21 August 2025
by
Vijayakumaran
செவிடன் காதில் ஊதிய சங்கை போல், அறிவைப் பற்றியும், ஆறாவது அறிவை பற்றியும் நான் ஆய்வு செய்து எழுதிய கட்டுரையால் இந்த சமுதாயத்திற்கு எந்த பயனும் இல்லை, உணர்விலிருந்து விடுபட்டு சிந்திக்கும் ஆற்றலே மனிதர்களிடம் இல்லை. இருப்பினும் புதிய யுத்தியில் புதிய முயற்சியாக இந்த கட்டுரையை எழுதுகின்றேன்.
அறிவைப் பற்றிய என்னுடைய ஆய்வின் முடிவுகள்
இறந்த காலத்தின் தொடர்பு இல்லாமல் சுயமாக மனிதர்களால் சிந்திக்கவே முடியாது,
அறிவால் யாரும் உயர்ந்தவரும் அல்ல, தாழ்ந்தவரும் அல்ல.
ஆண்களின் அறிவும், பெண்களின் அறிவும் வேறுபட்டவை.
அனுபவத்தால் மட்டுமே அறிவைப் பெற முடியும்.
அனுபவம் இல்லாமல் படிப்பதால் அறிவை பெற முடியாது.
பகுத்தறிவு ஆறாவது அறிவு அல்ல.
அறிவியலும், மருத்துவமும் ஆறாவது அறிவு அல்ல.
நான் என்ற உணர்வில் இருந்து விடுபட்டு சிந்திப்பதன் மூலம் பெறுவதே ஆறாவது அறிவு,இந்த அறிவு தான் மிருகத்திடமிருந்து நம்மை வேறுபடுத்துகின்றது
அறிவை பற்றி ஆய்வு செய்து பல கட்டுரைகள் நான் எழுதியுள்ளதால் அறிவால் நான் யாரை விடவும் உயர்ந்தவனும் அல்ல, என்னை விட யாரும் அறிவால் உயர்ந்தவர்களும் அல்ல என்ற புரிதல் எனக்கு உள்ளதால், என்னுடைய பார்வையில் அறிவால் அனைவரும் சமம். ஒருவரிடம் நான் பேசும்பொழுதே எனக்கு தெரிந்து விடும் அவருக்கு ஆறாவது அறிவு இருக்கிறதா என்பது, நான் இதுவரை பார்த்ததில் ஆயிரத்தில் ஒருவர் தான் ஆறாவது அறிவை பெற்றுள்ளார்கள்.
ஆறறிவு மனிதனை அடையாளம் காண்பது மிகவும் எளியது.
என்னுடைய தம்பி மகள் MBBS நான்காவது வருடம் படிக்கிறார் அவரிடம் நான் கேட்டது, நீ NEETஇல் அதிக மதிப்பெண் பெற்று அதன் மூலம் தேர்வாகி MBBS படிக்கின்றாய், உன்னுடன் நன்கொடை கொடுத்தும் MBBS படிப்பார்கள்,நன்கொடை கொடுத்து மருத்துவம் படிக்கின்றவர்கள் உனக்கு சமமாக படிக்கின்றார்களா என்று கேட்டேன், அதற்கு அவர் சொன்னது நீட் என்பது அது ஒரு method of selection தான் பெரியப்பா,உண்மையில் மருத்துவப் படிப்புக்கு தகுதியானவர்களை NEET ஆல் தேர்வு செய்ய முடியாது. ஆயிரத்தில் ஒருவருக்கு தான் இடம் இருக்கு என்றால் ஏதாவது ஒரு முறையில் தேர்வு செய்ய வேண்டியது உள்ளதால் முன்பு +2 மதிப்பெண்ணை அடிப்படையாக வைத்தார்கள், தற்போது நீட் மதிப்பெண்ணை அடிப்படையாக வைக்கின்றார்கள். நீட் இல்அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு தான் மருத்துவம் படிக்க அறிவு இருக்கு என்பது தவறு என்றார்.நான் நீட்டில்அதிக மதிப்பெண் பெற்றதற்கு காரணம் அந்த method of selection எனக்கு சாதகமாக இருந்ததால் நான் தேர்வாகி விட்டேன், அவ்வளவுதான் என்றார்.
