3 July 2024
by
Vijayakumaran
போட்டி,பொறாமை,காமம்,பணம்,பதவி போன்ற உணர்வின் பிடியில் மக்கள் சிக்கி கிடப்பதால் மக்களிடம் சிந்தனை வறட்சி உள்ளது.அவர்களுடைய சிந்தனை அவர்களுடைய உணர்வுக்கு அடிமைப்பட்டு கிடக்கின்றது.
“நம்முடைய சிந்தனை நம் கட்டுப்பாட்டில் இல்லை இறந்த காலத்தின் தொடர்போடுதான் இருக்கின்றது, இதிலிருந்து விடுபட்டு சுயமாக, சுதந்திரமாக யார் ஒருவராலும் எதை ஒன்றையும் சிந்திக்க முடியாது “என்ற இந்த நான்கு வரிகள் புரிந்தால் தான் நான் எழுதிய “குமார்விதிகள்” என்ற புத்தகத்தின் நாற்பது பக்கங்களும் புரியும்.
தங்க நாணயம் தரையில் கிடப்பதை பார்த்த நான் கையில் எடுத்து மற்றவர்களிடம் காட்டிய போது ஒரு சிலரை தவிர மற்றவர்களுக்கு அது தெரியவில்லை. கண்பார்வை இல்லாதவர்களுக்கு மற்ற நான்கு புலன்களான காது, மூக்கு,நாக்கு, மெய் மூலம் தெரியப்படுத்த முடியும் என்பதைப் போல், உணர்வின் பிடியில் சிக்கி இருக்கும் மக்களுக்கு அந்த உணர்வின் மூலம் கதையாக சொன்னால் புரியும் என்று முயற்சி செய்திருக்கின்றேன்.
நான் என்னுடைய வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை உணர்வுபூர்வமாக கதையாக சொல்கின்றேன் நீங்கள் உங்கள் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தோடு ஒப்பிட்டு நினைவு கொள்ளுங்கள்.
என்னுடைய அப்பா NLC நிறுவனத்தில் பணி புரிந்ததால் நெய்வேலியில் ஒரு வீடும்,நெய்வேலி அருகில் உள்ள சொந்த கிராமத்தில் ஒரு வீடும் இருந்தது. ஒருநாள் (எனக்கு 17 வயது இருக்கும்) கிராமத்தில் இருக்கும் தாத்தா,பாட்டியை பார்க்க வட்டம் 29 வழியாக மிதிவண்டியில் சென்றேன்.அப்போது வழியில் ஒரு லாரியில் மின் வேலைக்கு பயன்படுத்தும் PVC பைப் இருப்பதை பார்த்தேன்,அந்த லாரி சென்னையில் இருந்து நெய்வேலிக்கு வந்திருக்கின்றது என்பதை தெரிந்து கொண்டு அந்த லாரியை பின்தொடர்ந்து சென்று PVC பைப் இறக்கும் இடத்தை தெரிந்து கொண்டேன்.அந்தப் பகுதியில் NLC நிறுவனத்தால் அடுக்குமாடி வீடுகள் புதியதாக கட்டிக்கொண்டு இருந்தார்கள். மறுநாள் அந்த ஒப்பந்த நிறுவனத்துக்கு சென்று ஆறு ரூபாய் சம்பளத்தில் மின்பணியில் உதவியாளராக பணியில் சேர்ந்தேன். லாரியில் இருந்த PVC பைப்பை நான் பார்க்கவில்லை என்றால் நான் எலக்ட்ரிகல் காண்ட்ராக்டராகி இருக்கமாட்டேன்.
1986 இல் அருள் என்ற நண்பர் வட்டம் 6 ல் எலக்ட்ரிக்கல் கடை வைத்திருந்தார் அவரை சந்திக்க சென்றிருந்தபோது அவர் சொன்னார் வட்டம் 19ல் உள்ள நாலங்காடியில் ஒரு கடை மறு ஏலத்திற்கு வருகின்றது என்று, அவர் கொடுத்த தகவலால்தான் குமார் எலக்ட்ரிகல் என்ற கடையை என்னால் நிறுவ முடிந்தது.
1995 இல் தற்செயலாக ஒரு அதிகாரியை சந்தித்தேன் அவர் சொன்னார் mine 1 இல் 40 லட்சத்தில் பெரிய வேலை ஒன்று வருகின்றது அதை செய்ய நெய்வேலியில் ஒப்பந்தக்காரர்கள் யாரும் இல்லை என்ற தகவலை சொன்னார். அந்த வேலையை நான் எடுத்து செய்ததால் தான் நெய்வேலியில் நம்பர் ஒன் எலக்ட்ரிக்கல் காண்ட்ராக்டர் என்ற நிலைக்கு என்னால் உயர முடிந்தது.
