ஆறுதல் என்பது நோய்க்கு மருந்து போன்றது, உபதேசம் என்பது வளர்ச்சிக்கு வைட்டமின் போன்றது, இந்த இரண்டையும் யார் சரியாக பயன்படுத்தி கொள்கின்றார்களோ, யாருக்கு கிடைக்கிறதோ, அவர்கள் நிச்சயம் வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு செல்வார்கள்.
நான் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி அடைந்து விட்டதால், தன்னம்பிக்கையை இழந்து மிகவும் சோகத்தில் இருந்தேன். அப்போது எங்கள் வீட்டுக்கு வந்த அப்பாவின் நண்பர் எனக்கு ஆறுதலாக நீ பெரிய அறிவாளி, உன்னிடம் திறமைகள் அதிகம் இருக்கு,
"வெற்றி பெறுபவர்கள் அனைவரும் அறிவாளியும் இல்லை, தோல்வி அடைந்தவர்கள் அனைவரும் முட்டாள்களும் இல்லை" எனவே நீ தொடர்ந்து தேர்வு எழுது நிச்சயம் வெற்றி பெறுவாய், என்று சொன்னது இன்றும் பசுமரத்து ஆணிபோல் என் நினைவில் பதிந்து உள்ளது.
இந்த போராடும் பழக்கமே தோல்வி அடையும் போதெல்லாம் மீண்டும் போராட தூண்டுதலாக இன்றும் என்னிடம் இருக்கின்றது.
15 வயதில் என்னுடைய அப்பா என்னிடம் "பொய் சொல்லாமல், திருடாமல் இருந்தால் "இந்த உலகில் எந்த நிலையிலும் நீ கண்டிப்பாக பிழைத்துக் கொள்வாய் என்று உபதேசம் செய்தார். அதுபோல் என்னுடைய அம்மாவும் "கெட்ட பழக்கம் உள்ள மாணவர்களுடன் நீ பழகாமல் இருந்தால் வாழ்க்கையில் முன்னேறுவாய்" என்று உபதேசம் செய்தார்கள். அதை நான் என் அறிவுக்கு கொண்டு சென்று சரியா, தவறா, என்று அந்த வயதில் ஆராயாமல் அப்படியே நம்பி கடைபிடித்தேன். இந்த இரண்டு உபதேசங்களும் இன்றும் என்னை உயர்ந்த நிலைக்கு கொண்டு சென்று கொண்டுதான் உள்ளது.
குழந்தைகளுக்கு எப்போது ஆறுதல் தேவை, எப்போது உபதேசம் தேவை, என்பதை பெரியவர்கள் புரிந்துகொண்டு கொடுக்க வேண்டும்.ஆறுதல் தேவைப்படும்போது உபதேசம் செய்தால் பயனற்றுப் போய்விடும்,இதை தான் இன்றைய பெற்றோர்கள் செய்கின்றார்கள்.