தமிழ் வாழ்க என்று சொல்லும் அரசியல் தலைவர்களும், தமிழ் ஆர்வலர்களும், இதுவரை அதற்கான முயற்சியை செய்து இருக்கின்றார்களா என்று ஆராய்ந்தால் இல்லை என்ற பதில்தான் கிடைக்கும்.
நம்முடைய இலக்கு தமிழ் மொழியும், இந்தி மொழியைப்போல் தேசிய அலுவல் மொழிக்கான அங்கீகாரத்தை பெற வேண்டும் என்பதுதான். இந்த அங்கீகாரம் நம் மொழிக்கு கிடைத்தால் மட்டுமே நம் மொழி நமக்கு பயனுள்ள மொழியாக இருக்கும்.
தற்போதுள்ள மொழிக் கொள்கையின் படி, இந்தியைத் தவிர அனைத்து மாநில மொழிகளும் பயனில்லாத மொழிகள் தான். இந்த நிலையில் தமிழ்வழிக் கல்வியும், வேற்றுமொழி கலக்காமல் தமிழில் மக்கள் அனைவரும் பேசினால் தான் தமிழ் வளரும் என்று சொல்பவர்கள், மக்களை ஏமாற்ற சொல்கின்றார்கள், அல்லது அவர்களின் புரிதல் இல்லாமையையே இது தெளிவுபடுத்துகின்றது.
பயன்படாத மொழியை படிக்க வேண்டும் என்று மக்களிடம் சொல்வதை அரசியல் தலைவர்களும், மொழி ஆர்வலர்களும் நிறுத்திவிட்டு தமிழ் மொழி, இந்திக்கு நிகரான இந்தியாவின் அலுவல் மொழி என்ற அங்கீகாரத்தைப் பெற்றுக் கொடுத்தால், மொழியின் தேவையால் அனைவரும் விரும்பி தமிழைப் படிப்பார்கள் தமிழும் வளரும், தமிழனும் வளர்வான்.
பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இருந்தால் மட்டுமே அரசியல் அமைப்பு சட்டத்தை மாற்ற முடியும்.தமிழகத்தைச் சேர்ந்த 39 எம்பிக்கள் மட்டும் ஒத்த குரலில் “தமிழ் வாழ்க “என்று சொல்வதால் மட்டுமே பாராளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெற முடியாது.
அண்ணாவும், கருணாநிதியும், ”தமிழ் வாழ்க “என்று சொன்னது மாநில அரசியலுக்கு உதவியது போல், நேற்றைய தமிழ் வாழ்க என்ற முழக்கம் மாநில அரசியலுக்கு உதவுமே தவிர, ஒருபோதும் பாராளுமன்றத்தில் மொழி உரிமையை பெற்றுத் தராது.
“தமிழ் வாழ்க “ என்பதற்கு பதில் “அனைத்து மாநில மொழிகளும் வாழ்க “ என்று முழக்கம் கொடுத்திருந்தால், கட்சி பாகுபாடு இன்றி அனைத்து மாநில எம் பி களும் ஆதரவு கொடுத்து இருப்பார்கள்.
“தமிழ் வாழ்க”. என்று சொல்லி இனியும் மாநில அரசியல் செய்யாமல், உண்மையிலேயே, திமுக தமிழக மக்களுக்கு மொழி சுதந்திரம் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று எண்ணினால், ”அனைத்து மாநில மொழிகளும் வாழ்க” என்ற முழக்கத்தை பாராளுமன்றத்தில் முன் வைத்து அனைத்து மாநில மொழி உணர்வாளர்களையும் கட்சி பாகுபாடு இன்றி ஒன்று திரட்டினால் மட்டுமே, பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தோடு அனைத்து மாநில மொழிகளையும் இந்திக்கு நிகரான தேசிய அலுவல் மொழியாக சட்டத்திருத்தம் கொண்டு வர முடியும்.
”தமிழ் வாழ்க “ என்று சொல்லி பதவியை சுவைத்த திமுக, இதை செய்ய தவறினால் காலம் இவர்களை மன்னிக்காது !