19 October 2024
by
Vijayakumaran
இந்த சமுதாயத்தை பார்த்து அச்சத்தில் இந்த கட்டுரையை எழுதுகின்றேன், நடிகர் ரஜினிகாந்த் ஒரு விழாவில் பேசியதை இரண்டு நாட்களுக்கு முன் நான் கேட்டேன். தமிழ்நாட்டை ஆளக்கூடிய அளவுக்கு மக்களின் செல்வாக்கு பெற்ற ஒருவர் தினமும் மது அருந்துவேன், புகைபிடிப்பேன் என்று பொதுவெளியில் சொல்கின்றார் அதை பார்வையாளர்கள் அனைவரும் ஆரவாரம் செய்து ரசிக்கின்றார்கள்.
எதை இந்த மக்கள் விரும்புகின்றார்கள்!
எதை நோக்கி இந்த சமுதாயம் செல்கின்றது!
உணர்வை ஆளுமை செய்ய முடியாமல் பெரும்பாலானவர்கள் மதுவில் தன்னுடைய வாழ்க்கையை தொலைக்கின்றார்கள், மீதம் உள்ளவர்கள் திரைப்படத்தைப் பார்த்தும் நாவல்களைப் படித்தும் தன்னுடைய வாழ்க்கையை கற்பனையிலேயே தொலைக்கின்றார்கள்.
திரைப்படம், நாடகம் பார்ப்பவர்களும். கதை, நாவல், இலக்கிய புத்தகங்களை படிப்பவர்களும் தன்னுடைய கண்களால் இந்த உலகை பார்க்காமல் இயக்குனர்களின் கண்களாலும் எழுத்தாளர்களின் கண்களாலும் இந்த உலகை பார்க்கின்றார்கள்.
அறிவு என்பது நம் ஐந்து புலன்களின் அனுபவத்தால் பெறுவது.
நல்லறிவு என்பது நமக்கு எது நன்மையோ அதை மட்டும் நம் புலன்களால் பெறுவது.
ஒழுக்கம் என்பது நம்முடைய உணர்வுகளை ஆளுமை செய்வதால் பெறுவது.
நல்ல அறிவால் மட்டுமே உணர்வை ஆளுமை செய்ய முடியும்.
உணர்வால் மனிதனும், மிருகமும் ஒன்று, மிருகமாக இருக்கும் மனிதனின் உணர்வை கட்டுப்படுத்துவது தான் நல்லறிவு.
போட்டி, பொறாமை, பயம், கோபம், காமம் போன்ற உணர்வை திரைப்படங்களும், நாடகங்களும் தூண்டுவதால் தான் பலர் இதற்கு அடிமையாக இருக்கின்றார்கள். நாவல், இலக்கிய புத்தகங்களும் திரைப்படத்தை போல் உணர்வை தூண்டுவதால் பலர் புத்தகத்திற்கு அடிமையாக இருக்கின்றார்கள்.
மக்களின் உணர்வுகளை தூண்டி அதன் மூலம் ஒரு வகை போதையை ஏற்றி மக்களிடம் இருந்து பணத்தை கரப்பதற்காக தான் திரைப்படங்களும், நாடகங்களும், நாவல்களும், இலக்கிய புத்தகங்களும் உருவாக்கப்படுகின்றன.
உணர்வை தூண்டாத கதையும், காட்சி அமைப்பும் மக்களின் ஆதரவை பெற்றதே இல்லை.
மது போதை, குடிகாரனை நிஜ உலகில் வாழ விடாமல் போலி உலகத்திற்கு அழைத்துச் சென்று வாழ்க்கையை அழித்து விடுவது போல், பலரை திரைப்படங்களும், கதை புத்தகங்களும் அழித்து விடுகின்றன. நிஜ வாழ்க்கையில் நம்முடைய இன்பம், துன்பம் கலந்த வாழ்க்கையை அனுபவித்து வாழ்வதுதான் உண்மையான வாழ்க்கை. நம்முடைய வாழ்க்கையை அனுபவிக்கவே நேரமில்லை இந்த நிலையில் கதாப் பாத்திரங்களின் போலியான உணர்வில் மது அடிமைகளை போல் நம் வாழ்க்கையை ஏன் தொலைக்க வேண்டும்.
பள்ளிப் பருவத்தில் இருக்கும் இளைஞர்களின் காம உணர்வை தூண்டம் “அலைகள் ஓய்வதில்லை “போன்ற திரைப்படங்கள் எத்தனை ஆயிரம் பேரின் வாழ்க்கையை அழித்திருக்கும் என்பதை அணுகுண்டின் பாதிப்பை கணக்கிட முடியாது என்பதை போல் இதையும் கணக்கிட முடியாது, தொடர்ந்து அடுத்த தலைமுறையையும் பாதித்துக் கொண்டுதான் உள்ளது.
நம்முடைய கண்களால் நாம் ஒரு காட்சியை பார்ப்பதற்கும், நம்முடைய உணர்வை தூண்டுவதற்காக கதை ஆசிரியர் அதே காட்சியை பார்ப்பதற்கும் வேற்றுமை உண்டு.பேருந்து நிறுத்தத்தில் ஒரு பெண் நின்றிருந்தால் நாம் அவரை சகோதரியாக பார்ப்போம்,இதே காட்சியை கதாசிரியர் காம உணர்வோடு பார்த்தால் பார்வை ஆளர்களும் அதே உணர்வோடு தான் பார்க்க முடியும். இங்கு திரைப்படம் பார்ப்பவர்களும், கதை புத்தகம் படிப்பவர்களும் கண்கள் இருந்தும் குருடர்களாக மாறிவிடுகின்றார்கள்.
உணர்வை தூண்டக்கூடிய காட்சிகளை மக்கள் தொடர்ந்து திரைப்படத்திலோ அல்லது புத்தகத்திலோ பார்க்கும் பொழுது உணர்வை கட்டுப்படுத்தும் அறிவு இல்லாத சமுதாயமாக மாறிவிடுகின்றது.
பொழுதுபோக்குக்காக திரைப்படம், நாடகம் பார்க்கின்றேன். நாவல்களை, இலக்கியங்களை படிக்கின்றேன் என்பது மிகப்பெரிய தவறு. காரணம் நாம் எதை பார்க்கின்றோமோ, எதை கேட்கின்றோமோ அது நம் அறிவாக மாறி நம்முடைய அனுமதியில்லாமலேயே நம்மை இயக்கும். எனவே இலவசமாக காட்டினாலும் கூட பார்க்க கூடாததை பார்க்க கூடாது.
பொழுதுபோக்கால் நம் அறிவு கெடாமல் மகிழ்ச்சியாக இருக்க சிறந்த இசையை கேட்கலாம், நகைச்சுவையை பார்க்கலாம், கார்ட்டூன் பார்க்கலாம்.
உணர்வை தூண்டக்கூடிய அறிவு நமக்கு தேவையில்லை காரணம் அனைத்து உணர்வுகளையும் நாம் பிறக்கும் போதே பெற்றிருக்கின்றோம். நாம் பெற்றிருக்கும் உணர்வை ஆளுமை செய்ய தான் அறிவு தேவைப்படுகின்றது. இந்த அறிவை எது நமக்கு கொடுக்கின்றதோ அதுவே நல்லறிவு.