புத்தர், காந்தி, பெரியார், போன்ற பல மாமனிதர்களின் வெற்றிடங்கள் பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் இருக்கும் நிலையில் மக்களின் வரி பணத்தை கொள்ளை அடித்து பதவி சுகத்தை அனுபவித்த அரசியல் தலைவர் மறைந்த பிறகு, அந்த இடத்தை நிரப்ப துடிக்கும் பதவி வெறியர்களால் மக்களுக்கு எப்படி நல்லாட்சி கொடுக்க முடியும். வெற்றிடத்தை நிரப்ப நினைப்பவர்கள் நிச்சயம் அவர்களை போல் தான் இவர்களும் இருப்பார்கள்.
ஜனநாயக நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் மக்களைப் போல் தான் இருப்பார்கள்.
மக்கள் பணம் வாங்கிக்கொண்டு வாக்களித்தால், ஊழல் செய்பவன் தான் நாட்டை ஆள்வான்.
மக்கள் மதத்தை பார்த்து வாக்களித்தால் மத பிரிவினைவாதி தான் நாட்டை ஆள்வான்.
மக்கள் சாதி பார்த்து வாக்களித்தால் சாதி வெறியன் தான் நாட்டை ஆள்வான்.
மக்கள் திரைப்படத்தை உண்மை என்று நம்பி வாக்களித்தால் நடிகன் தான் நாட்டை ஆள்வான்.
எனவே மக்களிடம் மாற்றம் இல்லாமல் யார் ஆட்சிக்கு வந்தாலும் நாட்டில் நல்லாட்சி அமையாது.
மக்களுக்கு நல்ல சிந்தனையையும், நல்லஅறிவையும், ஒழுக்கத்தையும், கொடுத்தாலே போதும் நல்லவர்கள் நாட்டை ஆள்வார்கள்.
புத்தர், காந்தி, பெரியாரை போன்ற பல மாமனிதர்கள் மக்களுக்கு நல்ல அறிவையும், ஒழுக்கத்தையும், கொடுத்தார்கள் அதனால் அன்று நல்லவர்களை மக்கள் தேர்ந்தெடுத்தார்கள்.
காந்தியும், பெரியாரும் நாட்டை ஆள வில்லை என்றாலும் அவருடைய கொள்கைகள் நாட்டை ஆண்டன.அவர்களின் மறைவுக்கு பிறகு அவர்களின் வெற்றிடத்தை யாரும் இதுவரை நிரப்பவில்லை, அதற்கு யாரிடமும் போட்டியும் இல்லை, பதவியை விரும்பாமல் மக்களை வழி நடத்தும் தலைவர்கள் இல்லாததே இன்றைய ஜனநாயக சீர்கேட்டுக்கு காரணம்.
ஒரு நடிகையின் வெற்றிடத்தை நிரப்ப, நடிகர்களுக்கு இருக்கும் போட்டிக்கு மாற்றாக சமுதாயத்தை வழிநடத்திய மாமனிதர்களின் வெற்றிடத்தை நிரப்புவதில் தலைவர்களுக்கு இடையே போட்டி ஏற்பட்டால் தான் ஜனநாயக நாட்டில் நல்லாட்சி மலரும்.
உண்மையான மக்கள் தலைவர்களுக்கு தன்னுடைய கருத்து நாட்டை ஆண்டால் போதும் தான் ஆண்டதாக எண்ணி மகிழ்வார்கள்.
உண்மையான மக்கள் தலைவர்கள் அதிகாரத்தை ஒருபோதும் விரும்பியதில்லை, அதனால்தான் அவர்கள் மறைந்தும், மறையாமல் இருக்கின்றார்கள்.
நல்லவர்களின் வெற்றிடத்தை நிரப்ப முயற்சி செய்வோம்,
அல்லது முயற்சி செய்பவர்களுக்கு ஆதரவு கொடுப்போம்.