11 September 2021
by
Vijayakumaran
“உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்,
அச்சமில்லை !அச்சமில்லை !அச்சமென்பதில்லையே !!“ என்று வீர முழக்கத்தை நமக்கு அறிவாக கொடுத்துச் சென்ற புரட்சிக்கவி பாரதி நம் மனதில் நீங்கா இடம் பிடித்து இருப்பதற்கு காரணம் இன்றளவும் அவருடைய புரட்சி இந்த தமிழ் சமுதாயத்திற்கு தேவைப்படுவதாலேயே!
பாரதி கவிதை மட்டும் எழுதி இருந்தால் அவர் மறைந்தபொழுதிலேயே மக்கள் பாரதியை மறந்திருப்பார்கள், ஆனால் பாரதி பெண் விடுதலைக்காகவும், சாதி சமத்துவத்திற்காகவும், தமிழ் மொழிக்காகவும் களத்தில் இறங்கி சமரசமில்லாமல் புரட்சி செய்ததாலேயே இன்றளவும் தமிழர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளார் புரட்சிக்கவி பாரதி,
வாழ்க பாரதியின் புகழ்!
ஐயா சாலமன் பாப்பையா அவர்களின் நேர்காணலில் 6 முதல் 10 நிமிடம் வரை உள்ள மொழியைப் பற்றிய அவருடைய கருத்தை கேட்டு விட்டு தொடர்ந்து படிக்கவும்.
https://youtu.be/7-wo_ISsTLg
அறிவைப் பற்றிய என்னுடைய ஆய்வுக்கு வலு சேர்க்கும் வகையில் புத்தகம் படிப்பதால் மட்டும் ஒருவர் அறிவைப் பெற முடியாது என்பதற்கு ஐயா சாலமன் பாப்பையா அவர்களின் நேர்காணலே சாட்சியாக உள்ளது.
புரட்சிக்கவி பாரதியை பற்றி இந்த உலகில் அதிகம் படித்தவர்களில் அய்யா சாலமன் பாப்பையா அவர்களும் ஒருவர் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது, ஆனால் பாரதியின் எழுத்தின் மூலம் பாரதியின் அறிவை அய்யா பெற்று இருக்கின்றார என்றால் இல்லை என்றே தோன்றுகின்றது. காரணம் ஒரு புரட்சியாளர் எப்படி இருக்க வேண்டும் என்பதை புரட்சி கவி பாரதி எழுதிய “”உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும், அச்சமில்லை !அச்சமில்லை !அச்சமென்பது இல்லையே !!“என்ற எழுத்தை படித்ததும் தன்னுடைய அறிவாக படித்ததை மாற்றிக் கொண்டால் தான் படித்த பலனை படித்தவர் பெற்றதாக பொருள். ஆனால் ஐயா அவர்களின் மொழியை பற்றிய கருத்து பாரதியின் புரட்சி உணர்வை பெற்றதாக தெரியவில்லை.
ஒரு கோழை அடிமையாக இருப்பதால் அவனைத் தவிர வேறு யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை, ஆனால் ஒரு புரட்சியாளர், வீரன் பகைவர்களை எதிர்த்து பத்து பேருடன் பதினொன்றாக நின்று போராடும் போது எதிரி இடம் அடிமையாகி விடுவதே சிறந்தது என்று முடிவெடுத்து அடிமையாகி விட்டால், அவர் எடுத்த முடிவு மீதம் உள்ளவர்களையும் அடிமையாக்கி விடும்.அது இந்த மொழி விடுதலையையே பாதிக்கும். எனவே ஐயா சாலமன் பாப்பையா பாரதியைப் பற்றி அதிகம் படித்திருந்தாலும் பாரதியின் அறிவு ஐயா அவர்களால் இந்த சமுதாயத்திற்கு பயன்படவில்லை.
அதிகம் படித்தவர்களை அறிவாளி என்று பாமரன் நம்புகிறான் அதை மெய்ப்பிக்க வேண்டியது படித்தவர்களில் கடமை. மொழி உரிமைக்கும் மொழி பயன்பாட்டுக்கும் உள்ள வேறுபாட்டே தெரியாமல் படித்தவர்கள் பேசுவது வேதனையாக உள்ளது.
அரசியலமைப்பு சட்டத்தில் அனைத்து மாநில மொழிகளுக்கும் இந்தி மொழியைப் போல் தேசிய அலுவல் மொழி அங்கீகாரம் வேண்டும் என்பதே நம்முடைய மொழி உரிமை போராட்டம். ஆனால் இந்தியை ஆதரிக்கும் அடிமைகள் சொல்வது இந்தி படித்தால் அதனால் ஏற்படும் நன்மைகளைப் பற்றி.
