வாக்கு என்பது ஜனநாயகம் நமக்கு கொடுத்திருக்கும் உரிமை, இந்த வாக்குரிமையை நாம் சரியாகப் பயன்படுத்த வேண்டும் என்பது நமது கடமை. நம்முடைய கடமையை சரியாக செய்தால் மட்டும் தான் நாமும், நம் நாடும் முன்னேறமுடியும்.
ஜனநாயகம் நமக்கு பல ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள வாக்குரிமையை அனைவர் கையிலும் கொடுத்துள்ளது, அதை நாம் பயனுள்ள வகையில் செலவு செய்தால் மட்டும் தான் சிறப்பாக வாழ முடியும். அரசியல் முக்கியத்துவம் தெரிந்தவர்கள் அவர்களுடைய விலைமதிப்பில்லா வாக்குரிமையை சரியாக பயன்படுத்துகிறார்கள்,
அரசியல் முக்கியத்துவம் தெரியாத அரசியல் அறிவு இல்லாத பல படித்தவர்கள் வாக்கை பயன்படுத்துவதே இல்லை,
பலர் சாதி பிரிவினைவாதிகளையும்,மதப் பிரிவினைவாதிகளையும் நம்பி, தலைவர்களின் பேச்சை நம்பி தவறானவர்களுக்கு தவறாக வாக்களித்து விடுகின்றார்கள்.
அரசியல் தெரியாத ஏழை மக்கள் தன் கையில் இருக்கும் வாக்குரிமையின் மதிப்புத் தெரியாமல் பணம் கொடுப்பவர்களுக்கு விற்று விடுகின்றார்கள்.
பணத்திற்கு வாக்கை விற்பது சரியா ?தவறா ?குற்றமா ?என்றால், ஜனநாயகப்படி சரி என்று சொல்வதற்கோ,தவறு என்று சொல்வதற்கோ,குற்றம் என்று சொல்வதற்கோ யாருக்கும் உரிமை இல்லை. காரணம் வாக்காளர் தனக்கான வாக்குரிமையை எதற்காகவும் பயன்படுத்தலாம், பயன்படுத்தாமலும் இருக்கலாம் என்பதுதான் ஜனநாயகத்தின் சிறப்பு. வாக்காளரின் செயலை யார் விமர்சித்தாலும் அது ஜனநாயக உரிமைக்கு எதிரானது.
வாக்குக்கு பணம் வாங்குவது வாக்காளரின் தனிப்பட்ட உரிமை !
வாக்குக்கு வேட்பாளர் பணம் கொடுப்பது ஜனநாயக படுகொலை !
அரசியல் முக்கியத்துவமும், அரசியல் புரிதலும் இல்லாததால் தான் 50% மக்கள் தங்கள் வாக்கை சரியாக பயன்படுத்துவதில்லை, அரசியல் புரிதலுக்கு நான் எழுதிய “என் பார்வையில் அரசியல் “என்ற கட்டுரையை படித்து பயன்பெறுங்கள்.