20 September 2022
by
Vijayakumaran
அறிவாளிஇடம் நான் பெற்ற அறிவை விட அறிவு இல்லாதவர்களிடம் நான் பெற்ற அறிவே அதிகம், காரணம் அவர்களே என்னை சுற்றி அதிகம் இருக்கிறார்கள். அறிவு என்றால் என்ன, அறிவை எப்படிப் பெறமுடியும் என்பதை அறிவு இல்லாதவர்களிடம் இருந்து நான் பெற்று “புத்தகம் படிப்பதால் அறிவு வளராது “என்ற புத்தகத்தை எழுதி இருக்கின்றேன்.
மரத்திலிருந்து விழும் பல லட்சம் விதைகளில் ஏதோ ஒரு விதை மட்டும் மரமாக வளர்ந்து பல உயிர்களுக்கு பயன்படுவது போல் என்னுடைய எழுத்தை பல ஆயிரம் பேர் படித்தாலும் யாராவது ஒருவருக்கு என்னுடைய எழுத்து அறிவாக ஜீரணிக்காத என்று எதிர்பார்த்து நான் எழுதினாலும், மரத்தின் இலைகளும், கனிகளும், விதைகளும், மரத்திர்கே உரமாவது போல் நான் எழுதும் எழுத்துக்கள் மீண்டும் எனக்கு புதிய அறிவை அனுபவத்தால் கொடுக்கின்றன.
பெரும்பாலான புத்தகங்கள் வாசகர்களுக்கு அறிவை கடத்தாமல் எழுத்தாளரின் மொழி ஆளுமையை அதிகம் வெளிப்படுத்துவதால் இதுபோன்ற புத்தகங்களை அதிகம் படித்து பழகியவர்கள் என்னுடைய எழுத்தைப் படிக்கும் போது எழுத்து கடத்தும் அறிவைத் பெற முடியாமல் கடந்து சென்று விடுகின்றனர், நான் எழுதும் ஒவ்வொரு வரிக்கும் பல மணிநேரம் சிந்தித்து எழுதுவதால் வாசகர்களும் ஒரு வரியை படித்துவிட்டு பல மணிநேரம் சிந்தித்தால் மட்டுமே நான் பெற்ற அறிவு எழுத்தால் வாசகர் களுக்கு கடத்தப்படும். என்னுடைய எழுத்து ஆயிரத்தில் ஒருவரால் மட்டுமே புரிந்துகொள்ள முடிகின்றது எனவே புரியாதவர்களுக்கும் என்னுடைய எழுத்து நன்மை செய்ய வேண்டும் என்றால் நம்புங்கள், நம்பிக்கையும் புரிதலுக்கு இணையான நன்மையை கொடுக்கும்.
இந்த உலகத்தில் நாம் எப்படி இயக்கப்படுகின்றோம் என்பதை நாம் புரிந்து கொண்டால்தான் நாம் ஏன் பிறந்தோம், எதற்காக வாழ்கிறோம், வாழ்க்கை என்றால் என்ன, எப்படி வாழவேண்டும் என்ற பல கேள்விகளுக்கு நமக்கு பதில் கிடைக்கும். எனக்குள் எழுந்த இந்த கேள்விகளே நான் வாழ்வியலை ஆராயத் தூண்டியது.
நேற்றைய நிகழ்வுகள் தான் இன்றைய நிகழ்வுகளுக்கு காரணம், இன்றைய நிகழ்வுகள் தான் நாளைய நிகழ்வுகளுக்கும் காரணம் என்ற தொடர் வினை அறிவியல் தத்துவம் தான் இந்தப் பிரபஞ்சத்தையே இயக்குகின்றது. இதற்குப் பெயர்தான் விதி. விதி என்பதன் பொருள் எது நடக்குமோ அது நடந்தே தீரும் என்பது தான்.