1998 இல் தற்செயலாக மளிகை கடை பொட்டலம் கட்டி வந்த ஹிந்து நியூஸ் பேப்பர் பறந்து வந்து என் காலடியில் விழுந்தது அதை பிரித்துப் பார்க்கும்போது கல்பாக்கம் அனுமின் நிலையத்தில் 40 லட்சம் ரூபாய்க்கு டெண்டர் வந்து இருந்ததை பார்த்தேன்.டெண்டர் போட ஒரு நாள் தான் அவகாசம் இருந்தது முயற்சி செய்தேன் கிடைத்தது.
இதுபோன்று பல நூறு வாய்ப்புகள் என் வாழ்க்கையை வழி நடத்தியது போல் உங்களையும் பல நூறு வாய்ப்புகள் உங்கள் வாழ்க்கையை வழி நடத்தி இருக்கும்.
1984 ல் வட்டம் 5 இல் அடுக்குமாடி வீடுகள் கட்டுமான பணி நடைபெற்று இருக்கும்பொழுது நான் நான்கு வீட்டை sub contract எடுத்து ஒயரிங் செய்து கொண்டு இருந்தேன் அப்போது அங்கு கட்டுமான பணி செய்பவரின் மகள் என்னிடம் பேசியது தவறாக தோன்றியதால் வேலையை விட்டுவிட்டு ஓடி வந்து விட்டேன்.அந்த வாய்ப்பை நான் பயன்படுத்தி இருந்தால் ஒப்பந்ததாரராக வேண்டும் என்ற சிந்தனையே எனக்கு வந்திருக்காது.
இதுபோல் பலரும் தன்னுடைய அறிவால்,
விபத்து, பொருளாதாரம் போன்ற பல சம்பவங்களிலிருந்து தப்பித்து இருப்பீர்கள்.
வாசகர்கள் நினைக்கலாம் இதை தான் நாங்கள் சொல்லுகின்றோம் விதியை மதியால் வெல்ல முடியும் என்று. விதிப்படி உங்களுக்கு கிடைத்த வாய்ப்பைப் போல் அந்தப் பெண்ணின் தொடர்பும் உங்களுக்கு விதிப்படிதான் கிடைத்தது ஆனால் நீங்கள் உங்களுடைய அறிவால் அதிலிருந்து விடுபட்டு விட்டீர்கள் அல்லவா, அதனால் விதியை மதியால் வெல்ல முடியும், மனிதன் சுயமாக சிந்தித்து செயல்பட முடியும், விதியின் பெயரால் தவறு செய்யக்கூடாது என்பதற்கு இந்த நிகழ்வே சான்று என்றும் வாசகர்கள் நினைக்கலாம்.
விதியை மதியால் வெல்ல முடியும் என்ற வாசகர்களின் கருத்தை நான் முழுமையாக ஏற்கின்றேன்.அது போல் விதியை மதியால் வெல்ல முடியும் என்றால் விதியை உண்மை என்று ஏற்றுக் கொண்டீர்கள் என்ற பதிலும் அதனுள் மறைந்திருக்கின்றது என்பதை வாசகர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
நாம் பிறக்கும்போதே நம்மோடு சேர்ந்து நம் உணர்வும் பிறந்து விடுகின்றது. நம் உடல் வாழ என்ன தேவையோ அதை நம் உணர்வு நீதி, நேர்மை,ஒழுக்கம் எதையும் பார்க்காமல் அதை அடைய தான் முயற்சி செய்யும். உணர்வால் மிருகமும்,மனிதனும் ஒன்றுதான், அதனால் தான் பெரும்பாலான மனிதர்கள் தனக்கு எது நன்மையோ அதையே சரி என்று சொல்கின்றார்கள்.
உணர்வுக்கு எதிரான கருத்தை உணர்வால் ஏற்றுக்கொள்ளவே முடியாது அதனால் தான் பலரால் உணர்விலிருந்து விடுபட்டு சிந்திக்கவே முடியவில்லை. இதுவரை நான் சொன்னதை உங்கள் உணர்வு ஏற்றுக் கொள்கிறதா ?இல்லையா ?என்பதை முடிவு செய்து ஒரு பேப்பரில் ஆம், இல்லை என்று எழுதி வைத்துவிட்டு மேலும் படிக்க தொடங்குங்கள்,அப்போதுதான் உங்கள் உணர்வு என்னை ஏமாற்றாமல் இருக்கும்.