இந்தி தேசிய அலுவல் மொழியாக இருப்பதால்தான் இந்தியை படித்தால் நன்மை ! நம்முடைய மாநில மொழியும் இந்திக்கு நிகராக தேசிய அலுவல் மொழியாக அங்கீகரிக்கப்பட்டால் நான் ஏன் இந்தி படிக்க வேண்டும்?
MGR பாடியது போல் ஒருவனுக்குள் ஏன் என்ற கேள்வி எழுந்தால் தான் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெறமுடியும், வெற்றி பெற முடியும்.
ஏன் நம்மை அந்நியர்கள் ஆளவேண்டும் என்ற கேள்வி எழுந்ததால் தான் சுதந்திரம் பெற்றோம். ஏன் பிறப்பால் தாழ்த்தப்பட்டவர்கள் அடிமைகளாக இருக்க வேண்டும் என்று கேள்வி அம்பேத்கரிடம் ஏற்பட்டதால்தான் அனைவரும் சமம் என்ற சமத்துவம் உருவாக்கியது.
அடிமை சங்கிலியை உடைக்கும் வல்லமை படைத்தவர்கள் இடம்தான் ஏன் என்ற கேள்வி உருவாகும் அடிமையாகவே வாழப் பழகிவிட்ட அடிமைகளிடம் ஏன் என்று கேள்வி எழாது மாறாக அடிமையாக வாழ்வது நன்மையா, தீமையா, என்று தான் ஆராய்ய தோன்றும், அடிமையாக வாழ்வதில் நன்மை என்றால் ! தான் அடிமை என்பதை மறந்து அடிமையாகவே இருப்பதையே விரும்புவார்கள் அடிமைகள்.
இந்தியாவில் பல மாநில மொழிகள் இருக்க இந்தியாவின் ஒரு மாநில மொழியை இந்தியாவின் அலுவல் மொழியாக நான் ஏன் படிக்க வேண்டும் என்ற கேள்வியை ஒருவன் கேட்டால் அவர் தான் மொழி விடுதலையின் புரட்சியாளர்.
இந்தி படித்தால் நன்மையா, தீமையா என்ற விவாதம் செய்தால் அவர் அடிமை என்று பொருள்.
அடிமை சுயநலமாக வாழத் தெரிந்தவன் !
புரட்சியாளர்கள் வாழ கற்றுக் கொடுப்பவர்கள் !!
சமாத்தியமாக வாழவேண்டும் என்பது அடிமையின் இயல்பு,
தன் உயிரை இழந்தாலும் வெற்றி பெற வேண்டும் என்று எண்ணுவது புரட்சியாளர்களில் இயல்பு, அதனால்தான் பல உயிர்களை இழந்து இந்தியா சுதந்திரம் பெற்று உள்ளது. நம் முன்னோர்கள் உயிர் தியாகம் செய்து பெற்ற சுதந்திரத்தால் தான் நாம் இன்று சுதந்திரமாக வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம்.அதைத்தொடர்ந்து மொழி சுதந்திரத்திற்காக இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தமிழகம் பல உயிர்களை இழந்து இந்தியைப் போல் அனைத்து மாநில மொழிகளுக்கும் தேசிய அலுவல் மொழி அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்று போராடுகிறது. இந்தப் புரிதல் இல்லாமல் இந்தி வேண்டுமா, வேண்டாமா என்று அய்யா சாலமன் பாப்பையா அவர்கள் விவாதிப்பது வேதனையாக உள்ளது.
வடமாநில பிள்ளைகள் இந்தியிலும், ஆங்கிலத்திலும் சரளமாக பேசுகின்றார்கள் என்று அவர்களை உயர்த்தி பேசிவிட்டு நம் பிள்ளைகள் தமிழ் கூட சரியாக பேசவில்லை என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து விட்டு, இரண்டு மொழியிலேயே சரியாக படிக்காத நம் பிள்ளைகளுக்கு மூன்றாவதாக தேவையில்லாத ஹிந்தியை கட்டாயமாக படிக்கவேண்டும் என்று சொல்வது முரண்பாடாக உள்ளது.
அனைத்து மாநில மொழிக்கும் பொது மொழியாக தேசிய அலுவல் மொழியாக ஆங்கிலம் மட்டுமே இருக்க வேண்டும் என்று இருமொழிக் கொள்கையை வலியுறுத்தி இந்தி எதிர்ப்புப் போராட்டம் செய்து தன் உயிரையே விட்ட பலநூறு புரட்சியாளர்களின் மொழி உரிமை விடுதலைப்போராட்டத்தை புரிதல் இல்லாமல் தவறு என்று அய்யா பாப்பையா அவர்கள் கருத்து தெரிவித்திருப்பது ஒரு அடிமையின் கருத்தாகவே தெரிகின்றது.
வாழ்க தமிழ் !
வாழ்க புரட்சிக்கவி பாரதியின் புரட்சி !!
in Politics