தங்க கரண்டியால் எதை எடுத்துக் குடித்தாலும் நன்மை பயக்குமா? நாம் எதனால் சாப்பிடுகின்றோம் என்பதை விட எதை சாப்பிடுகின்றோம் என்பதுதான் முக்கியம், நாம் பெரும் தகவல் படிப்பதாலும் கிடைக்கின்றது, கேட்பதாலும் கிடைக்கின்றது, பார்ப்பதாலும் கிடைக்கின்றது இதில் படிப்பதால் தகவலை பெறுகின்றவர்கள் தான் அறிவாளிகள் என்று அறிவைப் பற்றிய அறிவு இல்லாதவர்களை மூளை சலவை செய்து வைத்துள்ளார்கள்.கற்பனை கதைகளை இலக்கியமாக,நாவலாக படித்தாலும் நாடகமாக, திரைப்படமாக பார்த்தாலும், காதையாக கேட்டாலும், இவைகள் மூளையில் சேகரித்து வைக்கப்படும் குப்பைகள்.
தங்க கரண்டியால் சாப்பிட்டால் ஆனந்தமாக இருக்கும் அதை சொல்ல முடியாது அனுபவித்தால் தான் தெரியும் என்பது போன்ற கருத்தில் எனக்கு மாற்று கருத்து இல்லை,உண்மைதான் கதைகள் நம்முடைய உணர்வை தூண்டுவதால் நாம் அந்தப் பழக்கத்திற்கு அடிமையாய்கின்றோம்,நாளடைவில் அந்த கற்பனை கதைகள் நம் மூளையை குப்பை கிடங்காக மாற்றி விடுகின்றது.
கற்பனை கதைகளில் திருடனை மையப்படுத்தி கதை எழுதினால் திருடனின் செயலை நியாயப்படுத்தி கதை எழுத முடியும்!
கொலைகாரனை மையப்படுத்தி கதை எழுதினால் கொலைகாரனின் செயலை நியாயப்படுத்தி கதை எழுத முடியும்!
விலை மாதுவை மையப்படுத்தி கதை எழுதினால் விபச்சாரத்தை நியாயப்படுத்தி கதை எழுத முடியும்!
காதலர்களை மையப்படுத்தி கதை எழுதினால் திருமணத்துக்கு முன் காதலிப்பதை நியாயப்படுத்தி கதை எழுத முடியும்!
கடவுள் மறுப்பை மையப்படுத்தி கதை எழுதினால் கடவுள் மறுப்பை முற்போக்கு செயலாக எழுத முடியும்!
கடவுள் நம்பிக்கையை மையப்படுத்தி கதை எழுதினால் கடவுளை வணங்கினால் அனைத்தும் கிடைக்கும் என்பதைப் போல் கதை எழுதும் முடியும்!
சமூக நீதியை மையப்படுத்தி கதை எழுதினால் சாதி அடிப்படையில் ஆன இட ஒதுக்கீடு தான் சரியான நீதி என்பதை போல் கதை எழுதலாம்!
சனாதன தர்மத்தை மையப்படுத்தி கதை எழுதினால் குலத்தொழிலை நியாயப்படுத்தி கதை எழுதலாம்!
அரசியல் கொள்கைகளை மையப்படுத்தி கதை எழுதினால் அந்தக் கொள்கைதான் சிறந்தது என்பதை போல் கதை எழுதலாம்!
திருமணம் ஆன ஆணின் கள்ளக்காதலை நியாயப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படம் தான் முதல் மரியாதை!
திருமணம் ஆன பெண் வேறு ஒருவருடன் கள்ளத்தொடர்பு வைத்துள்ளதை நியாயப்படுத்தி எழுதப்பட்ட கதையை குறும்படமாக எடுத்து அதற்கு விருதுகளும் கிடைக்கப்பெற்றுள்ளது.
இவைகள் எல்லாம் நமக்கு சொல்லும் செய்தி கதையின் மூலம் எதை வேண்டுமானாலும் நியாயப்படுத்தி அனைவரின் மூளையையும் மூளைச்சலவை செய்துவிடலாம் என்பதுதான்.
கதைகளின் நோக்கம் நம் உணர்வுகளை தூண்டுவது தான், கதைகள் நம் உணர்வுகளை தூண்டுவதால் நம் உணர்வுகளுக்கு பிடித்த கதைகளை தேர்வு செய்து படிக்கின்றோம், நாடகங்களாகவும், திரைப்படங்களாகவும் பார்க்கின்றோம். கதை நமக்கு பிடித்த உணர்வை நியாயப்படுத்துவதால் அதையே உண்மை என்று நம்பி அதையே அறிவாகவும் நினைத்துக் கொள்வதால் தன் உணர்வுக்கு பிடித்த கதைகளைப் படித்துக் கொண்டும், எழுதிக் கொண்டும் ஒரு வட்டத்துக்குள் வாழ்பவர்களால் அதிலிருந்து விடுபட்டு சிந்திக்க முடியாமல் கற்பனைக்குள்ளேயே வாழ்கின்றார்கள்.