நான் இப்போது உங்கள் உணர்வுடன் சதுரங்க விளையாட்டை விளையாட போகின்றேன் சதுரங்கத்தில் உங்களுடைய உணர்வின் நகர்வை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து விடப் போகின்றேன். நகைச்சுவை நடிகர் பரோட்டா சூரி சொன்னது போல் உங்கள் உணர்வு கல்லாட்டம் ஆடக்கூடாது.
அப்பா,அம்மா இல்லாமல் யாரும் இந்த உலகில் பிறக்கவில்லை,அனைவருக்கும் அப்பா, அம்மா என்ற தொடர்பு இருக்கின்றது. தொடர்பு இருந்தால் அதன் பெயர் தான் தொடர்வினை.
தொடர்வினை என்ற இறந்தகால நிகழ்வுகளால் தான் நம்முடைய உடல் இந்த பூமியில் உருவாக்கப்பட்டுள்ளது, இந்த உடலின் உணர்வின் தேவைகள் பசி, காமம், போட்டி, பொறாமை, இன்பம், துன்பம் அனைத்தும் உடலோடு சேர்ந்தே பிறக்கின்றது. எனவே பசிக்கின்றது என்று நினைத்தால் அது தொடர்வினையால் வந்த சிந்தனை என்று பொருள்,
தொடர்வினை என்றால் அது விதி என்று பொருள்,
உணர்வின் தூண்டுதலால் நாம் நினைக்கும் அனைத்துக்கும் தொடர்வினை தான் காரணம்.
தொடர் வினையால் நாம் எதை நினைத்தாலும் அந்த நினைத்தல் நம் கட்டுப்பாட்டில் இல்லை என்று தான் பொருள்.
பசிக்கின்றது என்று நினைப்பது நம் கட்டுப்பாட்டில் இல்லை.ஆனால் சாப்பிடலாமா, வேண்டாமா என்பது நம் அறிவின் கட்டுப்பாட்டில் உள்ளது.
சதுரங்க விளையாட்டில் ராஜாவுக்கு செக் வைக்கப் போகின்றேன், இப்போது கடைசி கட்டத்தில் இருக்கின்றோம். இதுவரை நான் அனைத்தையும் முரண்பாடு இல்லாமல், வெளிப்படையாக, தெளிவாக தான் சொல்லியிருக்கின்றேன். புரியவில்லை என்றால் மீண்டும் ஒரு முறை படித்துவிட்டு வாருங்கள் புரியாமல் தொடர்ந்து படிக்க வேண்டாம்.
அறிவு என்றால் என்ன ?
பிறந்தது முதல் இந்த நொடி வரை நம் ஐந்து புலன்களால் நாம் பெரும் அனுபவம் தான் அறிவு.
பார்ப்பதால், படிப்பதால், கேட்பதால், நுகர்வதால், சுவைப்பதால், மெய் உணர்வால் நம்முடைய மூளையில் சேர்த்து வைத்திருக்கும் தகவல் தான் அறிவு.
இந்த அறிவு வெளி உலக தொடர்பால் மட்டுமே நமக்கு கிடைப்பதால் நாம் பெரும் அறிவு தொடர் வினையெனும் விதிக்கு உட்பட்டே இருக்கின்றது.
லாரியில் இருந்த PVC பைப்பை என் கண்களால் நான் பார்த்து அறிவாக எனக்குள் வந்ததை விதி என்று ஆரம்பத்திலேயே உங்கள் உணர்வு ஒப்புக்கொண்டு விட்டது. எனவே நாம் வெளி உலகில் இருந்து பெற்றிருக்கும் அறிவு அனைத்தும் விதியால் பெற்றவையே.
நம்முடைய சிந்தனை
1) பிறப்பால் நாம் பெற்ற உணர்வின் வெளிப்பாடாக இருக்கும்.
2) வெளி உலக தொடர்பால் நாம் பெற்றிருக்கும் அறிவால் இருக்கும்.
இந்த இரண்டு சிந்தனையும் தொடர்வினை எனும் விதியால் நாம் பெற்றவையே. இதை கடந்து சுயமாக நம்மால் எதை ஒன்றையும் சிந்திக்கவே முடியாது.எனவே விதி உண்மை.
உங்கள் உணர்வு எனும் ராஜாவுக்கு செக் மேட் வைத்தாகி விட்டது.
எப்படியாவது புரிஞ்சுகிட்டு எனக்கு பத்து ரூபாய கொடுத்து விடுங்கள், இதற்கு மேலும் என்னால் புரிய வைக்க முடியாது.