15 May 2018
by
Vijayakumaran
எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களின் கதை...
ஒரு கால் இல்லாத இளைஞன் ஒருவன். அம்மாவுடன் வசித்து வருவான்.
கால் இல்லாத ஊனமும் தனிமையும் அவனை வாட்டும்.
ஒரு சமயம்,
அம்மாவோடு பேருந்தில் போகும்போது லேடீஸ் சீட்டில் உட்கார்ந்திருப்பான்.
ஒரு பெண்மணி அவனைக் கண்டபடி திட்டும்.
அவன் உடனே எழ, அவனுக்கு கால் இல்லாததைப் பார்த்து திட்டியவள் 'ஸாரி’ கேட்பாள்.
அது அவனுக்குப் பெரிய துயரத்தைத் தரும்.
ஒரு கட்டத்தில் அவன் தற்கொலை செய்ய முடிவெடுத்து, வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள ரயில்வே டிராக்கில் போய் படுத்து கிடக்கிறான்.
ரயில் வருகிற நேரம்...
ஒரு 'குஷ்டரோகி' பிச்சைக்காரன், அந்த இளைஞனை பார்த்து ஓடி வந்து காப்பாற்றி விடுகிறான்.
பின், பக்கத்தில் இருக்கும் ஒரு கல் மண்டபத்துக்கு அழைத்துப் போய் அந்த இளைஞனிடம் சொல்கிறான், "நான் ஒரு குஷ்டரோகி... எப்பிடி இருக்கேன்னு பார்த்தியா... இப்படி தான் அன்னைக்கு கூட ரயில்ல விழப்போன ஒரு கொழந்தையக் காப்பாத்தினேன்... அந்தம்மா வந்து கொழந்தைய வாங்கிட்டு நன்றி சொல்லாம என்னைத் திட்டிட்டுப் போனாங்க... அவ்வளவு அருவருப்பா இருக்கேன் நான். அப்படி பட்ட நானே உயிரோட இருக்கும் போது... உனக்கெல்லாம் என்ன இந்த கால் ஊனம் பெரிய குறையா?...’ என அறிவுரை கூறி அந்த இளைஞனின் நம்பிக்கையை தூண்டி விடுகிறான்.
தற்கொலை முயற்சியை விட்டுவிட்டு வாழ்க்கையின் மீதான புதிய நம்பிக்கைகளோடு தூங்குகிறான் ஊனமுற்றவன்.
காலையில் பார்த்தால் ரயில்வே டிராக்கில் யாரோ விழுந்து செத்திருப்பார்கள்.
அந்த இளைஞன்தான் செத்துப்போய் விட்டான் எனப் பயந்து ஓடி வருகிறாள் அவன் அம்மா.
"அம்மா... நான் இருக்கிறேன் அம்மா..." என அந்த இளைஞன் கத்திக்கொண்டே வருகிறான்.
ஆனால், அங்கே அந்த குஷ்டரோகி பிச்சைக்காரன் செத்துக்கிடக்கிறான்.
முந்தைய இரவு அந்த
இளைஞன் தூங்கிய பிறகு அந்த பிச்சைக்காரன் "இப்படிப்பட்ட ஒருவனே இந்த சமூகத்தில் வாழக் கூச்சப்பட்டு சாக நினைக் கிறான்... நாம இவ்வளவு அவமானங்களுக்கு நடுவிலே இப்படி வாழ்கிறோமே..." என யோசித்ததினாலே தண்டவாளத்தில் குதித்திருப்பான்...
செத்துப்போன குஷ்டரோகியை பார்த்து அந்த இளைஞன் சொல்கிறான், "அம்மா...! அவன் எனக்கு வாழக் கத்துக்கொடுத்தான்... நான் அவனுக்கு சாகக் கத்துக் கொடுத்துட்டேன்...!" என கதறி அழுகிறான்.
ஜெயகாந்தன்.
கதை ஆசிரியர்களால் காட்சியை சிறப்பாக சித்தரிக்க முடியும் ஆனால் ஆய்வு செய்து எழுத முடியாது.அதுபோல் என்னைப் போன்று ஆய்வு கட்டுரை எழுதுபவர்களால் மக்களை கவரக்கூடிய அளவுக்கு காட்சியை சித்தரிக்க முடியாது. ஜெயகாந்தனின் இந்தக் கதை என்னுடைய ஆய்வுக்கட்டுரையை புரிந்துகொள்ள இளைஞர்களுக்கு உதவும்.
நான் எழுதிய ஏழாவது அறிவு என்ற புத்தகத்திலிருந்து...
வாழ்க்கையில் நாம் சந்தோஷமாக வாழவேண்டும் என்பது உணர்வு. இந்த உணர்வை பூர்த்தி செய்து கொள்ள அறிவு தேவைப்படுகிறது. அறிவு என்பது அனுபவத்தால் மட்டுமே நமக்குக் கிடைக்கின்றது.
உணர்வு என்பது இன்பம், துன்பம், ஆசை, பொறாமை, கௌரவம், வலி, நான், பசி, இவைகள் அனைத்தும் மனிதனுக்கு இயல்பானவை. நாம் சுவாசிப்பது எப்படி யாரும் சொல்லிக் கொடுக்காமலே நடக்கின்றதோ அதுபோல் நம் உணர்வுகளும் யாரும் சொல்லிக் கொடுக்காமலேயே நம்மை ஆளுகின்றன.