ஒவ்வொரு கதைகளும் எந்தவிதமான வாசகர்களுக்கு என்பதை முடிவு செய்துவிட்டு அவர்களுக்காக கதை எழுதுவதால் தான் ஒவ்வொரு எழுத்தாளர்களுக்கும் தனித்தனி வாசகர்கள் உள்ளனர்.
எவ்வளவு பெரிய எழுத்தாளராக இருந்தாலும் அவர்களுடைய கதைகள் 1) உணர்வை தூண்டி பணம் சம்பாதிக்க எழுதப்பட்டதாக இருக்கும்.
2) புரிந்து கொள்ளக்கூடிய அறிவு இல்லாதவர்களுக்கு நம்ப வைப்பதற்காக இருக்கும்.
3) ஆசிரியர்கள் தன்னுடைய கருத்தை, கொள்கையை புரிய வைப்பது போல் நம்ப வைப்பதுற்கும் கதைகள் எழுதப்படுகின்றன.
இந்த மூன்றில் ஏதோ ஒன்று தேவைப்படுகின்றவர்கள் தான் கதைகளை படிக்கின்றார்கள்.
நான் சிறுவயதில் காமிக்ஸ் புத்தகங்கள், கதை புத்தகங்கள் வாங்கி படிப்பது பழக்கமாக இருந்தது, ஒரு புத்தகத்திற்கு நாம் முதலாளியாக இருந்தால் போதும் நண்பர்களிடம் நம் புத்தகத்தை கொடுத்துவிட்டு அவர்களிடம் இருந்து வேறுஒரு புத்தகத்தை வாங்கி படித்து விடலாம்.என்னுடைய 16 வது வயதில் வாழ்க்கையில் நாம் மிக உயர்ந்த நிலைக்கு வரவேண்டும் என்று லட்சியத்தை முடிவு செய்த பிறகு கதை படிக்கும் பழக்கம் என்னுடைய சிந்தனைக்கும், செயலுக்கும் மிகவும் இடையூறாக இருந்ததால் கதைபடிக்கும் பழக்கத்தை நிறுத்திவிட்டு “ரேடியோ ரிப்பேரை எப்படி சரி செய்வது” என்ற புத்தகத்தை வாங்கி படித்து புதியதாக ஒரு ரேடியோவை நானே அசெம்பிளிங் செய்து ஆன் செய்ததும் அதில் இருந்து வந்த முதல் குரலை கேட்டது இன்றும் என் நினைவில் இருக்கின்றது. பிறகு வீடு ஒயரிங் செய்வது பற்றிய புத்தகங்கள் வாங்கி படித்து எலக்ட்ரிக்கல் காண்ட்ராக்டராக உயர்ந்தேன்.அன்று முதல் இன்று வரை அறிவியல், தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட எழுத்துக்களை தினமும் படித்துக் கொண்டுதான் இருக்கின்றேன். அறிவியல் தொடர்புடைய என்னுடைய தேடல் தொடர்ந்து கொண்டு இருப்பதால்தான் வாழ்வியலை அறிவியலோடு ஒப்பிட்டு ஆய்வு செய்து புதுப்புது ஆய்வு கட்டுரைகளை என்னால் எழுத முடிகின்றது.
அறிவைப் பற்றிய என்னுடைய ஆய்வின்படி அதிகம் படித்தவர்கள் அறிவாளிகள் அல்ல தன் உணர்வை அறிவால் ஆளுமை செய்யும் ஆற்றல் உள்ளவர்களே அறிவாளிகள்.
10.7 இல் 1.9 யை கழித்தால் என்ன விடை கிடைக்கும் என்று கேள்வி கேட்டால், கணிதம் தெரிந்தவர்கள் படிப்படியாக கணிதத்தை போட்டு விடையை சொல்வார்கள். கணிதம் தெரியாதவர்கள் இதற்கு முன் இதற்கு யார் விடை சொல்லி இருக்கின்றார்கள் என்று மேற்கோள்காட்டி விடையை சொல்வார்கள், மேற்கோள் காட்டும் நபரின் விடை சில நேரம் சரியாகவும் இருக்கும் சில நேரம் தவறாகவும் இருக்கும் ஆனால் கணிதம் தெரிந்தவரின் விடை ஒருபோதும் தவறாகாது.