நேற்றைய நிகழ்வை இன்று நம்மால் மாற்ற முடியாது என்பதால் நாளைய நிகழ்வையும் நம்மால் மாற்ற முடியாது. எனவே விதி என்பது மாற்றத்திற்கு உட்படாதது என்று பல ஆண்டுகளுக்கு முன்பே அறிவியலால் கண்டறிந்த உண்மை. ஆனால் மனிதனின் அறிவாலும் சிந்தனைத் திறனாலும் விதியை மதியால் மாற்றியமைக்க முடியும் என்று இன்றுவரை அறிவியல் ஆர்வலர்களும், கல்வியாளர்களும் நம்புகின்றனர்.
என்னுடைய ஆய்வின்படி ஒருவருடைய சிந்தனை இறந்த காலத்தின் தொடர்போடு தான் இருக்கின்றது என்பதையும், ஒருவர் பெரும் அறிவும் இறந்தகால தொடர்புடன், தொடர்வினை தத்துவத்தின்படி தான் பெறமுடியும் என்பதையும் நான் 12 ஆண்டுகளுக்கு முன்பே கண்டறிந்து “உன் செயலுக்கு நீ காரணம் அல்ல “என்ற புத்தகத்தை எழுதி இருக்கின்றேன். என்னை சுற்றியுள்ள ஊடகங்களும், வாசகர்களும் நான் பெற்ற அறிவை உலகுக்கு கடத்த முடியாததால்தான் உலகமக்கள் அனைவரும் விதியைப் பற்றிய புரிதல் இல்லாமல் உணர்வின் ஆளுமையால் வாழ்கின்றார்கள்.
என்னுடைய ஆய்வின்படி நம்முடைய சிந்தனை இறந்தகால தொடர்போடு இருப்பதால், எதை சிந்திக்க வேண்டும் என்பதை நாம் முடிவு செய்ய முடியாது தொடர்வினையே முடிவு செய்கின்றது. எனவே நாம் கல்லைப்போல், மண்ணைப் போல், மரத்தைப் போல் தொடர்வினை நம்மை இயக்கினால் தான் நாம் இயங்க முடியும்.
நம்முடைய பிறப்பு தொடர் வினையால் நடக்கின்றது,
நம்முடைய அறிவு அனுபவம் என்ற தொடர் வினையால் கிடைக்கின்றது,
நம்முடைய சிந்தனை அனுபவம் என்ற இறந்தகால தொடர்போடு கிடைக்கின்றது,
நம்முடைய இறப்பு பிறப்பின் தொடர் வினையால் நடக்கின்றது.
மனிதனின் சிறு அசைவும் தொடர் வினையால் நடத்தப்படுவதால் மண்ணும், மனிதனும் இயற்கையின் முன் ஒன்றுதான்.
பலரால் விதியை உண்மை என்று ஏற்றுக் கொள்ள முடியாததற்கு காரணம் அவர்கள் கேட்கும் ஒரே கேள்வி விதி உண்மை என்றால் நான் சும்மா இருந்தால் எனக்கு கிடைக்க வேண்டியது அனைத்தும் எனக்கு கிடைக்குமா என்பதுதான்.
கண்ணால் இந்த பிரபஞ்சத்தையே பார்க்க முடியுமென்றாலும் கண்ணால், கண்ணை பார்க்க முடியாது, கண்ணாடியால் தான் பார்க்க முடியும் என்பது போல், நான் என்ற உணர்வில் இருந்து விடுபட்டு அறிவால் நம்மை நாம் பார்க்க வேண்டும் அப்போதுதான் இயற்கை நம்மை எப்படி இயக்குகின்றது என்பது புரியும் அந்த நிலைக்கு நான் சென்று என்னை நான் பார்க்கும்போதுதான் மண்ணும், மரமும், நாயும், நானும் சமமாக எனக்கு தெரிந்தது.
விதி என்பது தொடர் வினையால் தான் உண்மையாகின்றது. தொடர்வினை இல்லாமல் விதி இல்லை. விதிப்படி நமக்கு கிடைக்க வேண்டியது அனைத்தும் நமக்கு கிடைக்க வேண்டுமென்றால் அதற்கான தொடர்வினை இருக்க வேண்டும். தொடர்வினை இல்லாமல் எந்த நிகழ்வும் நடக்காது.