இதுதான் ஆறாவது அறிவின் வெளிப்பாடு, தான் வெற்றி பெற்றவுடன் நான் என்ற உணர்வில் தன்னை பற்றி பெருமையாக நினைக்காமல் நான் என்ற உணர்வில் இருந்து விடுபட்டு சிந்திப்பது தான் ஆறாவது அறிவு.
நீட்டில் தேர்வாகாதவர்கள் பலர் IAS,IPS இல் தேர்வாகி இருக்கின்றார்கள், மொத்தத்தில் அறிவைப் பற்றிய புரிதல் இல்லாமல் நடைமுறையில் உள்ள நினைவுத்திறனை அடிப்படையாக வைத்துள்ள கல்வியின் தேர்வு முறைகள் அனைத்தும் துறைக்கு தகுதியானவர்களை தேர்ந்தெடுக்கவில்லை என்பதுதான் உண்மை.
ஒவ்வொரு தேர்வு முறையும் போட்டியை குறைக்க பலருக்கு தடையாக இருக்கும்படி உள்ளதே தவிர தகுதியானவர்களை தேர்ந்தெடுக்கும் வகையில் இல்லை.
அறிவைப் பற்றிய புரிதல் எனக்கு இருப்பதால் MBBS,IAS,IPS போன்ற உயர் கல்வியை பயின்றவர்களை நான் வாழ்த்துவேனே தவிர பாராட்ட மாட்டேன்.
பாராட்டுவது என்பது வேறு,வாழ்த்துவது என்பது வேறு,நன்றி சொல்வது என்பது வேறு, இந்த மூன்றுக்கும்மான வித்தியாசம் இங்கு படித்த பலருக்கும் தெரிவதில்லை.
ஒருவர் நமக்கு உதவினால், பொருளை கொடுத்தால், அறிவை கொடுத்தால், தகவலை கொடுத்தால் அதற்கு நன்றி சொல்ல வேண்டும்.
ஒருவர் நமக்கு உதவவில்லை ஆனால் மற்றவர்களுக்கு உதவுகின்றார், சேவை செய்கின்றார் என்றால் நாம் அவரை பாராட்ட வேண்டும்.
ஒருவர் திருமணம் செய்து இருக்கின்றார், குழந்தையை பெற்று இருக்கின்றார், புதிய வீடு கட்டியிருக்கின்றார், உயர் பதவியை பெற்று இருக்கின்றார், வேலையில் சேர்ந்து இருக்கின்றார், தேர்தலில், தேர்வில் வெற்றி பெற்று இருக்கின்றார் என்றால் அவரை நாம் வாழ்த்த வேண்டும்.
இந்த புரிதல் இல்லாமல் நன்றி சொல்ல வேண்டியவர்களுக்கு வாழ்த்துவதும், வாழ்த்த வேண்டியவர்களுக்கு பாராட்டுகள் என்று சொல்வதும் தவறு. நம்முடைய உணர்வை சரியான வார்த்தையால் வெளிப்படுத்துவது தான் மொழி ஆளுமை.
ஐந்தறிவு மனிதர்களை அடையாளம் காண்பது மிக மிக எளியது.
தனக்கு எது நன்மையோ அதையே சரி என்று சொல்பவர்கள் அனைவரும் ஐந்தறிவு மனிதர்கள்!