ஒருவனிடம் இன்பமான, கௌரவமான, வாழ்க்கை வாழ்வதற்கு ஆசைப்படு அல்லது கனவு காண் என்று சொல்வது அவசியமற்றது.ஏனென்றால் அது ஒவ்வொரு மனிதனின் இயல்பான உணர்வு, அந்த இன்ப மான உணர்வை அவன் எப்படி பெறுவது, அடைவது, என்பதைத்தான் நாம் மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும், சொல்ல வேண்டும் இதுதான் கல்வி.
பெற்றோர்களும் ஆசிரியர்களும் பலமுறை மாணவர்களிடம் கெட்டவர்களிடம் பழகாதே, கெட்டதைக் கேட்காதே, கெட்டதை பார்க்காதே, என்று சொல்லி இருந்தாலும் மாணவர்கள் பலரும் அதை ஏற்றுக் கொண்டதில்லை,காரணம் ஒவ்வொருவரும் அவர்கள் மேல் அவர்கள் வைத்துள்ள நம்பிக்கை தான் அதற்கு காரணம், நான் யாருடன் பழகினாலும் என்னுடைய நிலையை நான் இழக்க மாட்டேன் என்று எண்ணுவது தான் இதற்கு காரணம். ஆனால் அறிவியல் படி அது முற்றிலும் தவறுஎன்பதை முழுமையாக நீங்கள் புரிந்து கொண்டீர்கள் என்றால் உங்கள் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
அறிவியல் படி நான் என்று சொல்வதற்கு நமக்கு சொந்தமாக நம்மிடம் எதுவுமே இல்லை, உடலாக இருந்தாலும், அறிவாக இருந்தாலும், அனைத்தும் இதுநாள் வரையில் வெளியில் இருந்து நாம் சேகரித்து வைத்தது தான்.
பிறந்தது முதல் இதுநாள் வரை உங்களுக்கு கிடைத்த அனுபவம், நீங்கள் பார்த்ததும்,கேட்டதும் தான் இப்போது உங்களிடம் உள்ள அறிவு.
உங்களுடைய அறிவு என்ன சொல்கிறதோ அதைத்தான் நீங்கள் செய்வீர்கள்,நீங்கள் செய்கின்ற செயலின் அடிப்படையில் தான் உங்கள் வாழ்க்கை அமையும். எனவே அறிவியல் படி நீங்கள் பார்த்த நிகழ்வுகளும், கேட்டசெய்திகளும், உங்களை உங்கள் அனுமதி இல்லாமலேயே வழிநடத்தும்.அல்லது செயல்படுத்தும் இதிலிருந்து எந்த ஒரு மனிதனுக்கும் விலக்குஇல்லை. மாணவர்களாக இருந்தாலும் சரி, மகான்களாக இருந்தாலும் சரி அனைவரும் இதற்கு கட்டுப்பட்டவர்கள்தான்.எனவே இப்போது வருகின்ற பல திரைப்படங்கள், நாடகங்கள், செய்திகள், விளம்பரங்களை பார்க்காமல் இருப்பது நல்லது அது போல் ஒழுக்கம் இல்லாதவர்கள், மது அருந்துபவர்களிடமும் பழகாமல் இருப்பதும் நல்லது.
நமது நட்பு வட்டத்துக்குள் யார் இருக்கின்றார்களோ அவர்களை போல் தான் நம் வாழ்க்கை இருக்கும் அவர்கள் எந்த வார்த்தை பயன்படுத்துகின்றாறோ அதே வார்த்தையைத் தான் நாமும் பயன்படுத்துவோம்.
"நீங்கள் மாற வேண்டுமென்றால் உங்கள் நட்பு வட்டத்தை மாற்றுங்கள்"நீங்கள் தானாகவே மாறிவிடுவீர்கள், நீங்கள் எப்படி வாழ விரும்புகின்றீர்களோ அதற்குப் பொருத்தமான நட்பு வட்டத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள், நீங்கள் விரும்பிய வாழ்க்கை உங்களுக்கு கிடைக்கும்.
நம் அறிவுக்கு எதை தெரியப்படுத்த வேண்டும், எதை தெரியப்படுத்தக் கூடாது என்பதை அறிந்து கெட்ட செய்தியை அல்லது கெட்ட காட்சியை பார்க்காமல் தவிர்த்தும் அல்லது பார்க்க, கேட்க நேர்ந்தால் கணத்தில் அதிலிருந்து விலகிச் சென்று
அறிவுக்கு அந்த செய்தி செல்லாமல் நாம் பெற்ற அறிவால் அறிவை வழி நடத்துவது தான் ஏழாவது அறிவு.
பல்லாயிரம் முறை பெற்றோர்களும், ஆசிரியர்களும், கெட்டவர்களுடன் பழகாதே என்று கூறியதை கேட்காத மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும், இந்த ஆய்வுகட்டுரை பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். அதன் மூலம் அவர்கள் வாழ்க்கை இன்பமாக அமையும் என்று வாழ்த்துகின்றேன்.
இந்தக் கட்டுரை பள்ளி பாடத்திட்டத்தில் இடம்பெற வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் பகிருங்கள்.