23 December 2019
by
Vijayakumaran
கலவரங்களை மக்கள் செய்தாலும் அதை உருவாக்குபவர்கள் ஆட்சி செய்பவர்களும், ஆட்சிக்கு வரநினைப்பவர்களும்தான். கலவரம் மனித சமுதாயத்திற்கு புதியது அல்ல பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பதவி வெறி பிடித்தவர்கள் மக்களைப் பிரித்தாளவேண்டும் என்பதற்காகவே சாதி, மதம், மொழி, இனம், பொருளாதாரம் ஆகியவற்றால் மக்களிடையே வேற்றுமை வெறுப்பை ஏற்படுத்தி கலவரங்கள் மூலம் ஆட்சியைப் பிடிப்பது என்பது ஒருவித குறுக்குவழி, இந்த குறுக்கு வழியை பிஜேபி கட்சி பயன்படுத்தி பிரிவினையின் மூலம் கலவரங்களை ஏற்படுத்தி தான் ஆட்சிக்கு வந்தது. பிஜேபி பயன்படுத்திய அதே குறுக்கு வழியை பயன்படுத்தி கலவரங்கள் மூலம் பிஜேபி அரசை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்பதற்காகவே எதிர்க்கட்சிகள் தற்போது கலவரங்களில் ஈடுபட்டு வருகின்றன. அமைதி போராட்டம் ஜனநாயக உரிமை, ஆனால் கலவரம் ஜனநாயகத்துக்கும், மக்களுக்கும் எதிரானது.
மனிதர்களுக்கு இடையே சாதி, மதம், மொழி, இனம், பொருளாதார வேறுபாடு இருப்பது இயற்கை, இதை சமன் செய்ய முடியாது. இரண்டு வேற்றுமையை சமன் செய்தால் புதிதாக மூன்றாவது ஒரு வேற்றுமை உருவாகும்.
ஒரே சாதி, ஒரே மதம், ஒரே மொழி, ஒரே இனம், என்று அனைவரையும் ஒன்றிணைக்கப்போகின்றோம் என்பது தேச ஒற்றுமையின் வெளிப்பாடு அல்ல. சிறுபான்மை சாதி, மதம், மொழி, இன மக்களை பொருளாதாரத்தால் அழித்துவிட்டு பெரும்பான்மை மக்கள் மட்டும் இந்த நாட்டில் வாழ வேண்டும் என்ற சூழ்ச்சியே பிஜேபியின் ஒற்றைக் கலாச்சார ஆட்சி முறை.
மனித சமுதாயம் அமைதியாக வாழ வேண்டுமென்றால் வேற்றுமையை வெறுப்பாக பார்க்காமல் இது இயற்கை என்ற புரிதலோடு ஒற்றுமையாக சகமனிதர்களிடம் பழகினால் மட்டுமே இந்த பூமியில் மனிதன் வாழ முடியும்.
ஒற்றுமை வலுபெற முதலில் தனி ஒருவன் நாம் என்ற ஒற்றுமை உணர்வோடு குடும்பமாக வாழ வேண்டும்.
அடுத்து அனைத்து குடும்பமும் ஊர் ஒற்றுமையுடனும், சாதி ஒற்றுமையுடனும் வாழ வேண்டும்.
அடுத்து அனைத்து ஊரும், சாதி, மத, மொழி ஒற்றுமையுடனும், மாநில ஒற்றுமையுடனும் வாழ வேண்டும்.
அடுத்து அனைத்து மாநிலமும் நாட்டு ஒற்றுமையுடன் வாழவேண்டும்.
அடுத்து அனைத்து நாடுகளும் மனித நேயத்தோடு வாழ வேண்டும்.
இதற்கு மாறாக மனிதநேயம் இல்லாமல் வேற்றுமையின் வெறுப்பால் ஒருவன் வாழ ஆரம்பித்தால், மற்றவர்களை எதிரியாக பார்க்க ஆரம்பித்து அனைவரையும் அழித்து அவன் மட்டும் அனாதையாக இந்த உலகில் வாழ்வது தான் அவனுக்கு விதியாக முடியும். எதிரியே இல்லாமல் தனியாக வாழ்வது வெற்றியல்ல, நாட்டு மக்களோடு வேற்றுமையில் ஒற்றுமையாக வாழ்வ்தே வாழ்க்கை.
வேற்றுமையில் ஒற்றுமை யோடு வாழ்ந்தால் உலகம் நம் கையில், ஒருமையில் வேற்றுமை வெறுப்போடு வாழ்ந்தால் நாம் அனாதை தான்.
சாதியும், மதமும் ஒழிக்க கூடியது அல்ல. சாதியும், மதமும் இனத்தின் அடையாளம். இனங்களின் அடையாளத்தை அழிப்பதால் மனிதர்களிடம் ஒற்றுமை ஏற்படாது. ஒரு அடையாளம் மறைந்தால் வேறு ஒரு அடையாளம் தோன்றிவிடும். சாதியும் மதமும் ஒழிய வேண்டும் என்று சொல்வது முற்போக்குச் சிந்தனையும் அல்ல, பகுத்தறிவும் அல்ல. அது பகட்டறிவு.
தன்னை சாதி, மத வேற்றுமை பார்க்காதவன் என்பதை உலகம் நம்ப வேண்டும் என்பதற்காகவே சாதியும், மதமும் ஒழிய வேண்டும் என்று சொல்லி பலரும் பகட்டாக நடந்து கொள்கின்றார்கள். அதுபோல் பெண்பிள்ளைகளுக்கு பொருளாதாரத்தில் முன்னுரிமை கொடுத்து பெற்றோர்கள் தன் கடமையாக திருமணத்தின்போது வரதட்சணை கொடுப்பது என்பது பல ஆயிரம் ஆண்டுகளாக இருக்கின்றது. இந்த நடைமுறையை முற்போக்குவாதிகளும், பகுத்தறிவாளர்களும் கேலியும், கிண்டலும் செய்து கொடுப்பவருக்கும் வாங்குபவருக்கும் இடையே குற்ற உணர்வை ஏற்படுத்தி விட்டு, பெண்களுக்கு சொத்தில் சம பங்கு உண்டு என்று சட்டம் இயற்றி சட்டத்தின் மூலம் பெண்ணை திருமணம் செய்து கொள்பவன் செல்வத்தைப் பெறுவது என்பது பெண்ணின் உரிமையாக போற்றப்படுகின்றது. படுத்துக்கொண்டு போத்திக்கொள்வதும், போத்திக்கொண்டு படுத்துக்கொள்வதும் அவரவர் விருப்பம். இதில் என்ன முற்போக்கு சிந்தனை இருக்கு என்று புரியவில்லை. வரதட்சணையை தவறு என்று சொல்லி குடும்பத்துக்குள்ளேயே வெறுப்பை ஏற்படுத்திய சுயநல அரசியல் தலைவர்களால், சாதிகளுக்கு இடையே, மதங்களுக்கு இடையே, வெறுப்பை ஏற்படுத்துவது என்பது மிக எளியது என்பதை மக்கள் புரிந்து அரசியல் கட்சிகளால் இனங்களுக்கு இடையே ஏற்படுத்தப்பட்ட வெறுப்புணர்வில் இருந்து விடுபட்டால் மட்டும்தான் இந்த பூமியில் மக்கள் ஒற்றுமையாக வாழ முடியும்.இதை அனைவரும் புரிந்து கொண்டு, சாதி, மத பிரிவினையை மையமாக வைத்து அரசியல் செய்யும் கட்சிகளை விரட்டி அடிப்போம் !
வேற்றுமையில் ஒற்றுமை காண்போம்!!
in Politics