காரில் ஒருவர் சாலையில் செல்கின்றார் அப்பொழுது சாலையை கடக்க ஒருவர் முயல்கின்றார், அவரைப் பார்த்து காரை ஓட்டுபவர் நின்று வரக்கூடாதா என்று சொல்லிவிட்டு சென்று விடுகின்றார். சிறிது நேரம் கழித்து காரை நிறுத்திவிட்டு அதே சாலையை கடக்க காரை ஓட்டியவர் முயல்கின்றார் அப்பொழுது ஒரு வாகனம் சாலையில் செல்கின்றது அதை பார்த்து இவர் சொல்கின்றார் நின்று போக கூடாதா என்று.இப்படிப்பட்டவர்கள் தான் 99% உள்ளனர்.
தான் கார் ஓட்டியாக இருந்தால் பாதசாரிகளை குறை சொல்வது, தான் பாதசாரியாக இருந்தால் கார் ஓட்டியை குறை சொல்வது.
தான் பணக்காரனாக இருந்தால் ஏழையை குறை சொல்வது, தான் ஏழையாக இருந்தால் பணக்காரனை குறை சொல்வது.
தான் உயர்ந்த சாதியாக இருந்தால் தாழ்ந்த சாதியினரை குறை சொல்வது, தாழ்ந்த சாதியாக இருந்தால் உயர்ந்த சாதியினரை குறை சொல்வது.
நாம் எதை சார்ந்து இருக்கின்றோமோ அதை சார்ந்த கொள்கைகளை உருவாக்கிக் கொள்வது தான் ஐந்து அறிவு மனிதர்களின் இயல்பு.
மாநிலங்களின் கூட்டாட்சி தத்துவத்தில் இயங்கும் ஒன்றிய அரசு அனைத்து மாநில மொழிகளுக்கும் சம உரிமை கொடுக்காமல் வட மாநிலத்தவர்களின் ஆளுமையில் இந்தியை மட்டும் இந்தியாவின் அலுவல் மொழியாக அங்கீகரித்துள்ளது ஐந்தறிவின் வெளிப்பாடு.
உலகில் பெரும்பாலான மனிதர்கள் ஐந்து அறிவிலேயே இருப்பதால்தான் நாடுகளுக்கு இடையே சண்டை, மாதங்களுக்கு இடையே சண்டை, சாதிகளுக்கு இடையே சண்டை, குடும்பங்களுக்குள்ளேயே சண்டை என்று மனிதர்கள் மிருகத்தை போல் வாழ்கின்றார்கள்.
ஒரு மனிதனின் இயல்புநிலை ஐந்தறிவில் வாழ்வதுதான், ஆறாவது அறிவில் சிந்திக்கவும்,செயல்படவும் பழக வேண்டும். மிதிவண்டியை ஓட்டி பழகுவது போல் ஆறாவது அறிவில் சிந்தித்து, செயல்பட பழக வேண்டும்.2000ஆண்டு முதல்2010 வரை 10 ஆண்டுகள் என்னுடைய தவத்தால் அறிவைப் பற்றிய புரிதலை பெற்றேன், கடந்த 15 ஆண்டுகளாக ஆறாவது அறிவில் சிந்திக்கவும், செயல்படவும் பழகிக்கொண்டு தான் இருக்கின்றேன். இருப்பினும் பல நேரம் நான் ஐந்தறிவில் தான் என்னுடைய இயல்பான வாழ்க்கையை வாழ்கின்றேன்.
நாட்டை ஆள்பவர்கள் முதல் வீட்டை ஆள்பவர்கள் வரை அனைவரும் என்னுடைய ஆய்வு கட்டுரைகள் அனைத்தையும் படித்து புரிந்து கொண்டால் நாடுகளுக்கு இடையேயும் சண்டை வராது, குடும்பத்திற்கு உள்ளேயும் சண்டை வராது. அனைவரும் அவரவர் எல்லையை துல்லியமாக வகுத்துக் கொண்டு இன்பமான வாழ்க்கையை வாழ்வார்கள்.
பலர் பஞ்சாயத்து பண்ணியும் தீராத அப்பா, மகன் சண்டை கூட என்னுடைய ஆய்வு கட்டுரையை படித்தால் சமாதானமாகி விடுவார்கள்.