்கள்.பத்து சதவிகிதம் பேர் மட்டும்தான் சொந்த முகத்தோடு வாழ்கின்றார்கள்.
பல முகமூடிகள் இருந்தாலும் சில முகமூடிகளையே பலரும் பயன்படுத்துகிறார்கள், குறிப்பாக அரசியல், மதம், சாதி, ஆத்திகம், நாத்திகம், முற்போக்குவாதி, பகுத்தறிவாளி, ஆன்மீகவாதி, கல்வியாளர், நேர்மையாளர், என்று பலரும் முகமூடியை பயன்படுத்துவதற்கு காரணம், மற்றவர்களை ஏமாற்ற வேண்டும் என்பதற்காக மட்டுமல்ல, அதை மாட்டிக் கொண்டால் தான் இந்த சமுதாயத்தில் வாழ முடியும் என்ற சூழல் இருப்பதால் தான் அனைவரும் அவர்களுக்கு பொருத்தமான, விருப்பமான முகமூடியை தேர்ந்தெடுத்து அணிந்து கொள்கிறார்கள்.இந்த முகமூடியை போட்டுக் கொண்ட பிறகு முகமூடிக் ஆகவே தன் வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்கின்றார்கள்,
முகமூடியால் உயர்ந்தவர்களும் உண்டு, தாழ்ந்தவர்களும் உண்டு.
அரசியல், மதம், சாதி, ஆத்திகம், நாத்திகம், என்று இவைகளை சாராமல் யார்ஒருவரும் இல்லை என்பதால் அனைவரும் முகமூடி அணிந்து உள்ளார்கள் என்று பொருளல்ல.
கட்சி சார்பு இல்லாமல் தேர்தலுக்கு, தேர்தல் தான் விரும்பிய அரசியல் கட்சிக்கு ஓட்டு போட்டால் முகமூடியை அணிந்து கொள்ளவில்லை என்று பொருள். ஆனால் தன்னுடைய நலனுக்காக, பாதுகாப்புக்காக, ஒரு கட்சியை சார்ந்து அதையே ஆதரிப்பது என்பது முகமூடியை அணிந்து கொண்டதாக பொருள்.
சாதி, மத சார்பு இல்லாமல் யாரும் இல்லை, ஆனால் சுயநலத்திற்காகவும், சமுதாயத்தில் பாதுகாப்புக்காகவும், சாதி மற்றும் மதவாதியாக தன்னை அடையாளப்படுத்திக் கொள்வது என்பது முகமூடியை அணிந்து கொண்டதாக பொருள்.
ஒருவர் ஆத்திகராக அல்லது நாத்திகராக இருப்பது என்பது அவருடைய நம்பிக்கையை பொருத்தது, இது அவரின் சொந்த முகம். ஆனால் தன்னுடைய நம்பிக்கையை சுயநலத்திற்காக ஒத்த கருத்துடையவர்கள் ஒன்றுசேர்ந்து தன்னுடைய அடையாளமாக சமுதாயத்திற்கு காட்டினால் அது முகமூடி அணிந்து கொண்டதாக பொருள்.
ஒருவர் நேர்மையாக இருப்பது என்பது அவரின் இயல்பான முகமாக இருக்கலாம் ஆனால் அரசு அதிகாரிகளோ அல்லது பிரபலமானவர்களோ தன்நேர்மையை தன்னுடைய அடையாளமாக வைத்துக்கொண்டு சுயநலனுக்காக ஒரு அமைப்பை உருவாக்கி அதன் மூலம் உயர் பதவியை அடைய நினைத்தால் அது முகமூடி போட்டுக் கொண்டதாக பொருள்.
நாம் நம்முடைய கண், காது, மூக்கு, வாய் மற்றும் மெய் என ஐந்து புலன்களால் மட்டுமே அறிவைப் பெற முடியும் என்ற நிலையில், மெய்யைத் தவிர மற்ற நான்கு புலன்களையும் முகமூடி மூடிக் கொள்வதால் நாம் பெறக்கூடிய அறிவு தடைபட்டு புதிய அறிவும், புதிய சிந்தனையும் நமக்குள் வருவதை இந்த முகமூடிகள் தடுத்து விடுகின்றன இதனால் மற்றவர்களின் மாற்றுக் கருத்தை முகமூடி அணிந்து கொள்பவர்கள் புரிந்து கொள்ள முடிவதில்லை. இதுதான் சமுதாய ஒற்றுமைக்கு மிகவும் பாதகமாக உள்ளது.