முயற்சி செய்தால்தான் வெற்றி பெற முடியும்,
படித்தால்தான் தேர்ச்சி பெறமுடியும்,
உழைத்தால்தான் உயரமுடியும்,
நாம் எதைச் செய்கின்றோமோ அதுவே தொடர் வினையாக நம்மை வந்தடையும் இதுதான் விதி. நம்முடைய விதி நல்லவையாக இருக்க வேண்டும் என்றால் நம்முடைய செயல் நல்லவையாக இருக்க வேண்டும்.
நம்முடைய செயலுக்கான தொடர் வினையும், மற்றவர்களுடைய செயலுக்கான தொடர்வினையும், இயற்கையின் தொடர்பினையும் சேர்ந்துதான் நம்முடைய விதியாக அமைகின்றது.
நாம் செயல்படாமல், மற்றவர்களின் தொடர்வினையும், இயற்கையின் தொடர்பினையும் நமக்கு சாதகமாக இருந்தால் அதுதான் உழைக்காமல் வசதியாக வாழ்வதற்கான விதி.
நாம் சரியாக செயல்பட்டு, மற்றவர் சரியாக செயல்படாமல், இயற்கையும் நமக்கு சாதகமாக இல்லாமல் இருந்தால் அதுதான் விபத்துக்கான விதி.
நாம் சரியாக செயல்பட்டு, மற்றவரும் சரியாக செயல்பட்டு, இயற்கை நமக்கு சாதகமாக இல்லாமல் மழையாலும், காற்றாலும், பூகம்பத்தாலும், சுனாமியாலும் நம்மை தாக்கினால் அது தான் அழிவுக்கு விதி.
நம்முடைய செயலும், மற்றவர்களின் செயலும், இயற்கையின் செயலும், நம் கட்டுப்பாட்டில் இல்லை என்பதை உணர்ந்ததால்தான் நம் முன்னோர்கள் கடவுளிடம் மண்டியிட்டு இயற்கையை வணங்கினார்கள். தொடர்வினை தான் நம்முடைய செயலுக்கான எதிர்வினையை கொடுக்க பார்த்துக் கொண்டிருக்கின்றது என்ற புரிதல் இல்லாமல்,கடவுள் நம்மை பார்த்துக் கொண்டு இருக்கின்றார் என்பதை உணர்ந்து நேர்மையாக வாழ்ந்தார்கள்.
முன்னோர்கள் கடவுளாக பார்த்ததை நான் அறிவியலால் தொடர் வினையாக பார்க்கின்றேன்!
தொடர்வினை தான் நம்மை இயக்கும் கடவுள் என்று நான் புரிந்து கொண்டதால் அனைத்து மத கடவுளும் எனக்கு சமமாக தான் தெரிகின்றது.
அணுவின் அசைவு முதல் நம்முடைய ஒவ்வொரு செயலையும் (கடவுள் )தொடர்வினை பார்த்துக் கொண்டே இருக்கின்றது எதிர்வினைகாக.
நாம் செய்யும் தவற்றை யாரும் பார்க்கவில்லை என்றாலும், தொடர்வினை பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றது எதிர்வினைகாக, இதிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது.
அறிவியல் அறிவு இல்லாத காலத்தில் தொடர்வினையை கடவுளாக மனிதன் பார்த்ததால் குற்றம் குறைவாக இருந்தன.
அனைவருக்கும் கல்வி கிடைத்த இந்த காலத்தில் அறிவியலையும் புரிந்து கொள்ள முடியாமல், கடவுளையும் நம்ப முடியாமல் மனம் போன போக்கில் மனிதன் போவதுதான் குற்றங்கள் பெருகுவதற்கு காரணம்.
விதி என்பது தொடர்வினையின் உறுதித்தன்மை என்பதை புரிந்து கொண்டால் காவல்துறைக்கும், நீதித்துறைக்கும், ராணுவத்திற்கும் செலவு செய்யும் தொகையில் பல லட்சம் ரூபாய் அரசுக்கு மிச்சமாகும். இயற்கையின் நீதியை புரிந்து கொள்ளாத மனிதனின் நீதி தவறான நீதியாக தான் இருக்கும். நீதி மாற வேண்டுமென்றால் சமுதாயத்தில் அறிவு வளர வேண்டும்.
in Spirituality