ஒரு மனிதன் மரணிக்கும் போது அவன் பெற்ற அறிவும் அவனுடன் சேர்ந்தே மரணித்து விடுகின்றது.
ஒருவர் தாம் பெற்ற அறிவை தகவலாக மற்றவர்களுக்கு கொடுக்க முடியுமே தவிர ஒருபோதும் அறிவாக கொடுக்க முடியாது. அதற்கு சான்று திருவள்ளுவர், புத்தர் போன்ற பல ஆயிரம் மகான்கள் மற்றும் பல ஆயிரம் கோடி மக்கள் வாழ்ந்த இந்த உலகில் வாழத் தெரியாமல் வாழும் இன்றைய சமுதாயமே.
முன்னோருக்கும் முன்னோரின் அறிவை நம் முன்னோர்களும், நாமும் பெற்று இருந்தால் உண்மையான ஆன்மீகத்தையும், சரியான ஆட்சிமுறையையும், கற்பின் சிறப்பையும், ஒழுக்கம், நேர்மையின் வலிமையையும், அறிந்திருப்போம் இவைகளை எல்லாம் இன்றைய சமுதாயம் அறியாமல் போனதற்கு முன்னோர்களின் அறிவை நாம் பெற முடியாததே காரணம்.
திருவள்ளுவர் சொன்ன தகவலை நம்மால் பெற முடிந்ததே தவிர அவர் பெற்ற அறிவை நம்மால் பெறமுடியவில்லை !
தகவலுக்கும், அறிவுக்கும் வேற்றுமை தெரியாமல் படித்தவன் எல்லாம் அறிவாளி என்று என்னும் இந்த சமுதாயத்தில் நான் பெற்ற இந்த அறிவும் இன்றைய சமுதாயத்திற்கு பயன்படாததும் இயற்கையின் நீதியே!
சர்க்கரை இனிக்கும் என்று ஒருவர் சொல்ல கேட்டால் அது தகவல், சர்க்கரையை சுவைத்துப் பார்த்து உணர்ந்தால் அது அறிவு. சுலையை உணராத சமுதாயத்திடம் சுவையைப் பற்றி சொன்னால் அது தகவலாக மட்டுமே இருக்குமே தவிர அறிவாக மாறாது, ஒருவர் பெரும் தகவல் அவர் அறிவாக மாறவேண்டும் என்றால் அதை சார்ந்த அறிவு அவரிடம் இருந்தால் மட்டுமே தகவல் அறிவாக மாறும்.
ஆன்மீகம் உருவானபோது மக்களிடம் இருந்த அறிவு ஆன்மிகத்தை எதிர்க்கும் போது மக்களிடம் இல்லை, ஒழுக்கமுறையை உருவாக்கி வகுக்கும்போது மக்களிடமிருந்த அறிவு அதை எதிர்க்கும் போது மக்களிடம் இல்லை.
முன்னோர்கள் வாழ்ந்து பெற்ற அறிவின் ஒரு சதவிகிதம் கூட நமக்குப் பயன்படாததால் தான் எது வாழ்க்கை, எப்படி வாழ வேண்டும் என்ற புரிதல் இல்லாமல் புதியதாக மிதிவண்டியை கற்றுக் கொண்டவனைப்போல வாழத் தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
ஒவ்வொரு விடியலும் புதியதாய் விடிகின்றது, ஒவ்வொரு மனிதனும் புதியதாய் வாழ்கின்றான்.