அரசியல், மதம், சாதி, ஆத்திகம், நாத்திகம், முற்போக்குச் சிந்தனையாளர், பகுத்தறிவாளி, ஆன்மீகவாதி, கல்வியாளர், நேர்மையாளர், என்று எந்த முகமூடியையும் நான் அணிந்து கொள்ளாததால் தான் புதிய சிந்தனைகள் என்உள்ளே ஐந்து புலன்களின் மூலம் தங்கு தடை இல்லாமல் வந்தடைகின்றது என்பதை இந்த ஆய்வின் மூலம் நான் புரிந்து கொண்டேன். இதனால்தான் என்னுடைய எழுத்துக்கள் புதிய சிந்தனையின் வெளிப்பாடாக உள்ளது.
அரசியல் தலைவர்கள், ஆன்மிகவாதிகள், நாத்திகர்கள், எழுத்தாளர்கள், என அனைவரும் தனக்கென ஒரு முகமூடியை வடிவமைத்து போட்டுக் கொள்வதால், அவர்களை பின்தொடர்பவர்களும் அதே முகமூடியைப் போட்டுக் கொண்டு சுயநலத்திற்காக அவர்களின் பின் பயணிக்கின்றார்கள்.
எனக்கு என்று எந்த முகமூடியையும் நான் தேர்வு செய்யாததால் எனக்கு முகமூடி அணிந்த வாசகர்கள் யாரும் இல்லை. காரணம் முதல் நாள் நான் ஆன்மிகம் சார்ந்து எழுதினால் ஆன்மீக முகமூடி போட்டவர்கள் பாராட்டுவார்கள், அடுத்தநாள் நாத்திகம் சார்ந்து எழுதினால் நான் அந்நியன் என்பதை உணர்ந்து ஆத்திகர்கள் நாத்திகர்கள் என்னை பின்தொடர மாட்டார்கள், விலகி விடுவார்கள். இது போல் சாதி சமத்துவத்தைஆதரித்தும்,மறுபுறம் சாதியை ஆதரித்து முரண்பாடாக புதிய சிந்தனையில் எழுதியதால் சாதி பற்றாளர்களும் முற்போக்குவாதிகளும் என்னை பின்பற்றுவதில்லை. மற்றும் நேர்மை என்ற முகமூடியை அணிந்து கொண்டு மக்களை ஏமாற்ற நினைப்பவர்களின் முகமூடியைக் கிழித்து உண்மை முகத்தை காட்டுவதால் நேர்மையாளன் என்ற முகமூடி போட்டு கொண்டிருப்பவர்கள் என் எழுத்தை பின்பற்றுவதில்லை.
பெரும்பாலான எழுத்தாளர்கள் தனக்கென ஒரு முகமூடியை தேர்ந்தெடுத்து அணிந்து கொள்வதால் மட்டும் தான் தனக்கென ஒரு முகமூடி வாசகர்கள் கூட்டத்தை கூட்டமுடிகின்றது. என்னுடைய குறிக்கோள் என்னுடைய எழுத்துக்கு ஆதரவாக முகமூடி போட்ட வாசகர்களை ஒன்று திரட்டுவது அல்ல, முகமூடி அணிந்துள்ள வாசகர்கள் தானாக முன்வந்து முகமூடியை கழட்ட வேண்டும் என்பதுதான்.
பறவைகள் தன் எச்சத்தின் மூலம் பூமி எங்கும் விதையை விதைப்பதை தன்னுடைய கடமையாகவோ அல்லது பணியாகவோ எண்ணி செய்வதில்லை, அதுபோல் தான் என்னுடைய கருத்தும் விதைக்கப்படுகிறது தரமான விதையாக இருந்து தகுதியான மண்ணில் விழுந்தால் மக்களுக்கு பயன்தரும்.
பொதுநலத்தில் சுயநலம் இல்லை என்றால் முகமூடி எதற்கு?
முகமூடி போட்ட வாழ்க்கை பலன் தரக்கூடிய வாழ்க்கையாக இருக்கலாம், ஆனால் முகமூடி அணியாத வாழ்க்கைதான் சுதந்திரமான வாழ்க்கை என்பதை அனைவரும் உணர்ந்து உண்மை முகத்தோடு உலகஅழகை ரசிப்போம் !
உண்மை முகத்தோடு சுதந்திர காற்றை சுவாசிப்போம் !!
உண்மை முகத்தோடு மனிதத்தை நேசிப்போம்!!!