12 October 2019
by
Vijayakumaran
பூமியில் பிறந்த அனைவரும் இறைவனின் (இயற்கையின் )அவதாரம்தான், ஒவ்வொருவரும் ஒரு அவதாரம்.எனவே இறைவன் முன் உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்று யாருமில்லை. அனைவரும் சமம் தான்.
என்னுடைய எழுத்தின் வலிமையை பலராலும் புரிந்து கொள்ள முடிவதில்லை, காரணம் நான் வேறு ஒரு அறிவு உலகத்திலும், படிக்கின்றவர்கள் வேறு ஒரு அறிவு உலகத்திலும் இருப்பதுதான். உலகமக்கள் அனைவரையும் புதிய அறிவு உலகத்திற்கு அழைத்துச் செல்வது தான் என்னுடைய எழுத்தின் நோக்கம்.
ஆன்மீகம் கடவுள் நம்பிக்கை என்ற ஆரம்ப நிலையிலிருந்து, புரிதல் என்ற அறிவியல் பாதையில் பயணிக்க வேண்டும், அப்போதுதான் ஆன்மிகத்தால் உலகிற்கு புதிய நீதியை சொல்லமுடியும். ஆன்மீகம் கடவுள் நம்பிக்கையாக மட்டுமில்லாமல், ஒட்டுமொத்த சமுதாயத்தின் புரிதலாக மாறவேண்டும், ஆன்மீகம் கடவுள் நம்பிக்கைக்கும், மதத்திற்கும், அப்பாற்பட்டது.
கடவுளை நம்புவதும், கடவுள் இல்லை என்று மறுப்பதும் சராசரி மனிதனின் இயல்பு நிலை. இந்த நிலையை கடந்ததுதான் ஆன்மீகம்.
ஆன்மீகம் கடவுள் நம்பிக்கையை சார்ந்தது மட்டுமல்ல, என்னுடைய செயல்கள் அனைத்தும் இறைவனுடைய செயல் தான் என்பதை அனுபவத்தால் புரிந்து, (நம்பிஅல்ல)இறைவன் பாதங்களைத் தழுவி “நின்னை சரணடைந்தேன்” என்று இறைவனின் அடிமையாக தன்னைத்தானே பிரகடனப் படுத்திக் கொள்வது தான் ஆன்மீகம்.
கடவுள் நம்பிக்கை சராசரி மனிதனின் துன்பத்திற்கான வடிகால். ஆன்மீகம் என்பது தன்நிலை உணருதல், தன் நிலையை உணர்ந்தவர்கள் தான் ஆன்மீகவாதிகள். உண்மையான ஆன்மீகவாதிகள் இடம் மத வேற்றுமை இருக்காது, அனைத்து கடவுள்களும், அனைத்து மதத்தவர்களும், அனைத்து உயிர்களும், சமமாக தான் தெரியும்.
ஆன்மீகத்தின் அடுத்த நிலைதான் ஞான நிலை. காரணமில்லாமல் காரியமில்லை. ஆன்மீகமும் அப்படிதான். ஆன்மீகம் என்பது காரியம். காரியத்தின் காரணத்தை புரிந்து கொள்ளுதல் தான் ஞான நிலை என்பதாகும்.எப்படி இந்த பூமியில் உயிர்கள் இயங்குகின்றது என்பதற்கான காரணத்தை புரிந்து, நான் நானல்ல என்ற நிலையை அடைவதுதான் “ஞானநிலை “.இந்த நிலையில் இருந்து நான் எழுதிய புத்தகம் தான் “உன் செயலுக்கு நீ காரணம் அல்ல. ..”என்ற புத்தகம்.
மழை நீரைப் போல் ஆன்மீகமும் புனிதமானது. மழைநீர் விழுகின்ற இடத்தை பொருத்து அதன் புனிதம் மாறுவது போல், சுயநலனுக்காக கடவுளை வைத்து பிழைக்கின்றவர்களும், மதவாதிகளும், அரசியல்வாதிகளும், ஆன்மீகத்தின் புனிதத்தை கெடுத்து விட்டார்கள்.உண்மையான ஆன்மீகவாதி யார் ஒருவரும் நாட்டை ஆள ஆசைப்பட மாட்டார்கள்.ஆனால் நம் நாட்டில் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதற்காகவே ஆன்மீக வேடம் போடுகின்றார்கள், இதற்கு காரணம் மக்களிடம் ஆன்மீகத்தைப் பற்றிய புரிதல் இல்லாததே.இவர்களிடமிருந்து ஆன்மிகத்தைப் மீட்டெடுக்க வேண்டும் என்றால் ஆன்மீகத்தைப் பற்றிய புரிதல் அனைத்து மத மக்களிடமும் ஏற்படவேண்டும். உண்மையான, புனிதமான, ஆன்மிகத்தால் மட்டுமே உலகில் சமத்துவத்தையும், சமாதானத்தையும், மதநல்லிணக்கத்தையும், மனிதநேயத்தையும்,ஏற்படுத்தமுடியும்.
in Spirituality