மதுவிலிருந்து விடுதலை...
22 September 2025
by
Vijayakumaran
மது, புகையிலை, போதை, தகாத உறவு போன்ற பழக்கங்களிலிருந்து நீங்கள் விடுதலை பெற வேண்டும், ஆனந்தமான வாழ்க்கை வாழ வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் இந்த கட்டுரை உங்களுக்கானது தான். இந்த கட்டுரையை உணர்வும், அறிவும் என்ற தலைப்பில் பல ஆண்டுகளுக்கு முன்பே நான் எழுதி பரிசோதித்து விட்டேன் இந்த கட்டுரையை படித்துவிட்டு கெட்ட பழக்கங்களில் இருந்து பலர் மீண்டு இருக்கின்றார்கள்,எனவே அனைவரும் இதை படித்து பயன்பெறுங்கள்.
நம்முடைய சிந்தனையும், செயலும் நாம் பெற்றிருக்கும் உணர்வையும், அறிவையும் அடிப்படையாகக் கொண்டது. உணர்வு பிறப்பால் நாம் பெற்றவை, அறிவு அனுபவத்தால் பெற்றவை, இவை இரண்டும் சேர்ந்துதான் நம்மை இயக்குகின்றன. இனிப்பை சாப்பிட தூண்டுவதும், கசப்பை சாப்பிடக்கூடாது என்று தடுப்பதும் உணர்வே, உணர்வுதான் முதலில் நம்முடைய அனைத்து செயலுக்குமான விருப்பத்தை மூளைக்கு தெரியப்படுத்தும். மூளை அனுபவத்தை நினைவில் வைத்துக் கொள்ளும் உறுப்பு மட்டுமல்ல, மூளை தராசு போல் செயல்பட்டு அதை உடலுக்கு தெரிவிக்கும் அற்புதமான நீதிமான். மூளை உணர்வுக்கும், அறிவுக்கும் பாரபட்சம் இல்லாமல் நடந்து கொள்ளும், உணர்வால் கொடுக்கப்படும் அழுத்தம் தராசில் ஒரு தட்டிலும், அறிவால் கொடுக்கப்படும் அழுத்தம் தராசின் மற்றொரு தட்டிலும் இருக்கும், எந்த தட்டில் அழுத்தம் அதிகம் இருக்கின்றதோ அதை செயல்படுத்த உடலுக்கு மூளை உத்தரவிடும். இதுதான் நம் ஒவ்வொரு செயலுக்கு பின்னாலும் நடக்கின்றது.
இனிப்பை பார்த்ததும் சாப்பிட தோணுவது உணர்வின் விருப்பம், இனிப்பை சாப்பிட்டால் உடலுக்கு கேடு என்று அறிவு சொன்னதும் நாம் சாப்பிடாமல் தவிர்த்தால் அறிவு வெற்றி பெற்றதாக அர்த்தம், அறிவு சொல்லியும் சாப்பிட்டால் அறிவு தோற்றதாக அர்த்தம்.
உடலின் விருப்பம்தான் உணர்வின் விருப்பம் என்றால் நான் என்பது உடலா ?அறிவா? நான் என்பது உடலும் அல்ல, அறிவும் அல்ல, நான் என்பது நம்முடைய ஆளுமை (personality )நம்மைப் பற்றி இந்த உலகில் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் தான் நான். நாம் இறந்து விட்டால் உடல் மறைந்துவிடும் ஆனால் நாம் ஏற்படுத்திய தாக்கம் மறையாது.
மரணம் என்பது நான் என்ற உணர்வுக்கு கிடைத்த விடுதலை. எனவே நான் என்பது நம் உடலில் இல்லை, நம்முடைய ஆளுமையில் தான் உள்ளது.
உடல் வாழ வேண்டும் என்பதற்காகவே நான் என்ற உணர்வை அனைத்து உயிர்களும் பெற்று இருக்கின்றன, நான் என்ற உணர்வை இயற்கை எடுத்துவிட்டால் எல்லா உயிரும் ஒன்றுதான். நன்றாக உங்கள் உடலை பாருங்கள் இந்த உடல் உங்களுடையது அல்ல !உங்களுடைய ஆளுமை தான் உங்களுடைய அடையாளம்.உங்களுடைய உடல் உங்களுடையது அல்ல எனவே உடலின் உணர்வுகளுக்கு அடிபணிந்து உங்களுடைய ஆளுமையை இழந்து விடாதீர்கள். ( இந்த பத்தியை மீண்டும், மீண்டும் படியுங்கள் எளிதில் புரிந்து கொள்ள முடியாது. இந்த அறிவு நான் தவம் இருந்து பெற்றவை.)
உடலை வருத்தி உழைக்க வேண்டும், உடலை வருத்தி உணர்வுகளை கட்டுக்குள் வைத்து ஒழுக்கமாக வாழ வேண்டும் அப்போதுதான் நான் என்ற ஆளுமை அனைவரின் மனதிலும் வாழும்.
அனுபவம் மட்டுமே அறிவு என்பதால் இந்த உலகில் அறிவால் உயர்ந்தவர்களும் அல்ல, அறிவால் தாழ்ந்தவர்களும் அல்ல. ஒவ்வொரு அறிவும் ஒவ்வொரு விதம் எனவே அனைவரும் அறிவால் சமம். ஆனால் அறிவால் உணர்வுகளை ஆளுமை செய்து ஒழுக்கமாக வாழ்பவர்கள் தான் உயர்ந்தவர்கள்.
மதுப்பழக்கத்திலிருந்து விடுபட வேண்டும் என்ற ஆவலில் இதுவரை நீங்கள் படித்து விட்டீர்கள் என்றால் நீங்கள் நிச்சயம் அறிவின் ஆளுமை மிக்கவர் தான், முயற்சி செய்தால் நிச்சயம் உங்கள் அறிவு உணர்வை வென்று விடும்.
உணர்வை வெல்ல முயற்சியும்,பயிற்சியும் தேவை ஆரம்பத்தில் சிறு, சிறு உணர்வின் விருப்பங்களை அறிவால் தோற்கடியுங்கள், பிறகு உங்கள் உடலை உங்கள் எதிரியாக கற்பனை செய்து கொள்ளுங்கள், உங்கள் உடலை எதிரியாக பார்ப்பதால் உடலில் ஆசைகளை, விருப்பங்களை ஏற்க மாட்டீர்கள். சிறுது நாட்களில் மதுவின் பிடியிலிருந்து நிரந்தரமாக விடுதலை பெறுவீர்கள். உங்களுடைய (personality )ஆளுமை வெற்றி பெற வாழ்த்துக்கள்.