23 July 2020
by
Vijayakumaran
இல்லாத கடவுள் இருட்டினில் வழித்துணையாய் வந்ததுபோல், நான் என்ற உணர்வும் வாழ்க்கைப் பயணத்தில் வழித்துணையாய் வருகின்றது. இந்த இரண்டு வரிகள் தான் நான் எழுதியதில் எனக்கு மிகவும் பிடித்தவை.இதன் பாதிப்பில் நேற்றைய நிகழ்வை நான் பதிவிடுகின்றேன்.
“இல்லாத கடவுள் இருட்டினில் வழித்துணையாய் வந்ததுபோல் “ ஒரு வரிக்குள் ஆத்திகமும், நாத்திகமும் சேர்ந்து வருவது தான் இந்த வரியின் சிறப்பு.
அறிவியல் படி கடவுள் இல்லை என்றாலும் எந்தத்துணையும் இல்லாமல் இருட்டில் தனியாக பயணிக்கும் ஒருவனுக்கு அவன் வணங்கும் தெய்வமே (அவனை காக்கும் என்ற நம்பிக்கையே )அவனுக்கு துணையாக செல்கின்றது.
கடவுள் இல்லை என்றாலும், கடவுளை நம்பினால் நன்மையே என்ற உண்மையை மறுக்க எந்த நாத்திகனாலும் முடியாது.
அதுபோல் விதி உண்மை என்பதால் கடவுள் இல்லை என்பதை எந்த ஆத்திகனாலும் மறுக்க முடியாது.
கடவுளைப் போல் நான் என்ற உணர்வும் மாயை, நான் என்ற உணர்வு மாயை என்பதை ஒருவன் உணரும்போது ஆசைகளை முற்றும் துறந்தவனாக மாறிவிடுகின்றான், நான் என்ற உணர்வு இல்லை என்றால் வாழ்க்கையே இல்லை.
என்னுடைய 35 ஆண்டுகால நண்பர் M.கணேசன் அவர்கள் (ரவி எலக்ட்ரிகல்ஸ் உரிமையாளர் )23 /7/ 20 அன்று மாரடைப்பால் ராசிபுரத்தில் இறந்துவிட்டார், மதியம் ஒரு மணிக்கு தான் எனக்கு செய்தி கிடைத்தது, அவரின் இறுதி நிகழ்வில் கலந்து கொள்ள e. passவேண்டும் ஆனால் e pass வாங்க கால அவகாசம் இல்லை.மாலை 5 மணிக்கு இறுதி நிகழ்வு என்பதால் e pass வாங்குவது சாத்தியம் இல்லை. சென்னையில் காவல் துறையில் DSP யாக பணிபுரியும் நண்பரிடம் தொடர்புகொண்டு நண்பரின் இறுதி நிகழ்வுக்கு நான் ராசிபுரம் சென்றுவர உதவ முடியுமா என்று கேட்டேன், என்ன செய்ய வேண்டுமென்றார் வழியில் உள்ள சோதனைச் சாவடிகளிள் என்னை தடுத்து நிறுத்தினால் அவர்களிடம் நீங்கள் சிபாரிசு செய்ய முடியுமா என்று கேட்டேன், அதற்கு அவர் சம்மதித்தார்.DSP எனக்கு துணையாக இருப்பார் என்ற நம்பிக்கையில் நெய்வேலியில் மதியம் 2 மணிக்கு கிளம்பி ராசிபுரம் 5.30மணிக்கு சென்று குறித்த நேரத்தில் இறுதி நிகழ்வில் கலந்து கொண்டேன். வழியில் எந்த சோதனை சாவடிகளிலும் தடுத்து நிறுத்தாததால் DSP யின் சிபாரிசு எனக்குத் தேவைப்படவில்லை, இருப்பினும் DSP எனக்கு துணையாக இருப்பார் என்ற நம்பிக்கையே நான் ராசிபுரம் சென்றுவர உறுதுணையாக இருந்தது.
வீட்டுக்கு வந்ததும் காவல்துறை நண்பருக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்தேன், அதற்கு அவர் —-ஒன்றுமே செய்யாத எனக்கு எதற்கு நன்றி சொல்கிறீர்கள் என்று கேட்டார். நான் சொன்னேன் நீங்கள் கடவுள் மாதிரி என்று, அவருக்கு ஒன்றும் புரியவில்லை. இதைபடித்த உங்களுக்கு புரிந்திருக்கும்.
மனிதன் மற்றவர்களுக்கு உதவும் மனிதனாக வாழாவிட்டாலும், மற்றவர்களுக்கு நம்பிக்கை கொடுக்கக்கூடிய கடவுளாகவாவது வாழ வேண்டுமென்று.
ஒருவனுடைய கடவுள் நம்பிக்கையை ஆய்வின்படி தவறு என்று சொல்வது பகுத்தறிவு, ஆனால் ஒருவனுடைய கடவுள் நம்பிக்கையை தரம் தாழ்ந்து கொச்சைப் படுத்துவது தவறு. அது போல் கடவுளை நம்புவது தவறில்லை ஆனால் ஒரு சமுதாயத்தின் அறியாமையை பயன்படுத்தி கடவுளின் பெயரால் என்னுடைய மொழி தான் உயர்ந்தது, இதுதான் கடவுளின் மொழி என்பதும், ஆகமவிதி என்ற பெயரில் மொழிகளுக்கு இடையே, மனிதர்களுக்கு இடையே ஏற்றத்தாழ்வை ஏற்படுத்துவதும், கடவுளின் பெயரால் உழைக்காமல் மற்றவர்களின் உழைப்பை சுரண்டி வாழ்வதும் மிகப்பெரிய குற்றம். இதை பலநூறு ஆண்டுகளாக செய்து வந்த சமுதாயத்திற்கு கடவுள் இல்லை என்ற பகுத்தறிவு சிந்தனை இடையூறாக இருப்பதால்,இன்றும் அறியாமையில் இருக்கும் மக்களைப் பயன்படுத்தி மதவாத பிரிவினை அரசியலை செய்து, மக்களைத் தொடர்ந்து அடிமை படுத்தி வைத்திருப்பதே இவர்களின் திட்டம். இதை உணர்ந்து கடவுளைப் பற்றிய புரிதலோடு கடவுளை வணங்குவதில் எந்த தவறுமில்லை.
ஒரு சமுதாயத்தின் அறியாமையை பயன்படுத்தி கடவுளின் பெயரால் காணிக்கை பெறுவதும், கடவுளைப் பற்றிய கட்டுக்கதைகளை பரப்புவதும் குற்றம் என்று சட்டம் இயற்றாமல், கடவுளைப் பற்றிய கட்டுக்கதைகள் தவறு என்று சொன்னால் சொல்பவனை கைது செய்வது மிகப்பெரிய குற்றம்.
கடவுள் நம்பிக்கையால் அடிமைப்பட்டு இருந்த, இருக்கின்ற, சமுதாயத்தை மீட்டெடுக்க கடவுளைப் பற்றிய விழிப்புணர்வு தேவை என்பதே அரசின் நிலைப்பாடகவும், நீதித்துறையின் நீதியாகவும் இருந்தால் நன்று.
உண்மையான நண்பராக இருந்து, கடந்த 35 ஆண்டு காலமாக எனக்கு கடவுளைப் போல் உறுதுணையாக இருந்த இனிய நண்பர் M.கணேசனின் ஆத்மா சாந்தியடைய இயற்கையை வேண்டிக் கொள்கின்றேன்.
in Spirituality