சரியா? கலை இலக்கிய ஆய்வு மையத்தை நடத்தி வரும் வடலூர் போஸ்கோ அவர்கள் என்னுடைய ஆய்வு கட்டுரைகளை படித்துவிட்டு உங்கள் கட்டுரையின் சிறப்பு யாரையும் மேற்கோள் காட்டாமல் எழுதுவது தான் என்று சொன்ன பிறகுதான் நான் ஏன் அப்படி எழுதுகிறேன் என்று ஆய்வு செய்தேன்.அந்த ஆய்வில் சுயமாக சிந்திப்பவர்களுக்கு யாரையும் மேற்கோள் காட்ட வேண்டிய அவசியம் ஏற்படாது என்பதை அறிந்தேன்.
பல எழுத்தாளர்களும், பேச்சாளர்களும் திருவள்ளுவர் சொன்னார், பாரதி சொன்னார், புத்தர் சொன்னார்,விவேகானந்தர் சொன்னார், மாணிக்கவாசகர் சொன்னார், பெரியார் சொன்னார், அண்ணா சொன்னார், காந்தி சொன்னார் என்று மேற்கோள் காட்டுவதையே அறிவாக நினைத்துக் கொண்டு இருக்கின்றார்கள்.அறிவைப் பற்றிய புரிதல் படித்தவர்களிடமே இல்லை. உலகப் பொதுமறையான திருக்குறள் அறிவை கொடுக்கவில்லை,கணிதத்தில் விடையை மட்டுமே தெரிந்து வைத்துக் கொள்வது போல் ஒன்னே முக்கால் வரியில் விடை மட்டுமே உள்ளது, யாருக்கு எந்த விடை (குரல்) சாதகமாக இருக்கின்றதோ அதை மேற்கோள்காட்டி தன்னை அறிவாளியாக காட்டிக் கொள்கின்றார்கள்.
கடந்த 25 ஆண்டுகளாக என்னை முழுவதுமாக ஆய்வு பணியில் அர்ப்பணித்துக் கொண்டு வாழ்வியலை ஆய்வு செய்து பல ஆய்வு கட்டுரைகளை அறிவியலை மேற்கோள்காட்டி கணிதத்தை போல் படிப்படியாக புரியும் படி எழுதி இருக்கின்றேன். முன்னோர்கள் சொல்லி இருக்கும் கருத்தோடு என்னுடைய கருத்தை ஒப்பிட்டு தவறு என்று சொல்லாதீர்கள், நான் சொல்லி இருக்கின்ற படிநிலையில் எந்த படிநிலையில் தவறு இருக்கு என்று உங்களுக்கு தோணுகிறதோ அந்த இடத்தில் நின்று சிந்தித்து தெளிவு பெறுவது தான் சரி, விடையை மட்டும் ஒப்பிடுவது சரியல்ல.முன்னோர்கள் அவர்கள் வாழ்ந்த காலகட்டத்தில் எது சரி என்பதை சொல்லி இருக்கின்றார்களே தவிர அது இந்த காலகட்டத்திற்கு பொருந்துமா என்பதை கணிதத்தை போல் படிப்படியாக ஆராய்ந்தால் தான் தெரிய வரும்.
“ஏழாவது அறிவு” என்ற என்னுடைய ஆய்வு கட்டுரையின் படி நாம் எதைப் பார்க்கின்றோமோ, எதைக் கேட்கின்றோமோ, எதை உணர்கின்றோமோ, எதை படிக்கின்றோமோ,அது நம் அறிவாக நம் அனுமதியில்லாமல் நம்மை ஆள ஆரம்பித்து விடும் எனவே எதை அறிவுக்கு தெரியப்படுத்த வேண்டுமோ அதை மட்டும் தெரியப்படுத்துவது தான் ஏழாவது அறிவு.
https://www.vijayakumaran.in/kumar-vidhigal
நான் சுயமாக சிந்தித்து ஆய்வு கட்டுரைகள் எழுதுவதற்கு தேவையில்லாத எந்த குப்பையும் என் மூலையில் சேர்த்து வைத்துக் கொள்ளாதது தான் காரணம், மற்றவர்களுடன் ஒப்பிடும்போது என்னுடைய மூளையின் செயல் திறன் மிகக் குறைவு, தேவையில்லாத குப்பைகள் என் மூளையில் இல்லாததால் தான் சிந்திக்கும் திறன் மற்றவர்களை விட கொஞ்சம் கூடுதலாக இருக்கின்றது.
இன்று என்னுடைய அறுபதாவது பிறந்த நாளை முன்னிட்டு இந்த கட்டுரையை என்னுடைய வாசகர்களுக்கு பரிசாக கொடுக்கின்றேன், வாழ்த்துக்கள்.